Thursday, May 19, 2016

திருப்பாவை - பகுதி 3



திருப்பாவை  - பகுதி 3
(21)

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
 மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
 ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுராய்!
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
 தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்
 மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
 ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
 போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!

ஏற்ற கலங்கள் = எத்தனை குடங்கள், பாத்திரங்கள் வெவ்வேறு அளவில் எடுத்து வைத்து பால் கறந்தாலும், எதிர்பொங்கி மீதளிப்ப =  அவை எல்லாம் நிரம்பி வழிகின்ற அளவில், மாற்றாதே பால் சொரியும் = ஏமாற்றாமல் பாலை சொரிகின்ற வள்ளல் பெரும் பசுக்கள், நிறைய உடையவரான நந்தகோபரின் மகனே! என்கிறாள்.
பகவ¡ன், பக்தியில் இவன் சிறியவன், இவன் புதியவன், இவன் பலகாலம் பக்தி செய்தவன் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல் யார் கொண்டாலும் குறைவின்றி உள்ளத்தில் நிறைந்து விடுகிறான். அதோடு மட்டும் அல்ல, அவனையே நினைக்காதவர்களையும் அவன் ரக்ஷிக்கிறான். அதனால் இவ்வளவு என்று எண்ணிச் சொல்ல முடியாத வள்ளன்மை அவனுக்கு. அதற்கு பசுக்களை உதாரணமாக சொல்கிறாள். உன் வீட்டு பசுக்களுக்கே இந்த குணம் உண்டே. அதோடு இந்த பசுக்களுக்கெல்லாம் சொந்தக்காரரின் மகன் நீ எங்களில் ஒருவனல்லவா நீ என்று அவனது  அவதார மாயையில் மூழ்கி திளைத்து மகிழ்ந்து போகிறாள் ஆண்டாள்.
“ஊற்றம் உடையாய்!”  சிறிதளவும் அயராது, தயங்காது ஊற்றமாய் உலக வியாபாரத்தை கவனிக்கிறாய்! ஜீவன்களையும் படைத்து, அவற்றைக் காத்து, அவற்றுக்கு புலன்களையும் இன்பத்தையும் படைத்து என்று இதில் தான் உனக்கு எத்தனை உற்சாகம்? என்று ஆச்சரியப்படுகிறாள்.
பெரியாய்!  வேதத்தை நினைக்கிறாள் ஆண்டாள். வேதத்துக்கும் பெரியவனாக இருப்பவனே! என்கிறாள்
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! =  வேதத்தைவிட பெரியவனான உன்னை, ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டோம், யாரோ சொன்னார்கள் கேட்டோம் என்று இல்லாமல் இங்கே எங்கள் மத்தியில் வந்து தோன்றினாயே! என்று அவன் செளலப்யத்தை  எளிய தன்மையை எண்ணி ஆச்சர்யப் படுகிறாள்.
மாற்றார் உனக்கு வலிதொலைந்து = உன் பகைவர்கள் தம் வலிமை எல்லாம் தொலைத்து, தங்கள் நாடு, பொருள், பலம் எல்லாம் தொலைத்து உன் வாசலில் வந்து இப்பேர்ப்பட்டவனை நமக்கு சமம் என்று எண்ணினோமே என்று ஆற்றாமை தோன்ற உன் அடிபணிகிறார்கள். அது போலே போற்றி நாங்கள் வந்தோம். என்று
கூறுகிறாள்

(22)
அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான
 பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
 சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்!
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
 செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ!
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
 அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
 எங்கள் மேல்சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!

