திருப்பாவை ஆரம்பம் - பகுதி 1
ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தில், ஆழ்வார்கள் உயர்ந்த ஸ்தானத்தை உடையவர்கள்.
அந்த ஆழ்வார்களின் கூட்டத்தில், பரவாசுதேவனான கண்ணனுக்கே தம் அன்பால் கண்ணேறு கழித்த பெரியாழ்வார் மிக உயர்ந்தவர். அப்படிப்பட்ட பெரியாழ்வாரையும் விஞ்சி அந்த பரம்பொருளுக்கே வாழ்க்கைப்பட்ட ஆண்டாள், விஷ்ணு பக்தியின் சிகரமாக விளங்குகிறாள்.
ஆண்டாளுக்கும் வராக அவதாரத்துக்கும் பூர்வசார்யர்கள் சம்பந்தம் சொல்வார்கள்.அவதாரங்களிலேயே வராக அவதாரமே மிகவும் பெரிது என்பர் த்ரிவிக்ரமாவதாரம் கூட பூமியில் காலூன்றித்தான் நின்றது. வராகமோ பூமியையே தன் கொம்பில் ஒரு தூசி போல் தாங்கி நின்றது. சர்வ ஜகத்துக்கும் காரண பூதனான ஸ்ரீமன் நாராயணன் இந்த வராக அவதாரம் எடுத்தபோது சேதனர்களுக்காக தன்னை அடையும் வழியை சுருக்கமாக பூமாதேவி கேட்டதின் இப்படி அருளுகிறான். இது வராக சரம ஸ்லோகம் எனப்படும்.
அதாவது, "நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை ஒரு கணமேனும் மகாவிச்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்!" என்று சொல்கிறான். இதையே உறுதியாய் பூமாதேவி பற்றிக்கொண்டாள். பிறகு கலியுகத்தில் பகவத் ஆக்ஞையின் பேரில் ஆண்டாளாக அவள் அவதாரம் செய்தபொழுது இந்த பொருளையே தம் திருப்பாவை வாயிலாக பரப்பினாள்.
ஸ்ரீமத் பாகவதத்தில் கோகுலத்தைச் சேர்ந்த கோபிகைகள், க்ருஷ்ணானுபவத்துக்காக காத்யாயனி விரதம் அனுஷ்டித்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. அந்த கோபிகைகளுள் தன்னையும் ஒருத்தியாக பாவனை செய்து கொண்டு ஆண்டாள் இந்த விரத அனுஷ்டானத்துக்காக விடியலில் தனது சக தோழிகளை அவர்களது இல்லந்தோறும் சென்று எழுப்பி அழைத்து செல்வதாக அமைந்ததுதான் இந்த திருப்பாவை பாசுரங்கள். இந்த திருப்பாவை பாசுரங்களில், ஆண்டாள் வெறும் சரித்திரமாக நிகழ்வுகளாக பாசுரங்களை நிறுத்திவிடாமல், ஒவ்வொரு சொல்லிலும் வேதாந்த சாரத்தை செதுக்கி இருக்கிறாள்.
திருப்பாவை தனியன்கள்
தனியன் என்பது வாழ்த்தி வணங்கும் பாடல் போன்றது.
அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்கு
பன்னு திருப்பாவை பல்பதியம் இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.
"அன்னப்பறவைகள் சூழ்ந்த செழிப்பான வயற்புரங்களை உடைய ஸ்ரீவில்லிபுத்துரிலிருந்து பாமாலையாகவும், பூமாலையாகவும் அரங்கனுக்கு பாடியும் சூடியும் கொடுத்த ஆண்டாள் என்ற அப்பிராட்டியை ஏ மனமே! சொல்லு (அனுசந்தானம் செய்) என்று உய்யக்கொண்டார் என்னும் ஆசார்யர் அருளிய தனியன் இது".
சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே! தொல்பாவை
பாடியருள வல்ல பல்வளையாய் நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு
"தான் அரங்கனுக்கு பொருத்தமா என்று எண்ணி அவனுக்கான பூமாலைகளை முதலில் தான் சூடி அழகு பார்த்து பின் அவனுக்கு கொடுத்து இந்த அன்பினாலேயே அவனை அடைந்த சுடர் கொடியே! தொன்மையான பாவை நோன்பை மேற்கொண்டு, தன்னைபோல் பின் வரும் மக்களும் அவனை அடைய பாடி அருளினாய். இந்த உனது பெருமையை நாங்களும் உணர்ந்து உன் வழியை பின்பற்ற அருள் செய்"
ஏன் இந்த திருப்பாவையை இப்படி கொண்டாடுகிறார்கள்? என்று புரிந்துகொள்ள முயற்சிக்கையில், வலைத்தேடலில் கிடைத்தவை இவை.
பாசுரஙகள்
(1)
மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்
செல்வ சிறுமீர்காள்! நாராயணன் என்ற ஐஸ்வர்யம் மிக்க சிறுமிகள்
கூர்வேல் கொடுந்தொழிலன்:
உலகமெலாம் பரந்து விரிந்த இந்த மூர்த்தி சிறு குழந்தையாய் வந்த ஒரே காரணத்தால் இந்த குழந்தைக்குத்தான் எத்தனை ஆபத்துக்கள்! குழந்தை தவழ்ந்தால் அங்கே ஒரு அசுரன் காத்திருக்கிறான். நடந்தால் ஒரு அசுரன் வருகிறான். குழந்தைக்கு பசித்தால் அதற்கென்றே ஒரு அரக்கி காத்திருக்கிறாள். ஐயகோ! இந்த குழந்தைக்கு இன்னும் எத்தனை ஆபத்து வருமோ என்று எண்ணிய நந்தகோபர், கொடுந்தொழில் புரிபவனைப்போல் இனி இக்குழந்தைக்கு யாரேனும் ஆபத்து விளைவிப்பரேல் சற்றும் பொறேன் என்று கூரிய வேல் பிடித்த கையினராக இருக்கிறார். அதனால் கூர்வேல் கொடுந்தொழிலன்.
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்: கரிய மேகத்தைப்போன்ற மேனி அதிலேயே அவன் கருணாசாகரனாக காட்சி தருகிறான். அவனுக்கு கதிரவனைப் போல ப்ரகாசமாகவும், அதே நேரத்தில் குளிர் மதிபோல தண்மையான வாத்ஸல்யம் நிரம்பிய முகம்!
பறை என்பது தாஸத்தன்மையின் சின்னம். நாராயணனிடம் வேறு எதுவும் கேட்கத்தோன்றவில்லை ஆண்டாளுக்கு. உனக்கடிமையாக நித்ய கைங்கர்யம் செய்வதே போதும். நாங்கள் என்றும் உன் அடி சேவகர்கள். பகவத் சேவையே எங்கள் அடையாளம். அதை நம்மிடமிருந்து மறைத்த நாராயணனே நமக்கு அதை மீண்டும் தரத்தக்கவன் அவனே பரம புருஷார்த்தம். அந்த புருஷார்தத்தை அடைய அவனே உபாயம். அதையும் அவன் நாம் அவனிடம் சரணாகதியான பிறகு சரணாகத வத்ஸலானான நாராயணன் நமக்கே தருவன் என்கிறாள்.
(2)
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!
கிரிசைகள் = கிரியைகள் (எளிமையாக சொன்னால் காரியங்கள்)
முதல் பாட்டில் சொன்ன அந்த புருஷார்தத்தை அடைய இது செய்ய வேண்டும் இதை செய்யக்கூடாது என்று சொல்கிறாள்.
அதென்ன ‘பைய’ துயிலுவது? ஆம், அகில உலகத்தையும் ஈரடியால் அளந்தான் . இந்த பூவுலகை தாங்கி தூக்கினான் . அப்பேர்ப்பட்டவன் சிறிய ஆலிலைக்கும் இலேசாக மிதக்க வல்லவனல்லவா?
