Sunday, May 15, 2016

பழனி மகத்துவம்:





பழனி மகத்துவம்:



‘‘சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
ஜட, கசட, மூட, மட்டி பவ வினையிலே ஜனித்த
தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ’’
- என்று சுவாமி மலையில் நின்று பாடிக் கொண்டிருந்த அருணகிரிநாதரின் மனக்கண் முன் பழநியாண்டவன் தோன்றினான் போலிருக்கிறது, உடனே, ‘‘அதிசயம் அனேகமுற்ற பழநிமலை மீதுதித்த அழக! திருவேரகத்தின் முருகோனே...’’ - என்று அப்பாடலை நிறைவு செய்கிறார். இதைப் படிக்கும்பொழுது ‘பழநி அதிசயங்கள் என்னென்னவாக இருக்கலாம் என்ற கேள்வி எழுவது இயல்பே. அருணகிரிநாதர் காலத்திற்கு முன்னரும், பின்னரும், ஏன் இன்றுவரையிலும் பழநியில் உற்ற அநேக அதிசயங்கள்தான் என்னென்ன?  (திருவேரகம் என்பது ஸ்வாமிமலை)
முதலில் இந்த திருப்புகழைப் பார்ப்போம்
பாடலைக் கேட்க
https://www.youtube.com/watch?v=D9B17JeL2Vw

பாடல் வரிகள்:
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
     தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
     தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
     கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
     கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
     சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
     தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
     அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
     அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
.பாடல் சொல் விளக்கம் .........
=================
சரண கமலாலயத்தில் ... உனது தாமரை போன்ற திருவடிகளில்
அரை நிமிஷ நேர மட்டில் ... அரை நிமிஷ நேர அளவுக்காவது
தவமுறை தியானம் வைக்க அறியாத ... தவ நிலையில் தியானத்தில்
வைத்திட அறியாத
ஜட கசட மூட மட்டி ... பொய்யும் குற்றமும் கொண்ட மூடனான
மட்டி யான்
பவ வினையிலே சனித்த ... பிறப்பதே தொழிலாகக் கொண்டு
பிறந்துள்ள
தமியன் ... தன்னம் தனியனான யான்
மடியால் மயக்கம் உறுவேனோ? ... வறுமையால் மயக்கத்தை
அடையலாமோ?
கருணை புரியாதிருப்ப தென குறை ... கருணை காட்டாமல்
இருப்பது என்ன குறையைக் கண்டு?
இவேளை செப்பு ... இப்பொழுதே சொல்லி அருளவேண்டும்
கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே ... கயிலாயமலை நாதராம்
சிவன் பெற்ற குமரனே
கடக புயமீதி ... வீரக் கடகம் அணிந்த புஜத்தின் மீது
ரத்ன மணியணி பொன்மாலை செச்சை ... ரத்னாபரணம்,
தங்கமாலை, வெட்சிப் பூமாலை
கமழு மணமார் கடப்பம் அணிவோனே ... வாசனை நிறைந்த
கடம்பமாலை இவைகளை அணிந்தவனே
தருணம் இதையா ... தக்க சமயம் இதுதான் ஐயா
மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய ... மிக்க பெருமையைத் தரும்
நீடித்த சுகம்
சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு ... எல்லாவித செல்வம்,
அதிர்ஷ்டம், நிறைந்த பெருவாழ்வு
தகைமை சிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்(து) ...
நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவையாவும் நீ
கொடுத்(து)
(உ)தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா ... உதவி புரிய
வேண்டுகின்றேன், பளபளப்பும் கூர்மையும் உடைய வேலனே
அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க ... சிவந்த
தாமரையிதழ் போன்ற உன் பாதமதனை தினந்தோறும் நான் துதிப்பதற்கு
அரிய தமிழ் தானளித்த மயில்வீரா ... அருமையான் தமிழ்
ஞானத்தை தந்த மயில்வீரனே
அதிசயம் அனேகம் உற்ற பழனிமலை மீதுதித்த ... அதிசயக்
கோலங்கள் பல நிறைந்த பழனிமலை மீது விளங்கித் தோன்றும்
அழக, திருவேரகத்தின் முருகோனே. ... அழகனே திருவேரகத்து
(சுவாமி மலையின்) முருகப்பெருமானே.