 ‘மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்து அடிபணியுமா போலே” என்பதன் தொடர்ச்சியாக, இந்த பாசுரத்திலும் அந்த ஆச்சர்யத்தை தொடர்ந்து சொல்கிறாள். துரியோதனன், அர்ஜுனன் என்று ஞாலத்து பெரிய அரசர்கள் முதற்கொண்டு, கணக்கற்ற அரசர்களும், சக்ரவர்த்திகளும் தங்கள் ஸ்வபிமானத்தை  தன் சொத்து, தன் நாடு, தம்மக்கள், தன் உடல், தன் ஆன்மா என்று தன்னையே அபிமானித்து வந்தவர்கள் அந்த அபிமானம் பங்கமுற உன் கட்டிற்கால் கீழே வந்து (சங்கம்) கூட்டம் போட்டிருப்பது போலே நாங்கள் வந்து நிற்கிறோம் என்கிறாள்.
அவர்கள் வேறு வழியின்றி உன்னிடம் வந்து நின்றார்கள். நாங்கள் எங்கள் வழியே நீதான்  உன் கைங்கர்யமே நாங்கள் வேண்டுவது என்று வந்து நிற்கிறோம்
சிறிய மணியினுடைய வாயைப்போல், தனது மொட்டு சிறிது மலர்ந்ததாய் உள்ள தாமரையைப் போலே எங்கள் மேல் உன் பார்வை படாதா என்கிறார்கள்.
உன் சிவந்த கண்கள் திறக்க வேண்டும் என்று வேண்டுகிறார்கள். அப்படி விழிக்கும் போதும் முதல் பார்வை எங்கள் மேல் படவேண்டும்.
அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல் = அப்படி நீ எங்கள் மேல் உன் பார்வை செலுத்தினால், எங்கள் மேல்சாபம் விலகி  எங்களுக்கு இன்னும் மிச்சமிருக்கிற சம்சார பாவங்கள் தொலையும்.
அடுத்த பாசுரத்தில் க்ருஷ்ணன் விழித்தெழ அவனிடம் பேசவே ஆரம்பித்து விடுகிறார்கள!

(23)
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
 சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
 வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
 மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
 போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
 கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
 சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
 காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!


மாரி  மழை பெய்கிறது  அதுவும் பனியே மழைபோல் பெய்யும் மார்கழிக்காலம் பனிவிழும் மார்கழியாம்.
முழைஞ்சில் என்பது குகை. அப்படி குளிர் நடுக்குகிற, பனி  மழை போல் பெய்து கொண்டிருக்கிற மார்கழி மாத காலத்தில், தன் குகையில்
மன்னிக் கிடந்துறங்கும்  சோம்பலை அள்ளி பூசிக்கொண்டு தன் பெடையொடு அணுஅளவும் விலகாமல் படுத்துத் தூங்குகிறதாம் சிங்கம்.
அது மழைக்காலம் முடிந்த நிமித்தங்கள் கண்டு, அறிவுற்று = அதுவரை அசையாமல் இருந்தது  திடீரென்று உயிர் வந்ததுபோல் அசைந்து,
தீவிழித்து = உறங்கிய பின் பார்க்கிற முதல் பார்வையாகையால் சிறிது சிவந்து விழித்த விழிகள்
வேரிமயிர் பொங்க = ஜாத்யுசித பரிமளம் என்கிற விலங்கு ஜாதிக்குரிய மணம் கமழ  தனது வாசனையுள்ள பிடரி மயிர்களை உதறி,
வெப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து = உடம்பில் இன்னமும் ஒட்டியிருக்கும் சோம்பலை உதறுகிறதாம். முன்னங்கால்களை நீட்டி உடம்பை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுத்து, பின் பின்னங்கால்களை நீட்டி மறுபடியும் உடம்பை இழுத்து சோம்பலை உதறுகிறதாம்.
பிறகு முழங்கி  கர்ஜித்து
புறப்பட்டு போதருமா போலே வேட்டையாடக் கிளம்பும் சிங்கத்தைப்போலே
என்று சொல்லவும் பகவான், நான் என்ன சிங்கம் மாதிரி கருணை இல்லாமலா இருக்கிறேன் என்று பார்க்க, சிங்கம் உன் காம்பீர்யத்துக்கு மட்டுமே உதாரணம்; உன் செளகுமாரத்தன்மை எங்களுக்கு தெரியாதா? பூவைப்பூவண்ணா! என்கிறாள்.
இப்படி படுக்கையறையிலேயே இருக்காமல், உன் கோயிலில் இங்ஙனே போந்தருளி  இங்கே ஸபா மண்டபத்துக்கு வந்து, கோப்புடைய சீரிய சிங்காதனத்தில் இருந்து, நாங்கள் வந்த காரியத்தைக் கேட்கவேண்டும் என்று சொல்கிறாள் ஆண்டாள்
நாங்கள் இதற்கு முன்னமே எழுந்திருந்து பலகாலும் உன் பேர்பாடி, ஒவ்வொரு பாகவதர்களாக எழுப்பி, உன் வாயில் காப்போர்களை அண்டி அனுமதி பெற்று, நந்த கோபர், யசோதை ஆகியோர்களை எழுப்பி, உன் பிராட்டியை எழுப்பி நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை வந்து சேர்ந்திருக்கிறோம்! ப்ரபத்தி என்பது எல்லாம் அவன் அருள் என்று சும்மாக் கிடப்பதல்ல, அதன் அளவில் அதுவும் ஒரு போராட்டமே! என்று குறிப்பால் உணர்த்துகிறாள். இப்படி நாங்கள் கஷ்டப்பட்டு உன்னை அடைந்திருக்கிறோம். ‘குழந்தை கிணற்றில் விழுந்தால், தாயன்றோ கவனக் குறைவாக இருந்து விட்டாளென்பார்கள்’ என்றார் வியாக்கியானத்தில். இப்படி நாங்கள் கஷ்டப்பட நீயன்றோ காரணம்! ஆகையால் இப்படி நாங்கள் வந்ததை நீ ஆராய்ந்து, அறிவுற்று பார்த்து, அருளுவாய் என்று சொல்கிறாள். இன்னும் இவர்கள் தாம் வந்த காரியத்தை சொல்லவில்லை.