நாஸ்தீக வாதம் செய்து கண்டதே காட்சி, கொண்டதே கோலம். கடன் வாங்கியாவது வாழ்க்கையை அனுபவித்து நெய் சேர்ந்த அன்னம் உண்டு, தீமையான பேச்சுக்கள் பேசி திரிவதே இன்பம் என்று இருத்தல் செய்யத்தகாதது என்கிறாள். நாட்காலே நீராடுவோம். ஆனால் நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம். செய்யாதன (செய்யக்கூடாதவற்றை) செய்யோம். தீக்குறளை = தீய வார்த்தைகள்
ஐயம் என்பது நம்மைவிட உயர்ந்த ஆசார்யர்களுக்கும், சந்நியாசிகளுக்கும் சமர்ப்பணம் செய்வது. பிச்சை என்பது ஏழைகளுக்கும், ப்ரஹ்மசாரிகளுக்கும் தர்மமாக தருவது
ஆந்தனையும் கைகாட்டி: சக்தியுள்ளவரை இட்டு(செய்து)
(3)
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
ஓங்கி உலகளந்த உத்தமன்- புருஷோத்தமன் என்று அழைக்கிறாள் ஆண்டாள்.
ஏன்? த்ருவிக்ரமாவதாரத்தை சொன்னதற்கு ஒரு உயர்ந்த அர்த்தம் இருக்கிறது. இந்த அவதாரம் கருணையின் வடிவம். இந்த அவதாரத்தில் மஹாபலி சக்ரவர்த்தி அசுரனான போதும், அவன் தேவர்களை வருத்திய போதும் அவனை கொல்லாமல் வாழ்வளித்த அவதாரம். இந்த அவதாரத்தில்தான், நல்லவன், தீயவன், ஆஸ்திகன் நாஸ்திகன் என்று எந்த வித பாரபட்சமுமில்லாமல் எல்லோர் தலையிலும் தன் பாத ஸ்பர்சம் வைத்த அவதாரம். அதனால் உத்தமன்
அந்த நாராயணன் நாமத்தை இடைவிடாது அனுசந்தித்து வந்தால் என்னென்ன நன்மைகளெல்லாம் ஏற்படும் சொல்லப் புகுகிறாள் ஆண்டாள்
தீங்கில்லாமல் மாதம் மும்மாரி பொழியும் (மழை என்பது நிறைய பெய்தாலும் தீங்கு பெய்யாமல் விட்டாலும் தீங்கு )
நெற்பயிர்கள் வயல் வெளியெங்கும் நிறையும்
அந்த வயல் வெளிகளில் ஊடே ஓடும் ஓடைகளில் மீன்கள் துள்ளி விளையாடும்
போது = தளிர். குவளை மலர்களின் துளிரில் வண்டுகள் தூங்கும்.
அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள் வள்ளலைப்போல் குடம் குடமாக பாலை நிறைக்கின்றன. அவைகளின் மடி பெருத்து இருப்பதால் ஒரு கையால் பாலைக்கறக்க இயலாது.. முலை ‘பற்றி’ என்று இருகைகளாலும் பசுக்களின் மடியை பற்றித்தான் பாலை கறக்க முடியும். இதற்கும் தேங்காதே என்று தயங்காமல் புகுந்து பாலை கறக்க சித்தமாக ஆய்பாடி இடையர்கள் இருப்பார்களாம்.
நோன்பிருந்து இத்தகைய செல்வங்களை எந்த நாளும் விட்டு நீங்காமல் பெற்று நிறைவோம் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்கிறாள்.
(இங்கே பசுக்கள் ஒரு உருவகம். அந்த பகவானின் உருவகம். வள்ளன்மை அவன் குணம். அவன் எவ்வளவு கொடுத்தாலும் குறைவில்லாத வள்ளல். அத்துடன் பாலை கன்று குட்டிகளும், இடையர்களும் கொள்ளாவிடில் பசு எப்படி தவியாய் தவிக்குமோ அதுபோல் பரமனும் ஜீவாத்மாக்கள் அவனை கொள்ளாவிடில் தவித்து போகிறான். ஜீவாத்மாக்கள் முக்தி பெற்று அவனை எவ்வளவு அனுபவிக்கிறார்களோ அதே போல் அவனும் அவர்களைக ஆட்கொண்டு சுகிக்கிறான் என்பது தேறும்.)