முருகனை உல்லாச, நிராகுல, யோக, இத, சல்லாப, விநோத மூர்த்தியாகக் காணும் அருணகிரியார், இவற்றுள் மூன்றாவதான யோக மூர்த்தியாகப் பழநி ஆண்டவனைக் குறிப்பிடுகிறார். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதாரங்களுள் மூன்றாவதாக விளங்கும் மணிபூரகத்திற்குரிய திருத்தலம்தான் பழநி என்பார் வாரியார் சுவாமிகள். தாழக்கோயில் எனப்படும் திருஆவினன் குடி என்பதே ஊரின் பெயர் என்றும், ‘பழநி’யை மலையின் பெயர் என்றும் கூறுவார் உண்டு.
பழங்காலத்தில் ஆவியர் குலத்தில் பிறந்த குறுநில மன்னர்கள் இவ்விடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். ஆவியருடைய நல்ல குடி ஆதலின் ஆவிநன்குடி என்று பெயர் வந்ததாகக் கருத்து உண்டு. ஆ(காமதேனு), இனன்(சூரியன்), கு(பூமி) டி(அக்னி) ஆகியோர் பூஜித்த தலமாதலால் ஆவினன்குடி என்று அழைக்கப்படுவதாகவும் கூறுவர். பழங்காலத்தில் பழநி மலையைப் ‘பொதினி’ என்றும் அழைத்தனர்.
ஆவினன்குடியைப் போலவே பொதினியாகிய பெருங்கல்லிலும் முருகன் இருந்து மக்களைக் காத்தான் என்பதற்குரிய குறிப்புகள் சங்ககால நூல்களில் உள்ளன என்கிறார் வகீச கலாநிதி கி.வா.ஜகன்னாதன் அவர்கள். அது மலைத் தொடரும் அன்று, சிறு குன்றும் அன்று என்பதால் ‘பெருங்கல்’ எனப்பட்டது. ஆவினன்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கடையேழு வள்ளல்களுள் ஒருவனான பேகனை, ‘பெருங்கல் நாடன் பேகன்’ என்று பாடுகிறார் புலவர் பெருஞ்சித்திரனார்.
அதன் உச்சியிலே அருந்திறற் கடவுள் நின்று காக்கிறது என்று கூறப்படுவதால் அது பழநியைக் குறிப்பதாகவே கொள்ளலாம். பழநி எனும் பெயரைக் கேட்டதுமே விபூதி, பஞ்சாமிர்தம், மலையின் மலைக்க வைக்கும் அழகு, வேலாண்டியாக ஞான தண்டத்துடன் மேற்கு திசை நோக்கிக் குடி கொண்டிருக்கும் பழநி ஆண்டவன், விநாயகருக்கும், முருகனுக்கும் இடையே நாரதர் நடத்தி வைத்த மாதுளங்கனித் திருவிளையாடல், நவபாஷாணத்தாலான ஒப்பற்ற முருகன் திருவுருவம் எல்லாம் நினைவுக்கு வரும். சித்தன் வாழ்வு, பொதினி, பழனாபுரி, சிவகிரி போன்ற பல பெயர்களை உடையது பழநி.
ஊர் பெயரும் மலையின் பெயரும் ஒன்றாக அமைந்த பல திருத்தலங்களுள் ஒன்று இது. பிற உதாரணங்கள்: சுவாமிமலை, திருச்செங்கோடு, சென்னிமலை, திருவண்ணாமலை. பழநியைச் சிறப்பித்து, ‘‘காசியின் மீறிய பழநி’’, ‘‘பிரகாசம் பழனாபுரி’’, “பதினாலுலகோர் புகழ் பழநி’’ என்றெல்லாம் பாடும் அ ருணகிரிநாதர், 97 பாடல்களை ‘திருப்பழநி வகுப்பு’ என்ற ஒரு தனி தொகுப்பையும் பாடியுள்ளார்.
திருமுருகனின் தந்தை இருப்பது கயிலைமலை, திரிபுரம் எரிக்க அவர் எடுத்தது மேருமலை, பார்வதியை அவருக்களித்தது இமயமலை, மாமன் ஆயரைக் காக்க குடையாய்ப் பிடித்தது கோவர்த்தனமலை, அவரது வேல் பிளந்தது கிரௌஞ்சமலை, விரும்பிச் சென்றமர்ந்தது பழநிமலை, தெய்வயானையைத் தந்தது பரங்குன்றம், வள்ளியை அளித்தது வள்ளிமலை - இவ்வாறு சுவைபடக் கூறுகிறார் புலவர். சே.த. ராமலிங்கம் பிள்ளையவர்கள். எனவேதான் ‘குறிஞ்சிக் கிழவன்’ என்று குவலயம் ஓதுகின்ற முருகப் பெருமானை ‘மலைக்கு நாயக’, ‘சிலோச்சிய’, ‘குறிஞ்சி மகிழ் அயிலா’ என்றெல்லாம் அருணகிரியார் விளிக்கிறார் போலும்!