(24)
அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி !
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி !
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி !
கன்று குணிலாவெறிந்தாய் கழல் போற்றி !
குன்று குடையாவெடுத்தாய் குணம் போற்றி !
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி !
என்றென்றும் சேவகமே யேத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்!

பொன்றச் சகடமுதைத்தாய் = சகடாசுரன் முடியும்படி (அழியும்படி)
கன்று குணிலாவெறிந்தாய் = கன்றாய் நின்ற ஒரு அஸுரனை (வத்ஸாஸுரனை,)
எறிதடியாக் (கொண்டு)
(கபித்தாஸுரன் மீது எறிந்தருளினவனே
உன்னை போற்றி பாடுவதையே பரம ப்ரயோஜனமாக கொள்ள வந்தோம், நீ அதற்கு இரங்கி அருளுவாய் என்று கேட்டு முடிக்கிறாள்.

(25)
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
 ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
 தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த
 கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
 நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
 அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
 திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
 வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

பறையை = கைங்கர்ய பாக்கியத்தை
திருத்தக்க செல்வமாக, என்றும் நிலையான செல்வமாக பெற்று,
உங்களுக்கு சேவகம் செய்து,
வருத்தமும் தீர்ந்து, நித்யமான பரமானந்த நிலையை அடைந்து மகிழ்வோம் என்று சொல்கிறாள்.

(26)
மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.

இவர்கள் “மார்கழி நீராடுவான்” என்றவுடனே, கண்ணபிரான் மேன் மேலும் இவர்கள் வாயைக் கிளப்பி வார்த்தை கேட்கவிரும்பி, ‘மார்கழியாவதென்? நீராட்டமாவதென்? இது யார்செய்யுங் காரியம்? அதற்கு என்னென்ன வேண்டும்? என்கிறான்
அதற்க்கு வேண்டிய பொருட்களைக் கூறுகிறாள்.
திருப்பள்ளி யெழுச்சிக்குச் சங்குகள் வேண்டும்; புறப்பாட்டுக்குப் பறைவேண்டும்; பறை கொட்டிக்கொண்டு புறப்படும்போது எதிரே நின்று திருப்பல்லாண்டுபாட அரையர் வேண்டும்; பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து நாங்கள் அவர்கள் முகத்திலே விழித்துக்கொண்டு போம்படி மங்களதீபம் வேண்டும்; நெடுந்தூரத்திலேயே எங்கள் திரளைக்கண்டு சிலர் வாழும்படி முன்னே பிடித்துக்கொண்டு போவதற்குக் கொடிவேண்டும்; புறப்பட்டுப் போம்போது பனி தலைமேல் விழாதபடி காக்க ஒரு மேற்கட்டி வேண்டும்?  ஆகிய இவ்வுபகரணங்களையெல்லாம் நீ தந்தருளவேணு மென்கிறார்கள்.
இது கேட்ட கண்ணபிரான், ‘பெண்காள்! இவ்வளவு பொருள்களை நான் எங்ஙனே சேமித்துத் தரவல்லேன்? இஃது எனக்கு மிகவும் அரிய காரியமாயிற்றே!’ என்கிறான்
உன்னுடைய சிறிய வயிற்றிலே பெரிய லோகங்களெல்லாவற்றையும் வைத்து ஒரு ஆலந்தளிரிலே கிடந்து ஆச்சர்யங்களைச் செய்யவல்ல உனக்குங் கூட அரிய தொன்றுண்டோ? என்னுங்கருத்துப்பட “ஆலினிலையாய்!” என விளிக்கின்றனர்.