(4)
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
ஹே பர்ஜன்ய (வருண) தேவனே! நீ உன் அனுகிரஹத்தை நிறுத்தி விடாதே.
கை கரவேல் = பாரபட்சம் பார்க்காதே.
ஆழியுள் புக்கு முகர்ந்து = இங்கே ஆழி என்பது சமுத்திரத்தை குறிக்கும் உள் புக்கு ஆழ்கடலினுள்ளேயே புகுந்து முகர்ந்து உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முகர்ந்து
ஆர்த்தேறி = நன்றாக சத்தம் எழுப்பி இடி இடித்துக்கொண்டு மேகமாக அந்த நீரை தூக்கி வந்து எங்கள் மேல் கை கரவாமல் பொழி!
ஆழியுள் புகுந்து நீரை முகர்ந்து வரும் கருமேகங்களை பார்க்கையில் ஆண்டாளுக்கு உடனே நாராயணன் நினைவுக்கு வருகிறான்.
நாராயணனும் தனது உதார குணத்தினால் கருமையாகி நீலமேக ஸ்யாமளனாக இருக்கிறான். இதில் ஒரு வித்தியாசம். மழை பொழிந்த உடன் மேகம் வெளுத்து விடும். ஆனால் அவனோ கொள்ள குறைவிலன். எவ்வளவு அனுக்ரஹித்தாலும் குறைவின்றி இருப்பான்.
‘அவனைப்போலே’ மழையே நீயும் கருமை கொள் என்கிறாள் ஆண்டாள்.
அவனது சார்ங்கம் எனும் வில் எப்படி சரமழையை பொழிந்ததோ அப்படி
தாழாதே = தயங்காமல்
நாங்கள் சுபிக்ஷத்துடன் வாழ பெய்திடாய் அதை எண்ணி நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராட போகிறோம் என்கிறாள்.
இந்த பாட்டு முழுவதுமே அவனுடைய காப்பற்றும் தன்மையை தெள்ளிய முறையில் மழையுடன் ஒப்பிட்டு மகிழ்கிறாள். ஒருவரை ரக்ஷிக்க வேண்டுமானால் முதலில் அதற்கு உதார மனம் தேவை. மனமிருந்தால் மட்டும் போதாது ரக்ஷிக்கக்கூடிய சக்தியும் தேவை. ஜனமேஜயன் யாகம் செய்து பாம்புகளை அழித்தபோது தக்ஷகன் எனும் ராஜ நாகம் இந்திரனிடம் சரணாகதி பண்ணியது. ஆனல் இந்திரனோடு சேர்த்து யாகத்தீயில் வீழ்க என்று யாகத்தில் மந்திரங்கள் விநியோகம் ஆனவுடன் தானும் அழிவோமே என்று இந்திரன் தக்ஷகனை விட்டு அகன்றான். அங்கே கருணை இருந்தது சக்தி இல்லை. தசரதன் பரசுராமனிடம் தன்னை கொல்ல வேண்டாம் என்று சரணாகதி செய்தான். ஆனால் பரசுராமனிடம் சக்தி இருந்தும் கருணை இல்லை. அதனால் இரண்டு சரணாகதிகளும் பலிக்க வில்லை.
பகவான் அப்படி இல்லை. அவன் அளவற்ற வலிமையுடயவன். சரணாகதி செய்யத் தகுந்தவன். சங்கம், சக்ரம், சார்ங்கம் என்று அவன் ஆயுதங்களை சொல்வது அவன் வலிமையை உதாகரித்து சரணாகதி செய்ய சொல்லுவதே ஆகும்!