அருணகிரிநாதருக்கு அதிசயங்கள் அநேகம் காட்டிக் கொடுத்த பழநி மலை எவ்வாறு தோன்றியது?
கயிலை மலையில் நாள்தோறும் சிவபெரு மானைக் குறித்துப் பூஜை செய்து வந்தார் அகத்திய முனிவர். அவரைத் தென்னாட்டிலுள்ள பொதிய மலைச்சாரலில் சென்று தவம் புரியுமாறு கூறினார் சிவபெருமான். அகத்தியரது தனி பூஜைக்காகத் தமது அம்சமாகிய சிவகிரி, சக்தியின் அம்சமாகிய சக்திகிரி ஆகிய இரு மலைகளை அளித்து, தமிழ் மொழி அறிவையும் வழங்கினார். இறைவனருளால் பந்து போல லேசாகத் தோன்றிய இரு மலைகளையும் சுமந்த வண்ணம் நடக்க ஆரம்பித்தார் அகத்திய முனிவர்.
கேதாரத்தை அடுத்த பூர்ச்சவனத்தை அடைந்த தும் அந்த இரு மலைகளும் கனக்கத் தொடங்கின. தொடர்ந்து அவற்றைச் சுமக்க முடியாததால், அந்த மலைகளை அங்கேயே விட்டு விட்டுச் சென்றார் அகத்தியர். நெடுந்தொலைவு சென்றபோது எதிரே உயர்ந்த தோற்றமும், பரந்த மார்பும், அசுர உருவமும் கொண்ட ஒருவன், ஒரு பெண்ணுடன் நடந்து வருவதைக் கண்டார். அவனது தோற்றத்துக்குச் சற்றும் பொருந்தாத வகையில் நெற்றியில் பளிச்சென்று திருநீறு துலங்கியது. தன்னைக் கண்டு வணங்கிய அவனிடம், ‘‘நீ யாரப்பா?’’ என்று அன்புடன் வினவினார் அகத்தியர்.
‘‘என் பெயர் இடும்பன்; இவள் என் மனைவி இடும்பி, நான் சூரபத்மாதியர்களுக்கு வில் லாசிரியனாக விளங்கியவன். முருகப் பெருமானது கருணைக்கோலம் கண்டு அவனது பக்தனாகி இப்புறம் வந்து விட்டேன். அடியேனுக்குத் தாங்கள் இடும் பணி எதுவாக இருந்தாலும் சிரமேற்கொண்டு செய்வேன்’’ என்று கூறி முனிவரை வணங்கினான் இடும்பன். பூர்ச்சவனத்தில் தாம் விட்டுவந்த மலைகளைச் சுமந்து கொண்டு வரும் பணியைச் செய்யக்கூடிய வல்லமை உடையவன் இவனே என்றெண்ணிய அகத்தியர், நடந்தவற்றை இடும்பனிடம் விவரித்தார்.
பூர்ச்சவனம் செல்லும் வழியை விளக்கி அத்துடன் ‘ஷடாக்ஷர’ மந்திரத்தையும் உபதேசித்து அவனை வழியனுப்பி வைத்தார். அகத்தியர் காட்டிய பாதையில், கந்தனைக் கருத்திலும் அவன் நாமத்தை நாவிலும் வைத்து மனைவியுடன் பூர்ச்சவனத்தை நோக்கிச் செல்லலானான் இடும்பன். காடும், நதியும், மலையும் கடந்து பூர்ச்சவனம் சென்றடைந்தபோது, இறைவன், இறைவியின் அருளே திரண்டாற்போல் நின்ற சிவகிரி-சக்திகிரி எனும் அப்புண்ணிய மலைகளைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தான் இடும்பன்.
அவற்றை மனமாற வணங்கி மனைவியுடன் வலம் வந்து ஷடாக்ஷர மந்திரத்தை ஜபித்த வண்ணம் இருந்தான். கந்தபிரானருளால் பூமி பிளக்க, அப்பிளவிலிருந்து எட்டு பாம்புகள் தோன்றின. வானத் திலிருந்து பிரம்ம தண்டு ஒன்றும் வந்தது. பாம்புகளைப் பக்கத்திற்கு நாலாகப் பிரித்து உறிபோல் ஆக்கி இரு மலைகளையும் உறியில் வைத்து, பிரம்ம தண்டத்தால் அவற்றை இணைத்தான் இடும்பன். மலைகளைத் தூக்கி, காவடி போல் தோளில் வைத்து நடக்கத் தொடங்கினான்.