(27)
கூடாரை வேல்லுஞ் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்
 பாடிப்பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
 நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
 சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
 பாடகமே என்றனையப் பல்கலனும் யாமணிவோம்
 ஆடையுடுப்போம் அதன் பின்னே பால்சோறு
 மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
 கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

கூடாரை என்றால் வெறுக்கிற பேர்வழிகள். வெறுப்பாலேயே சதா அவனைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்கள். ஹிரண்யாக்ஷன்  ஹிரண்யகசிபு, ராவணன்  கும்பகர்ணன், சிசுபாலன்  தந்த வக்ரன் என்று வெறுப்பின் மூல முடிச்சாக, ஆணி வேறாக  இதற்கு மேலாக வெறுக்க முடியாது என்ற அசுரேந்த்ரர்களாக, த்வேஷ திலகமாக இருப்பவர்களை தோற்கப்பண்ணுகிறானாம்! அவர்கள் கருத்தைப் பிழைப்பித்து வெல்கிறான்.
கோவிந்தா! உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசு என்றாள். கோவிந்தா என்று ஒருமுறை சொன்னாலே நாடு புகழும் பரிசு கிடைக்குமாம். இவர்கள் இவனை பாடிப் பறையை  கைங்கர்ய பலப்ராப்தியை சம்மானமாகப் பெற்றதோடு அல்லாமல் அதற்கு மேலாக நாடு புகழும் பரிசு வேண்டும் என்று கேட்கிறார்கள். நாங்கள் பாடியதோடு அல்லாமல் நாடே எங்களை பாடுமாறு ஒரு பரிசு வேண்டும் என்கிறார்கள். சரி அப்படி என்ன வேண்டும் என்று அவன் யோசிக்க ஒரு பெரிய பட்டியலையே கொடுக்கிறார்கள்.
சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே, பாடகமே என்றனைய பல்கலனும்  கேசாதி பாதமாக எல்லா அங்கங்களிலும் அணியும் பல்கலனும் நீ தரவேண்டும்
பால் சோறும், முழங்கை வரை வழியும் அளவுக்கு நெய்யுமாக அவனுக்கு சமர்பித்து தாங்களும் அனுபவித்து கூடியிருந்து குளிர்வோம் என்கிறாள். பாலில் சோறு கலந்தார்போல், பாலில் நெய் கலந்தார்போல் என்று ஒன்றோடு ஒன்று கலந்து புதிய நறுசுவையுடன் உண்போம். அவனில் நாமும், நம்மில் அவனுமாக கலந்து கரைந்து, அஹமன்ன என்று நாம் அவனுக்கு உணவாகவும், அஹமன்னாத: என்று நமக்கு அவன் உணவாகவும் உண்டு களித்து  உன்னுடன் நாங்கள் சாயுஜ்ய பதவி அடைந்து நீயும் நாமுமாக கலந்து என்றென்றும் புதியதாக நித்யமாக கூடியிருந்து இன்பத்தை பெறுவோம் என்று ஆண்டாள் முடிக்கிறாள் .

(28)
கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம்
 அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப்
 பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
 குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்றன்னோடு
 உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
 அறியாத பிள்ளைகளோம் அன்பினாலுன்றன்னைச்
 சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே
 இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பவாய்!