(5)
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்!
இது வரை செய்த கர்மங்கள், கர்மத்துக்கான பலன்கள் நம்மை விட்டுவிடுமா? கர்ம வாசனை நம்மை எங்கோ இழுத்து செல்கிறதே? இதிலிருந்து எப்படி மீள்வது?” என்று கேட்பதாகவும், அதற்கு இன்னொரு இடைப்பெண்ணாக ஆண்டாள் பதில் சொல்வதாகவும் அமைந்திருக்கிறது.
மாயன் = பால் கறந்து விற்கும் வைச்யனாக பிறந்து, தாசனாக நல்ல ஆத்மாக்களான பாண்டவர்களுக்கு தொண்டு செய்து, க்ஷத்ரீயனாக போர் செய்து, பிரம்மத்தை அடையும் வழிக்கு கீதை சொல்லி ஜகதாசார்யானாக விளங்கிய மாயன்
நமக்கு வேத வேதாந்தங்கள் தெரியாது, சாஸ்திரம் தெரியாது, சம்பிரதாயம் தெரியாது. ஆனால் நாம் செய்யக் கூடியவைகள் சில உண்டு. அந்த மாயனை, வடமதுரை மைந்தனை, ஆயர் குலத்து அணிவிளக்கை, தாமோதரனை மலர் தூவி தொழுது, வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தோமானால் பல ஜன்மங்களில் நாம் சேர்த்து, இனி சேரப்போகும் அனைத்து பாவங்களும் தீயினில் தூசாக விலகும் என்று பதில் சொல்கிறாள்.
குடல்விளக்கம்= தாயாகிய தேவகி பிராட்டியின் வயிற்றை விளங்கச்செய்தவனுமான
யாராவது சாமர்த்தியமாக வேலைகள் செய்தால் எந்த ஊர் வேலை இது? எந்த ஊர் நீர்? என்று விசாரிப்பது வழக்கம். அதைப்போல் கேட்டுக்கொண்டு, இவன் யமுனைத்துறைவன் என்கிறாள். வைகுண்டத்தில் இருக்கும் விரஜா நதியைப்போல் இங்கே கண்ணனிருக்கும் கோகுலத்தில் யமுனா நதி ஓடுகிறது. அவன் ஸ்பர்சம் பட்டதால் அது தூய பேரு நீர்!
மாயனை, தாமோதரனை என்று இரண்டு திருநாமங்களையும் பொருத்திப்பார்க்க வேண்டும்
யசோதை சிறு கயிற்றினால் தன் பொல்லாப் பிள்ளையை கட்ட, அதனால் வடு விழுந்து தாம+உதரனாக தாமோதரனாக இருக்கும் அவன் பெரிய மாயன். தன் சர்வ சக்தியை மறைத்து அடியார்க்கு பொடியனாய் வந்த மாயக்கண்ணன்! அவன் மதுரையில் பிறந்து, யமுனையை கடந்து, ஆயர்பாடிக்கு வந்தான். இவனை பெற்ற பேறு பெற்றதால் யசோதை குடல் விளக்கம் செய்தான்.
(6)
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ!
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
(பாசுரம் அப்படி அமையாவிடினும்) இந்த பாசுரத்தை வீட்டினுள்ளே தூங்குகின்ற பெண்ணுக்கும், ஆண்டாள் மற்றும் அவர்கள் குழுவான கோபிகைகளுக்கும் இடையே ஒரு கேள்வி பதிலாக, சம்பாஷணையாக சித்திரித்து கூறுவர்.