கணவனுக்கு மலைகளின் பாரம் தெரியாமலிருக்க இடும்பியும் இடைவிடாது ஆறெழுத்து மந்திரத்தை ஜெபித்த வண்ணம் அவனைப் பின் தொடர்ந்தாள்.
வெகு தொலைவு சென்றபின், வழி இரண்டாகப் பிரிந்தது கண்டு சற்று மயங்கி நின்றான் இடும்பன். அடியார்க்கு நல்ல பெருமாளாகிய முருகன், காற்றிலும் கடுகிச் செல்லும் குதிரை மீதேறி வேட்டைக்குச் செல்லும் அரசகுமாரன் போல் வேடந்தாங்கி, இடும்பன் எதிரே வந்தான்.
இடும்பனுக்குச் சரியான பாதையைக் காட்டிக் கொடுத்தான், பின் மாயமாய் மறைந்தான். இதே போன்ற ஒரு நிகழ்ச்சி பிற்காலத்தில் அருணகிரிநாதர் வாழ்விலும் நடந்தது. வயலூரிலிருந்து விராலிமலை செல்லும் வழி தெரியாமல் நின்ற அவருக்கு, முருகப்பெருமான் வேடன் உருவில் வந்து வழிகாட்டிப் பின் மறைந்து போனான். இந்நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து,
‘‘வாதனை தவிர்த்த குருநாதனும், வெளிப்பட மகா
அடவியில் நிற்பதோர் சகாயக்காரனும்’’
திருவேளைக்காரன் வகுப்பு- என்றார் அவர். இடும்பனும், வந்தவன் முருகன் என்றுணராமல் இளவரசன் காட்டிய பாதையில் நடந்தான். தொடர்ந்து செல்லமுடியாதபடி, பசியும், பாரமும் அவனைத் தளர்த்தின. மலைகளை ஓரிடத்தில் இறக்கி வைத்துவிட்டு, மனைவி பறித்து வந்த கனிகளை உண்டு இளைப்பாறினான். இடும்பி, அந்த மலைச்சாரலின் அழகை அனுபவித்த வண்ணம் சற்று தொலைவு தனியாக நடந்து சென்றாள்.
உறங்கிக் கண் விழித்த இடும்பன், ‘முனிவர் காத்திரு ப்பாரே, காலதாமதம் ஆகிவிட்டதே’ என்று எண்ணி பரபரப்புடன் எழுந்தான். மலைகளைத் தூக்க முயன்றான். அவை முன்பைவிட அதிகமாக கனத்தன. மலைகளை உற்றுப் பார்த்த போது, சிவகிரி மேல் ஒரு புதிய குரா மரம் தெரிவதைக் கண்டான். அது மட்டுமா, அந்த மரத்தடியில், ஒரு சிறுவன் மரத்தடியில் நிற்கக் கண்டான். (பாலசுப்ரமண்யக் கவிராயரின் பழநித் திருத்தல புராணம்) இடும்பன் சிறுவனை நோக்கி, ‘‘சிறுவ! நீ ஏன் இங்கு தனியாக நிற்கிறாய்? வழி தவறி வந்துவிட்டாயோ?’’ என்று கேட்டான். பதில் ஏதும் கூறாமல் புன்னகை பூத்த சிறுவன் மீது கோபம் கொண்டான் இடும்பன். அசுர குணம் தலை தூக்கியது. ‘‘சிறுவ! நீ இம்மலையை விட்டு இறங்கு; நான் ஒரு கொலைகாரன்; நினைவிருக்கட்டும்; என்று கர்ஜித்தான். ‘‘ஒரு பெரிய மலையைத் தூக்கும் வலிமை உடைய உனக்கு நான் ஒரு பாரமா?
முடியுமானால் என்னையும் சேர்த்துத் தூக்கு’’ என்று புன்முறுவலுடன் கூடிய சிறுவன் மேல் திடீரென்று பாய்ந்தான் இடும்பன். அடுத்த வினாடியே பெரிய அலறலுடன் கீழே விழுந்து மாண்டான். இடும்பனின் அலறலைக் கேட்டு ஓடி வந்தாள் இடும்பி. கணவனின் கோலம் கண்டு கதறி அழுதாள். அவள் கண்களுக்குக் குரா வடிவேலன் காட்சியளித்தான். தன் கணவன் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்தருளி அவனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்குமாறு வேண்டி நின்றாள். சற்று நேரத்தில் இடும்பனும் கண் விழித்து எழுந்தான்.