இந்த பாசுரம் மிக உயர்ந்த அர்த்த செறிவு கொண்டது. வைஷ்ணவத்தில் ரஹஸ்ய த்ரயங்களுள் ரத்னமாக விளங்கும் த்வய மந்திரத்தை இந்த பாசுரத்துடன் சாம்யப் படுத்தி பூர்வாசார்யர்கள், இந்த பாசுரமும், ‘சிற்றம் சிறு காலே’ பாசுரமும் த்வய மந்திரத்தின் இரு பாகங்களை சொல்வதாக அருளியிருக்கிறார்கள்.
கோவிந்தா! உன்றன்னைப் பாடிப்பறை கொள்ள வந்தோம் என்று சொன்ன ஆண்டாளிடம், க்ருஷ்ணன் லீலா விநோதனாக விளையாட்டுப் பேச்சு பேசுகிறான். அப்படி நான் உங்களுக்கு நீங்கள் கேட்டதையெல்லாம் அளிக்கிறேன், பதிலுக்கு நீங்கள் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்கிறான்
கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம் என்றால், எங்களிடம் பெரிதாக ஆசார்ய சம்பத்தோ, சத் சங்க ப்ராப்தியோ இல்லை. நாங்கள் கறவைகள், பசுக்கள் பின்னாலே சென்று மாடு மேய்ப்பவர்கள். காட்டில் போய் சேர்ந்து உட்கார்ந்து உண்போம். பிறகு மாலையில் வீட்டுக்கு பசுக்களை ஓட்டி வருவோம். இப்படியே பொழுது போக்கினோம். எங்களுக்கு புண்ணியம் எது பாபம் எது என்று எதுவும் அறியாத பிள்ளைகளோம் என்றாள்.
சரி நீங்கள் தான் இப்படி, உங்கள் பூர்வர்கள் நல்ல காரியங்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா என்று கண்ணன் கேட்க, அப்படி எங்கள் குலத்திலேயே வழக்கமில்லை. எங்கள் குலம் அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம். இப்படியாக புண்ணியமோ, பாபமோ எதுவுமே இல்லை எங்களிடம்.
எங்களிடம் இருப்பதெல்லாம், யாதவ மணியாக நீ வந்து உதிக்கப் பெற்றோமே அந்த பேறு ஒன்றுதான் இருக்கிறது. உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்.
அறிவொன்று மில்லாத ஆய்க்குலம் என்று இவர்கள் தம் எளிமையைத் தெரிவித்தாலும், பகவானை உணர்ந்து கொண்டார்கள். அவனது செளலப்ய செளசீல்யாதி குணங்களை புரிந்து கொண்டார்கள். தெய்வத்தை தமக்குள் உணர்ந்தார்கள்.
கண்ணா, எங்களிடம் நீ குறை என்று பார்க்க ஆரம்பித்தாயானால் அது அளவிலடங்காமல் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி நீ எங்களை, எங்கள் தகுதியைப்பார்த்து நீ ஏற்றுக் கொள்ள நினைக்காதே! நீ எங்களோடு ஒருவனாக வந்து பிறந்த உனக்கேது குறை! குறைவொன்றுமில்லாத கோவிந்தா! எங்கள் அறியாமை பாதாளம் வரை ஆழமுள்ள பள்ளம் என்றால் அதையும் நிறைக்கக்கூடிய மலையளவு கருணை கொண்ட பர்வதமாகவன்றோ நீ இருக்கிறாய்! அதோடு நாங்கள் எதையாவது வைத்திருந்து அதை விட்டு விட்டு உன்னிடம் வந்தோம், நாங்கள் ஒரு தியாகத்தை செய்தோம், பதிலுக்கு நீ பரிசு கொடுத்தாய் என்று உன் கருணையிலே குறை காண்பதற்கு இடமில்லை. எல்லாமே உன்னுடையது. எங்களிடம் எதுவும் இல்லை.
அதோடு உனக்கு வேறொரு நிர்பந்தமும் உண்டு அது எங்களோடு உனக்கு உண்டான சம்பந்தம்! உன்றன்னோடு உறவேல்! நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது!  இனி அந்த உறவை அறுத்துக் கொள்ளவே முடியாது. எங்களை இந்த ஜகத்தில் வந்து பிறக்கப்பண்ணியவனே நீதானே! நீ காரணம்.. நாங்கள் காரியம். இது ஆத்ம சம்பந்தம்.
உன்னை எங்களுக்கு நடுவே பிறக்கப் பெற்ற புண்ணியம் தவிர வேறு எதுவும் இல்லை என்பது நன்றாக தெரிகிறது. ஆனால பாவங்கள்? இமைக்கிற பொழுதில் எண்ண முடியாத அளவுக்கு பாவத்தை சேர்த்துக் கொள்கிற ஜீவன் மனிதன். அப்படி ஏற்படுகிற பாபத்துக்கு அபராத க்ஷமாபனமாக சொல்கிறார்கள். அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறி அருளாதே! கோவிந்தா என்று கூப்பிட்டது வரைக்கும் நிறைய பாவங்களை செய்திருக்கிறோம். மஹதோ மஹீயனான உன்னை  பெரியவற்றுக்கும் பெரியவனான உன்னை எளிமையாக கோவிந்தா என்று சிறு பேர் கொண்டு அழைத்திருக்கிறோம். அழைத்தனவும் எனும் போது, இம்மாதிரி பலவாறும் குறைவுள்ள மனிதர்களோடு சமப்படுத்தி சிறு பேர் சொல்லி அழைத்திருக்கிறோம். இது அறியாமையாலும், பால்ய வயதினாலும், அன்பினால் ஏற்படுகின்ற சுவாதீனத்தாலும் ஏற்பட்ட பிழைகள், இவற்றைக் கண்டு கோபம் கொள்ளாமல் மன்னித்துவிடு என்று கேட்கிறார்கள்.
அடுத்து, எங்கள் குறைபார்க்காது, குறைகளை மன்னித்து, எங்களை ஏற்று இறைவா! நீ தாராய் பறை! என்றார்கள். இறைவா! என்ற பதத்தில் இவர்களது நைச்ய பாவம் வெளிப்படுகிறது. இதுவரை மாலே! மணிவண்ணா! கோவிந்தா! என்றெல்லாம் பல பெயர்கள் சொன்னவர்கள், இறைவா என்று அவன் இறைமையை சொல்கிறார்கள். நீ பெரியவன், நாங்கள் சிறியவர்கள். நீ காரியமாயிருக்க நாங்கள் காரணமாயிருப்பவர்கள். நாங்கள் சரீரமாயிருக்க நீ சரீரியாய் இருக்கிறாய். நீ இன்றி நாங்கள் இல்லை. உன் உடலில் நாங்கள் ஒரு சிறு பகுதியைப்போல. பாவங்களை தன் கை செய்தது, தன் கால் செய்தது என்று ஒருவன் சொல்லுவனோ! நீ உடமைக்காரன்  ஸ்வாமி! நாங்கள் உன் உடமை  சொத்து! ‘உடமையை இழக்கை உடையவன் இழவன்றோ. அன்றி அந்த உடமைக்கு இழப்பு இல்லை’ என்றபடி நீ எங்களை இழந்தால் அது உனக்குத்தான் இழப்பே தவிர உன் சொத்தான எங்களுக்கு இழப்பில்லை. ஆதலால், குற்றம் குறைகளை மன்னித்து, பொருட்படுத்தாது, நாங்கள் விரும்புவதை அளித்து எங்களை ஏற்றுக் கொள் என்று கேட்கிறார்கள்.