(கேள்வி பாடலில் உள்ள வரிகளாகவும், பதில்கள் சித்தரிப்பாகவும் சொல்லப்படுகிறது)
ஆண்டாள் இந்த பெண்ணின் வீட்டு வாசலில் நின்று, “அம்மா பொழுது புலர்ந்தது.. நீ நேற்று பாவை நோன்புக்கு எங்களுடன் வருவதாக அத்தனை நேரம் சொன்னாயே! எழுந்திரு” என்று சொல்ல, அந்த பெண், “இன்னும் பொழுது விடியவே இல்லையே.. அதற்குள் எழுந்திருக்க சொல்கிறீர்களே!” என்கிறாள்
இங்கே வெளியே வந்து பார், பறவைகளெல்லாம் விடிந்ததனால் உற்சாகமாக சப்தமெழுப்பிக்கொண்டிருக்கின்றன” என்று ஆண்டாள் சொல்ல, அவளோ, “நீங்கள் க்ருஷ்ணனோடு சேருவதை நினைத்து நினைத்து உறங்காமல் இருப்பவர்கள். நீங்கள் பறவைகளையும் உறங்கவொட்டாது எழுப்பி விட்டிருப்பீர்கள், அதனால் அவைகள் கத்துகின்றன” என்கிறாள்.
கருடனின் தலைவன் நாராயணன் (புள் அரையன் கோ) கோவிலில், விடிந்ததற்கு அடையாளமாக சங்கு ஊதுகிறார்கள். அந்த பேரொலி உனக்கு கேட்கவில்லையா?” என்று ஆண்டாள் கேட்க, “அது ஏதோ சாமத்துக்கு சாமம் ஊதுகிற சங்காக கூட இருக்கலாம். இதெல்லாம் விடிந்ததற்கு அடையாளம் இல்லை. நான் விடிந்த பிறகு வருகிறேன்!” என்கிறாள் அந்தப் பெண்.
பரம பாகவத பெண்பிள்ளையான நீ இப்படி சொல்லலாமா? க்ருஷ்ணனுக்கு எத்தனை ஆபத்துக்கள் வந்தன, கண்ணனை நச்சு பாலை கொடுத்து கொல்லப்பார்த்த பூதனை, சகடமென்னும் சிறு விளையாட்டு பொருளுக்குள் ஆவேசித்து கண்ணனை கொல்லப்பார்த்த சகடாசுரன், என்று எத்தனையோ பேர்கள் வந்தார்களே… அவர்களை எல்லாம் அழித்து நம்மைக்காத்த சரண்யனாயிற்றே அவன்” என்று அவன் பெருமைகளை சொல்ல, “அவர்களை எல்லாம்தான் அழித்தாயிற்றே!” என்று இவள் எழுந்து வராமலே இருக்கிறாள்.
“அம்மா, இத்தனை அடையாளங்கள் சொல்லியும் நீ எழுந்திருக்க வில்லை. இந்த அசுரர்களெல்லாம் நுழைய முடியாத இடமான பாற்கடலில் பாம்பணையில் யோக நித்திரையில் இருக்கும் ஜகத்காரண வஸ்துவை, வித்தை. தம் உள்ளத்துள் வைத்துள்ள ஆய்ப்பாடியைச் சேர்ந்த யோகிகளும், முனிவர்களும் மெல்ல எழுந்திருந்து சம்ப்ரதாய முறைப்படி ‘ஹரிர்:ஹரி ஹரிர்:ஹரி’ என்று ஏழுமுறை சொல்ல அது பேரொலியாக ஒலித்து நம் உள்ளத்தை குளிர்விக்கிறதே! இது கண்டுதான் நாங்களும் எழுந்திருந்து உன்னை எழுப்ப வந்துள்ளோம்.ஆகவே,வந்து எங்களுடன் சேர்ந்து கொள் என்று அழைக்க அந்த சிறுமியும் வந்து சேர்ந்து கொள்கிறாள் என்பது சரித்திரம்!