குராவடிக் குமரனிடம் பிழை பொறுத்தருளுமாறு வேண்டினான். இடும்பனை நோக்கி குகன் கூறினான்: ‘‘இம்மலை இங்கேயே இருக்கட்டும். இதில் நான் விரும்பி அமர்வேன். என்னுடன் நீயும் தங்கு வாயாக! என்னைக் காண வரும் பக்தர்களும் தங்கள் நிவேதனப் பொருட்களைக் காவடி கட்டி சுமந்து கொண்டு வந்து உன்னை தரிசித்தபின் என்னைக் காண வரவேண்டும்’’ என்று கூறி ஆசி கூறினான்.
இதற்குள் பிரம்ம தண்டமும் பாம்புகளும் அகத்தியரிடம் செய்தியைத் தெரிவிக்க, உடனே அங்கு வந்த அகத்தியர் முருகவேலை வணங்கி ‘‘நீ எழுந்தருள விருப்பமுடையதாயின் இம்மலை இங்கேயே இருக்கட்டும்’’ என்று கூறினார். இதையே அருணகிரிநாதர்,
‘‘பரகிரி உலாவு, செந்தி மலையினுடனே, இடும்பன்
பழநிதனிலே இருந்த குமரேசா’’
- என்று கதிர்காமத்தில் பாடுகிறார். பழநியில் சிவகிரியும் சக்திகிரியும் அடுத்தடுத்து இருந்தாலும் முருகப்பெருமான் சிவகிரி மீதமர்ந்து இடும்பனுக்கு அருள்புரிந்தமையால் அச்சிறப்புப் பெயரே மலைக்கு வழங்கலாயிற்று. ‘‘பழநிச் சிவகிரி மீதினில் வளர் பெருமாள்’’ (கலக்கயல் திருப்புகழ்); ‘‘அருள்சேர் பழநிச் சிவகிரி வாழ் ஐயா வருக வருகவே’’ (பழநிப் பிள்ளைத்தமிழ்); ‘‘பழநிச் சிவகிரிதனிலுறை கந்தப் பெருமாளே’’ (புடவிக்கணி திரு ப்புகழ்)
இவை தவிரவும் அத்வைத சாஸ்திரத்தின் சாரத்தைப் பிழிந்து கொடுக்கும் ‘குககீதை’ என்ற நூல், அகஸ்தியரின் வேண்டுகோளின்படி ‘குகனே பிக்ஷு வடிவில் வந்து இடும்பனுக்கு உபதேசித்தான்’ என்கிறது. இவ்வரிய உபதேசம் பெற்ற இடும்பன், ஷண்முகனைப் பரமேஸ்வர ரூபம் காட்டி அருள வேண்டிய போது, யுத்தகளத்தில் சூரனுக்கும் வீரவாகுவிற்கும் காட்டிய விசுவரூப தரிசனத்தை இடும்பனுக்கும் காட்டியருளினான் என்ற குறிப்பு அந்நூலில் வருகிறது.
இவ்வாறு இடும்பனைத் தடுத்தாட்கொண்ட குராவடி வேலவனையும், இடும்பனையும் பழநிமலைப் படிகளில் ஏறிச் செல் லும்போது காணலாம். பெரும்பான்மையான முருகன் கோயில்களில் தனி இடும்பன் சந்நதியைக் காண்கிறோம். பழநியில் இடும்பனுக்கு, கள்ளும் சுருட்டும் நைவேத்தியம் செய்வதாகக் கேள்விப்படுகிறோம். அசுரனாயிற்றே, அதனால்தான் போலிருக்கிறது!
=====
பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருகோயிலின் உள்ளே தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது சித்தர் போகரின் ஜீவசமாதி.திருநந்தி தேவரே பல்வகை பிறப்புற்று பின் போகராக தோன்றினார் என்பர்.இவரது காலம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு.தனது சீடர் புலிப்பாணி சித்தருடன் பழனி மலையில் மேல் தான் அமைத்த திருக்கோயிலின் கண் நவபாஷான கட்டினால் தண்டாயுதபாணி சுவாமியின் அருள் திருமேனியை நிறுவினார்.ஆண்டவன் வலக்கரத்தில் உள்ள தண்டம் ஞானத்தின் சின்னமாக கருதபடுகிறது. இதுவே போகர் ஜீவ சமாதி அடைந்த இடம். இங்கு இன்றும் போகர் வழிபட்ட அருள்மிகு புவனேஸ்வரி அம்மை, மரகதலிங்கம் , வலம்புரி சங்கு ஆகியவற்றை காணலாம். இச்சன்னதியில் இருந்து தண்டாயுதபாணி திருவடி நிலைக்கு ஒரு சுரங்க பாதை உள்ளது. கடைசியாக இதன் வழியாக சென்ற போகர் திரும்பாமல் இதனுள் அமர்ந்துவிட்டார் என்பர் .