(29)
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
 பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
 பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
 குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
 உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
 மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!

இது திருப்பாவையின் முத்தாய்ப்பான பாசுரம்.
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே! என்று தவற்றிற்க்கு மன்னிப்பு கேட்டுதனது முன்வினைகளை சரணாகதியின் மூலம் அழித்தது இதற்கு முந்தைய பாசுரத்தில். அந்த பாசுரத்தில் முக்கியமான வார்த்தைகள் அவை.
அதே போல் இந்த பாசுரத்திலும் முத்தாய்ப்பாக
 "இற்றைப் பறைகொள்வான் அன்று! காண், கோவிந்தா, எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமே யாவோம், உனக்கே நாமாட்செய்வோம்"
நாங்கள் வெறும் பறை எனும் பொருளை மட்டும் பெற்றுப்போக வரவில்லை. அது ஒரு வியாஜமே! நாங்கள் வந்தது உன்னிடம் அடிமையாக இருக்கும் பெரும் பேற்றை பெற்றுப்போகவே. எற்றைக்கும் என்பது எக்காலத்திலும்
ஏழேழ் பிறவி என்பது எண்ணிக்கை என்று கொள்ளாமல் எத்தனை முறையானாலும் என்றே கொள்ள வேண்டும். வேறொரு விதமாகப் பார்த்தால், இனி ஒரு வேளை பிறப்பெடுக்க நேர்ந்தால், அப்போதும் உனக்கு தாஸனாகவே இருக்க வேண்டும் என்று கேட்பதாகும். மற்றை நம் காமங்களை மாற்றி உனக்கே ஆட்செய்ய அருளுவாய் என்று கர்ம வாஸனை எங்களை வேறு விஷயங்களில் இழுத்து அமிழ்த்தி விடாமல் அதிலிருந்து விடுதலை அளிக்க வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்கள்.
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து = பசுக்களை மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து
அந்த குலத்துக்குரிய குணம் என்ன? பசுக்கள் வயிறு நிறையாமல் தாங்களுண்ணாத குலம்’
அந்த ஆயர் குலத்தில் உதித்த நீ உன்னிடம் சரணடைய  வந்த ஜீவனை ரக்ஷிக்காமல் விடமாட்டாய்.
 குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.  நீ எங்களை கொள்ளாமல் விடுவது உன் ஸ்வரூபத்துக்கு விரோதமாகும். அதனால் நீ நிச்சயம் எங்களை ரக்ஷிப்பாய் என்று மஹா விஸ்வாசத்தை வெளிப்படுத்துகிறாள்.
 நீயே சரணம் என்று சரணாகதி செய்கிறாள் ஆண்டாள்.

