Thursday, May 19, 2016

திருப்பாவை - பகுதி 2


திருப்பாவை  - பகுதி 2

(11)
கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து
 செற்றார் திறலழிய சென்றுசெருச் செய்யும்
 குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே போதராய்!
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
 முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
 சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
 எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!

கன்று கறவை -கன்றாகிய பசுக்களினுடைய  பல கணங்கள்  பல திரள்களை
 கறந்து கறப்பவர்களும் சத்துருக்களினுடைய திறல் அழிய சென்று (தாமே படையெடுத்துச்)சென்று போர் செய்யுமவர்களும் ஒருவகைக் குற்றமும் அற்றவர்களுமான கோபாலர்களுடைய (குடியிற் பிறந்த) பொன் கொடியே
 செல்வமுள்ள பெண் பிள்ளாய்! (எழுந்து) வருவாயாக.

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து உனது (திருமாளிகையின்) முற்றத் தேறப் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட (பேருறக்கமுடைய) நீ சலியாமலும்
 (ஒன்றும்) பேசாமலும் உறங்குவது என்ன பிரயோஜனத்திற்காகவோ? (அறியோம்)

(12)
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
 நினைத்து முலைவழியே நின்று பால்சோர
 நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
 சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
 மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
 அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்!

(13)
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
 கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
 பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
 வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
 புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
 பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
 கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்!
புள் = பறவை
புள்ளின்வாய் கீண்டான் =  கொக்கு வடிவம் எடுத்த பகாசுரனைக் கொன்றவன் (கிருஷ்ணன்)
பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தான் = பொல்லாத ராவணனைக் கொன்ற இராமன்
சிலர் இப்படியும் கூற்கின்றனர்:
புள் என்னும் பட்சியாகிய ஜடாயுவை கொன்றான் ராவணன். அந்த பொல்லா அரக்கனைக் கொன்றவன் ராமன்
இப்படி ராமர் கிருஷ்ணன் இவர்களது கீர்த்தியைப் பாடிக்கொண்டே பெண்கள்
நோன்பு நோற்க போய்விட்டார்கள்.
வெள்ளீ (சுக்கிரன்) உதயமானான். வியாழன் (குரு கிரகம்) அஸ்தமித்தான்
பறவைகளும் இரைதேடி ஆரவாரம் செய்தன.
நீயும் குளிரக் குடைந்து நீராடாதே படுக்கையிற் கிடந்துறங்குகிறாயோ?
அல்லது நடிக்கிறாயோ? கபடம் விட்டு உடனே வா
(14)
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
 செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
 செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
 தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
 எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
 நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
 சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
 பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!
செங்கல் பொடிக்கூறை = காவி ஆடை

(15)
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்
 வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
 வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
 எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
 வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க
 வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!

வல்-ஆனை  என்று குவலயாபீடம் என்னும் யானையை கொன்றான். கம்சன் முதலான அரக்கர்களை அவர்கள் அரக்க குணம் கெட அழிக்க வல்லவனான மாயக்கண்ணனை பாட வாராய் என்று அழைக்க அவளும் இவர்களோடு சேர்ந்து கொள்கிறாள்
(16)
நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
 கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
 வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
 மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
 தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
 வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!