 போகரை சமாதியில் வைத்தது அவரது சீடர்களில் ஒருவர் கோரக்க சித்தர் ...தன்னை பழனியில் சமாதி வைத்து நாகப்பட்டினம் செல்லுமாறு கோரக்கரை பணித்தார் போகர் ..பின்பு சமாதியில் இருந்து எழுந்து நாகப்பட்டினம் சென்று கோரக்கரை சமாதியில் வைத்தார் போகர் ..என சித்தர் பாடல்கள் தெரிவிக்கின்றன ..போகர் அருள் இருந்தால் மட்டுமே பழனிக்கு வரவும் முருகன் அருளும் கிடைக்கும்
 பதினெண் சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படும்
போகர் பெருமான் ககன குளிகையின் மூலம் விண்
வெளியில் பறந்து செல்லும் ஆற்றல் பெற்றவர்.
இவர் ஒருமுறை வெளிநாட்டிலுள்ள மூலிகைகளை
ஆராய்ந்து அறிவதற்காக நாடு விட்டு நாடு பறந்து
சென்ற போகர் சீன தேசத்தில் இறங்கி ஆய்வுகள்
செய்யத் தொடங்கிய போது இவ்வுலகின் சாதாரண
மக்களைப் போல் இல்லற வாழ்வில் ஈடுபட்டு அங்கேயே
வசிக்கத் தொடங்கி விட்டார்.இதனால் அவரிடமிருந்த அற்புத சக்திகளும்,ஆற்றல்களும்,ஒவ்வொன்றாய் மறைந்தது.போகருடைய சித்திகள் எல்லாம் சக்தி இழந்து போய்விட்டது.
போகரிடம் சீடராக இருந்தவர்களில் "புலிப்பாணி"மிகவும்
விசுவாசத்துடன் பிரியமான சீடனாக இருந்து வந்தார்.
அதனால் அவருக்கு அனைத்து விதமான சித்துக்களையும்
கற்றுக்கொடுத்திருந்தார் போகர் பெருமான். தமது குருவிற்குத் தெரிந்த அனைத்து சித்துக்களும் தமக்கு கைவரப்பெற்ற பிறகும் கூட புலிப்பாணி தமது குருநாதரை விட்டுப் பிரியாமல் இருந்தார். அப்படிப்பட்ட நிலையில்தான் மூலிகைகளின் ஆய்விற்கு சீனாவிற்குச் சென்ற தமது குரு நெடு நாட்களாகியும் திரும்பாதது கண்டு கவலை அடைந்த புலிப்பாணி குருநாதரைத் தேடி ஆகாய மார்க்கமாய் புறப்பட்
டுச்சென்று சீனாவில் கண்டறிந்து சக்தியிழந்த நிலையில்
இருந்த அவரை மீட்டு தமது முதுகின் மீது ஏற்றிக்கொண்டு
ஆகாய மார்க்கமாக தங்களது இருப்பிடமான பழனி மலை
அருகிலுள்ள "கன்னி வாடி" மலையை வந்தடைகிறார்.
தனது குருவான போகர் சகல விதமான சித்திகளின் ஆற்றலை
இழந்து சாதாரண மனிதனைப் போல் இருப்பதைக்கண்டு
புலிப்பாணி துயரமுற்று கண்ணீர் விட போகர் அவரைத்தேற்றி
சீடனே !எனது அருளாலும்,ஆசியாலும் உனக்கு அஷ்டமா
சித்திகளும் கைவரப்பெற்றுள்ளன.நீ அவற்றை எனக்கு
குருவாக இருந்து போதித்து விட்டால் நான் மீண்டும் எல்லாம்
வல்ல சித்தனாக ஆகி விடுவேன் என்று கூற புலிப்பாணி
ஆறுதல் பெற்றாலும்,தமது குருவை சீடனாக ஏற்க மனம்
தடுமாறுகின்றார்.
அப்போது போகர் தந்தைக்கு உபதேசித்த முருகப் பெருமானின்
கதையைச் சொல்ல புலிப்பாணி ஆறுதல் அடைகின்றார்.பிறகு
இருவரும் ஒரு முடிவிற்கு வருகின்றனர்.அதன்படி ஒரு தண்டம்
ஒன்றை நிறுவி அதற்கு புலிப்பாணி அனைத்து கலைகளையும்