(30)
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
 திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
 அங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்
 பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
 சங்கத்தமிழ்மாலை முப்பதுந் தப்பாமே
 இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால் வரைத்தோள்
 செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
 எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம்பாவாய்!

வங்க கடல் எனும் மரக்கலங்கள் மிதக்கும் பாற்கடலைக் கடைந்து மா என்கிற லக்ஷ்மியைப் பெற்ற மாதவனை, பக்தர்களுக்கு ஊறு செய்த அசுரர்களை அழித்த கேசவனை, ஆய்ப்பாடியில் திங்கள் திருமுகத்து சேயிழையார்களான பெண்பிள்ளைகள், அவன் இருக்குமிடத்துக்கே சென்று இரைஞ்சி, அங்கே பறை கொண்டார்கள். பறை எனும் பரம புருஷார்த்தத்தை அவனிடமிருந்தே பெற்றார்கள். இந்த ஆற்றை  பெருஞ்செயலை பிற்காலத்தில் ஆண்டாள் அனுசரித்து, பக்தியால் உணர்ந்து பாடினாள்
அணி புதுவை  இந்த பூவுலகிற்கே அணியான புதுவை என்கிற ஸ்ரீவில்லி புத்தூரில், பைங்கமல தண் தெரியல் என்று தண்மையான குளிர்ந்த மாலைகளை அணிந்தவராகவும், பட்டர்பிரான் என்று பண்டிதர்களுக்கு தலைவராகவும் பெரியாழ்வார் விளங்குகிறார். அப்பேர்பட்டவருடைய திருமகளான கோதை நமக்கு கொடுத்த பரிசான இந்த சங்கத்தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரத்தையும் தப்பாமல் உரைப்பவர்களை – தன் இரண்டு தோள்கள் நான்கு தோள்களாகும் படியாக, இரண்டு கை போதாது இந்த பக்தரை அணைக்க என்று நான்கு கைகளால் பகவான் எடுத்து அணைப்பனாம். அப்படி செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால் என்றும் எங்கும் திருவருள் என்று லக்ஷ்மி கடாக்ஷம்  பெற்று இன்புறுவர் என்று மங்களா சாசனம் செய்கிறாள்.
 நாம் ஆய்ப்பாடியை சேர்ந்தவர்கள் இல்லாவிட்டாலும், ஆழ்வார் ஆசார்யர்கள் ஆண்டாளைப்போல் இல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், நல்ல கன்றைப்போலே, தோல் கன்றுக்குட்டிக்கும் பசு இரங்கி பால் சுரப்பது போல், பகவான் அருளுவன் என்று ஆச்சார்யர்கள் சொன்னார்கள்.


திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!
மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்கோதை மலர்பாதங்கள் வாழியே!
ஆண்டாள் திருவடிகளே சரணம்
 ஆசார்யர் திருவடிகளே சரணம்
 ஆழ்வார் திருவடிகளே சரணம்
 ஸ்ரீமதே நாராயணாய நம:
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து:
நன்றி: bhakthi.wordpress.com

No comments:

Post a Comment