விளக்கம்:
உள்ளே தூங்குபவளுக்கு பக்தி இல்லை என்று அர்த்தம் இல்லை
இதில் உள்ளே தூங்குபவளுக்கும் வெளியே இருந்து எழுப்புகிறவர்களுக்கும் பக்தியில் வித்தியாசமில்லை. குடம் குடமாய் பாலூற்றினாலும் விஷம் குணம் மாறுவதில்லை. குடம் நிறையபாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் மொத்தமும் விஷமாகி விடுகிறது. அதைப்போல் க்ருஷ்ணனுடைய குணங்களை சிறிது அனுபவித்து விட்டாலும், நஞ்சுண்டாரைப்போலே சிலரை மயங்கப்பண்ணுவதும், சிலரை இருந்த இடத்திலே இருக்கவொட்டாதே துடிக்கப்பண்ணுகையாலும், சிலர் உறங்க, சிலர் குதூகலமாக துள்ளிக்கொண்டு சீக்கிரமாக எழுந்து வந்து விடுகிறார்கள் என்பது பெரியோர் வாக்கு.
(7)
கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்பெண்ணே!
காசும்பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!
ஆனைச்சாத்தன் என்பது வலியன் குருவி அல்லது பரத்வாஜ பக்ஷி எனப்படும்.
இது அதி காலையில் எழுந்து கூட்டம் கூட்டமாக எங்கும் தம் துணையுடன் பறந்து ஒலி எழுப்புவது, அவை கிருஷ்ண கிருஷ்ண என்று கிருஷ்ண கானம் செய்வது போல் இருக்கிறதாம்.
காசும் = கழுத்தில் அணிந்துள்ள) அச்சுத்தாலியும்
பிறப்பும் = ஆமைத்தாலியும்
ஆய்ச்சிகள் வேகமாக கைவலிக்க மறுபடியும் மறுபடியும் சோராமல் தயிர் கடைகிறார்களாம். அதனால் அவர்கள் அணிந்திருக்கும் அச்சு தாலி, ஆமைத்தாலி போன்ற ஆபரணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி எழுப்பும் ஓசையும் கேட்கிறது. இவ்வளவு சத்தத்துக்கு நடுவே நீ எப்படி தூங்குகிறாய்?
நீ நாயக பெண் பிள்ளையாயிற்றே! நாங்கள் கேசவனைப் பாட பாட நீ கேட்டுக்கொண்டே சுகமாக படுத்திருக்கலாமா? பகவதனுபவத்தை உணர்ந்து அதனால் முகத்தில் ப்ரஹ்ம தேஜசை பெற்றவளே! ஹே தேஜஸ்வினி! கதவை திறந்து வந்து எங்களோடு இணைந்து கொள்! என்று அழைக்கிறார்கள்!
(8)
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பறந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துஉன்னை
கூவுவான் வந்து நின்றோம்! கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம்சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்!
கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் (கிருஷ்ணனால் மிகவும் விரும்பப்படுபவளே).
கீழ்திசைப்பக்கத்து ஆகாசமானது வெளுத்தது.
எருமைகள் சிறுவீடு மேய கிளம்பி விட்டது வந்து பார்.” என்கிறாள் ஆண்டாள்.
(சிறு வீடு மேய்வது என்பது பனித்துளி படர்ந்த புற்களை மேய விடிந்தும் விடியாத காலையில் எருமைகள் புறப்படுமாம்.)
ஆண்டாள், “நீ இப்படியே பேசிக்கொண்டிருக்கிறாய், ஆய்பாடியிலுள்ள மற்ற பிள்ளைகள் எல்லாம் கிளம்பிவிட்டார்கள்” என்கிறாள்.
“க்ருஷ்ணனுக்கு குதூகலத்தை கொடுக்கக் கூடியவளான நீ இல்லாது நாங்கள் எங்கே அவனை சென்று காண்பது? அதனால் 'நீ வரவில்லை' என்று அவர்களிடம் சொல்ல, உடனே அவர்கள் அனைவரும் நின்றார்கள். உனக்காகவே எல்லோரும் காத்திருக்கிறோம்”, என்கிறாள்.