உபதேசிக்க அதன் அருகில் அமர்ந்து போகர் கேட்டு எல்லா வித
சித்துக்களும் மீண்டும் கைவரப்பெறுகிறார். அதன் பிறகு உலக மக்கள் அனைவரும் நோய்களில் இருந்து சுலபமாக நிவாரணம் பெரும் விதமாக "நவபாஷாண முருகன்" திரு உருவ சிலையை வடிக்கின்றார்.அதற்கு புலிப்பாணியின் மூலமாக தாம் சித்து நிலையை அடைந்ததை நினைவு கூறும் பொருட்டு தாம் அமைத்த நவபாஷாண விக்ரகத்திற்கு போகர் "தண்டாயுதபாணி"என்று பெயர் சூட்டினார்.இப் பெயரையே மக்களும் தங்களின் குழந்தைகளுக்கு முருகப் பெருமானின்
பெயராக சூட்டி மகிழ்கின்றனர்.
போகருக்கு பின் அவரது சீடர் புலிப்பாணி சித்தர் அவரது பணிகளை தொடர்ந்து அங்கு செய்து வந்தார் .அவரது ஜீவ சமாதி பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. புலிப்பாணி ஆஸ்ரம் என்று இன்றும் அந்த இடம் அவரது கருவழி பரம்பரையினர் வழிபட்டு வரப்படுகிறது .மேலும் புலிப்பாணி பரம்பரையினர் தான் இன்றும் பழனி மலையின் மேல் அமைந்துள்ள போகர் சமாதியில் பூஜைகள் செய்து வருகின்றனர் .
முருகப் பெருமானின் நவ பாஷாண திருமேனி ஆண்டிக்
கோலத்தில் தண்டத்தை தாங்கிய திரு உருவமாக உள்ளது.
தண்டம் -கழி -கம்பு
ஆயுதம் -ஆயுதம் போல் உள்ளதால்
பாணி - புலிப்பாணி
போகர் பெருமான் தான் வடித்த விக்ரகம் மனிதகுல சமுதாயம்
தொடர்ந்து பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் பழனி மலையில்
பிரதிஷ்ட்டை செய்தார்.இத்திரு உருவச் சிலையில் அபிஷேகம்
செய்கின்ற விபூதி,சந்தனம்,பன்னீர்,தேன்,பஞ்சாமிர்தம்,சிலையின்
"நவபாஷாண கட்டு மருந்தின்"சத்தைப் பெற்று பிரசாதமாக
மாறுகின்றது.இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள நாட்
பட்ட கொடிய நோய்களையும் போக்குகின்றது.
இப்படி ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்களை கொடிய
பிணிகளில் இருந்து மீட்டு வந்த தண்டாயுதபாணி நவபாஷாண
திருமேனியின் பல இடங்களில் சிதிலம் அடைந்து விட்டதால்
இப்போது அபிஷேகங்கள் முன்பு போல் செய்வதில்லை.
இப்போது தேவஸ்தானம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்
கலப்படமில்லா (ஒரிஜினல்)பொருட்களைக் கொண்டு அபிஷேகம்
செய்யப்படுகின்றது.இப்போது
மூலவருக்கு :-நவ பாஷாண தண்டாயுதபாணி முருகனுக்கு
ஆறு கால பூசை -
பதினாறு வித அபிஷேகம் -
எட்டு வித வேடம் -
1-சாது,
2-சன்னியாசி,
3-வேடர்,
4-விருத்தர்,
5-சண்முகர்,
6-சுப்பிரமணியர்,
7-வேதியர்,
8-இராஜ அலங்காரம்,
என எட்டு வித அலங்காரம் செய்யப்படுகின்றது.
நவபாஷாண முருகனின் திருமேனியில் இராக்கால பூசையின்
போது சந்தனக் கட்டையை அரைத்து சிரசில் வைத்து விடுவர்.
அதிகாலை "விழா பூசை"யின் போது "கவ்பீன தீர்த்தம்"மற்றும்
சிரசில் வைத்த சந்தனமும் வழங்குவர்.இது ஒரு சிலருக்கு
மட்டுமே கிடைக்கும்.இதனைப் பெறுபவர் வாழ்வில் அனைத்து
துன்பங்களும் நீங்கி,சந்தோசமும்,மிகப்பெரிய பொருளாதார
முன்னேற்றமும் பெறுகின்றனர்.