ஆண்டாள் வாயில் காப்போனுக்கு பதில் சொல்கிறாள். ‘ நாங்கள் ஆயர் சிறுமியரோம். நாங்கள் எங்கள் பாவை நோன்புக்கு பறை போன்ற சாதனங்களைப் பெற்றுப் போகவே வந்தோம். அவற்றைத் தருவதாக அந்த மாயன் மணிவண்ணனே, எங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறான். அதன் பொருட்டு, அவனிடம் அவற்றைப் பெற்றுபோக, தூய்மையான மனத்தினராய் வந்தோம்" என்கிறாள்.
ஆனாலும் சந்தேகம் இருக்கிறது என்று காவலாளிகள் தர்ம சங்கடத்தில் தவிக்க, இவர்கள், ‘வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே ஸ்வாமி(அம்மா!) ’ என்று
எங்களை இதற்கு மேலும் சோதிக்காதீர்கள் என்று பதறுகிறார்கள்.கதறுகிறார்கள்.
கதவு திறக்கச் சொல்கிறார்கள்.
ஈஸ்வரன் இருக்கும் இந்த மாளிகையில், அக்றிணைப் பொருட்கள் கூட அவனுக்கு அனுகூலமாக இருக்கின்றன. இந்த கதவு இருக்கிறதே, வெளியே க்ருஷ்ண விரோதிகள் வந்தால் அனுமதிக்காமலும், உள்ளே நுழைந்து விட்ட பக்தர்களை, வெளியே விடாது அவனுடனே இருக்க பண்ணுவதுமாக அசேதனங்கள் அக்றிணைப் பொருட்களும்  கூட அவனிடத்தில் ப்ரேமை கொண்டிருக்கின்றன. அதனால் நேச நிலைக் கதவம்
(17)
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
 எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!
அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
 உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!
அம்பரம் =  ஆடை
நந்தகோபர் நிறைய தான தர்மங்கள் செய்பவர். கணக்கில் அடங்காத அளவு துணி மணிகள், அன்னம், தண்ணீர் என்று தானம் செய்கிறார். அதனால் அம்பரமே! தண்ணீரே! சோறே! அறஞ்செய்யும் எம்பெருமான் – நந்த கோபாலா! என்று ஏகாரம் போட்டு அவர் செய்யும் தான தர்மங்களை சொல்கிறார்கள்.
கொம்பு அனார்கெல்லாம் கொழுந்தே! = வஞ்சிக் கொம்பைப்போல உள்ள ஆயர்குடிப் பெண்களில் கொழுந்து போன்றவளே!
அம்பர மூடறுத் தோங்கி:
மஹாபலி தானம் தந்தேன் என்று தாரை வார்க்கும் நீர் கீழே விழும் முன்பாக, எழுலகத்தையும் அதை தாண்டி வளர்ந்து, ஊடு அறுத்து என்று எல்லா உலகங்களின் ஊடாகவும் வளர்ந்த ஓங்கி உலகளந்த கோமகனே! தேவதேவனே!
(18)
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
 நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
 பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
 பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
 செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
 வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
மதம் உந்துகின்ற களிறு இயல்பாகவே பலமுள்ள யானை, மதம் பிடித்து விட்டால் அதன் மூர்க்கம் மிகவும் அதிகமாகி விடும். அத்தகைய யானைகளையும் எதிர்த்து நின்று சண்டை இடக்கூடியவராம் நந்தகோபர்.
நப்பின்னை தேவி, யசோதையின் சகோதரரான ஸ்ரீகும்பரின் மகள் என்று சொல்வர். நப்பின்னை  நற்பின்னை என்பது நல் பின்னை  நல்ல தங்கை  என்று மஹா லக்ஷ்மியைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்றார் ஒரு பெரியவர்)
(19)
குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
 மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்
 கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
 வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீ உன்மணாளனை
 எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்
 எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல்
 தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!
குழந்தைகளாக குதூகலித்து, பக்தியினால் உள்ளம் கரைய விகசித்து போகிறார்கள். விடிவதற்கு முன்னமே எழுந்திருந்து, “மையிட்டெழுதோம் மலரிட்டு முடியோம்!” என்று நாங்கள் இருக்க, நப்பின்னாய்! நீ கொத்தாக அலர்ந்த பூக்கள் நிறைந்த குழலுடன், குத்துவிளக்கெரிய விட்டு, மலர்மார்பனான பகவான் மீது சயனித்து அவனையும் துயிலெழ விடாமல் செய்கிறாயே! இது தகவன்று! என்கிறார்கள்.
(20)
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
 கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
 வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!
செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
 நப்பின்னை நங்காய் திருவே துயிலேழாய்!
உக்கமுந் தட்டொளியும் தந்துன் மணாளனை
 இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

முப்பத்து முக்கோடி தேவர்கட்கு
கப்பம் என்பது கம்பனம் என்ற கஷ்டத்தை அல்லது சிரமத்தை குறிக்கும்.
செப்பம் உடையாய்! இனிமை, எளிமை, கருணை, தைரியம் என்று எண்ணற்ற குணங்களால் பூர்ணமாக இருப்பவன்! திறலுடையாய்! சாமர்த்யம் உடையவன்
 உக்கம் என்பது விசிறி, தட்டொளி என்பது முகம் பார்க்கும் கண்ணாடி.
ஒன்று கைங்கர்யத்துக்கு. ஒன்று ஸ்வரூபத்தைக் காட்டுவதற்கு.  கைங்கர்யமும், ஸ்வரூப ஞானத்தையும் பிராட்டியிடம் கேட்டுப் பெற்று ப்ரஹ்மத்தை அடைவதே மோக்ஷம். அதை தரவேண்டும் என்று மஹா லக்ஷ்மியான நப்பின்னையிடம் வேண்டுகிறார்கள்.

No comments:

Post a Comment