குதிரையுருவமெடுத்து வந்த கேசியென்னும் அசுரனுடய வாயைக் கீண்டெறிந்தவனும் மல்லர்க்ளை மாய்ச் செய்தவனுமான அந்த தேவ தேவனை
நாம் அணுகி அடி பணிந்தால் (அவன்,) நமது குறைகளை) ஆராய்ந்து “நாம் இவர்களை தேடிச்சென்று ரக்ஷ¢ப்பது இருக்க, இவர்களே நம்மை தேடி வந்துவிட்டார்களே! என்று ஹாஹா என்று ஆச்சரியப் பட்டு அருளுவன்” என்கிறாள்
அந்த பெண்ணும் இவர்களுடன் சேர்ந்து கொண்டாள் என்பது சரித்ரம்.
(9)
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!
இந்த பாசுரத்தில் கண்ணனுக்கு மிகவும் நெருங்கிய ப்ரியமானவளான பெண்ணை எழுப்பச் செல்கிறார்கள் ஆண்டாளுடன் கூடிய கோபிகைகள்.
பரமாத்மா எல்லோருக்கும் ஆத்ம பந்து. அந்த உரிமையில் “மாமன் மகளே!” என்று ஆண்டாள் அன்போடு அழைக்கிறாள். அந்த கோபிகையோ க்ருஷ்ணனையே மறந்துவிட்டது போல் துயிலணைமேல் படுத்து தூங்குவதால் அவள் தாயரை மாமீ அவளை எழுப்புங்களேன் என்று கேட்கிறாள்.
அவளோ வாய் திறந்து பேசவில்லை. ஒருவேளை அவளுக்கு காதே கேட்கவில்லையோ?அல்லது அனந்தலோ? அனந்தல் என்பதற்கு கர்வம், இறுமாப்பு என்றும் பொருள் கொள்வர். அவள் எதாவது மந்திரத்தினால் கட்டப்பட்டு பெருந்துயிலில் ஆழ்ந்துவிட்டாளோ? என்று ஆண்டாள் கேட்கிறாள்
அந்த பெண்ணின் தாயார் "கண்ணனின் நாமந்தவிர வேறெதுவும் அவள் காதுகளில் விழுவதில்லை. அவன் பெயரை சொல்லிப்பாருங்கள்" என்று சொல்கிறாள். ‘
இவ்வாறு அவன் நாமங்களை பாட அந்த கோபிகையும் தன் துயில் விடுத்து இவர்களுடன் இணைந்தாள்.
(10)
நொற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றாமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ!
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!
தூக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாயே! ஏ.. ஸ்வர்க்கம் போகின்ற அம்மனே! என்று கேலி செய்கிறாள்.
ஒருவாய்ச் சொல்லுங்கொடுக்கமாட்டாரோ? ஏன் வாசல் திறக்கவில்லை?
மணம் கமழும் துளசி மாலை அணிந்த நாராயணனும் நம்மால் மங்களாசாஸனம் பண்ணப்பெற்றுப் புருஷார்த்தங்களைத் தந்தருள்பவனும் தர்மமே வடிவுகொண்டு வந்தாற் போன்றவனுமான இராமபிரானால் முன் ஒரு காலத்திலே யமன் வாயில் (இரையாக) விழுந்தொழிந்த கும்பகர்ணனும் தோல்வியடைந்து (தனது) பேருறக்கத்தை உனக்கே தான் கொடுத்துவிட்டானோ? மிகவும் உறக்கமுடையவளே! பெறுதற்கரிய ஆபரணம் போன்றவளே தெளிந்து வந்து, (கதவைத்) திறந்திடு;
இதில் உள்ள முக்யமான தத்வ விசாரம் ஒன்றை பெரியோர் அருளியிருக்கிறார்கள்
வெளியே இருப்பவர்கள் அவனை அடைய துடிக்கிறார்கள். உள்ளே இருப்பவள் ‘அவனாலன்றோ பேறு’ என்று கொண்டிருக்கிறாள் அதனால் அவன் தரும்போது தரட்டும் என்று கிடக்கிறாள். இரண்டுமே சரிதான். சிலரை துடிக்க வைப்பதும், சிலரை நிச்சிந்தையாக நிஷ்காம்யமாக இருக்க வைப்பதும் அவனது லீலை அல்லவா!
No comments:
Post a Comment