தைப் பூசம் = அன்னையிடம் வேல் பெற்ற நாள்
* பங்குனி உத்திரம் = திருமண நாள்
* வைகாசி விசாகம் = பிறந்த நாள்
* ஆடிக் கிருத்திகை = அறுவரும் ஒன்றான நாள்
* ஐப்பசியில் சஷ்டி = சூர சங்காரம்
* கார்த்திகையில் கார்த்திகை = தீபம் ஒளியாய் காணும் நாள்

====
வேல்மாறல் மஹாமந்திரம்
 இது வள்ளிமலைத் திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் அருளியது. பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதன் மகிமை அளவில்லாதது.ஒரே செய்யுளே மாறி மாறி வருவது போல் அமைந்திருக்கும் இத்துதியைக் கவனமாகச் சொல்ல, எதிர்பாராமல் வரும் ப்ரச்னைகள் நீங்கும்.
அருணகிரியாரின் வேல் வகுப்பு மந்திரத்தை முன்னும் பின்னுமாக ஒரு கணக்கில் அடுக்கி இந்த வேல்மாறல் செய்திருக்கிறார் வள்ளிமலைத் திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள் .
சம்ஸ்கிருதம் போல், தமிழிலும் உச்சரிப்புக் கவனத்துடன் சொல்ல வேண்டிய துதிகள் கணக்கில்லாமல் உள்ளன. அவற்றுள் ஒன்று இது.
வேலும் மயிலும் சேவலும் துணை
முதலில் அருணகிரிநாதரி வேல் வகுப்பு, இதன் அர்த்தம் தெரிந்துகொள்ள
பாடலை பலமுறை படிக்கத் தானே தெரியும்
முருகன் வேல் எப்படி இருக்கிறது? அது என்னவெல்லாம் செய்யும் என்பதை
விளக்குவதே இந்த வகுப்பு.

1 பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும்

2 பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும்

3 பழுத்தமுது தமிழப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும்

4 பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும்

5 சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குமுறும்
இடுக்கண்வினை சாடும்

6  சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும்

7  துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கொர்துணை யாகும்

8  சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழு
மறத்தைநிலை காணும்

9  தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரிக்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும்

10,  தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும்

11 தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும்

12  சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும்

13  திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும்

14  திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும்

15 சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும்

16 திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தன் என் துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே.

வேல் மாறல் அமைக்கும் விதம் வேல் வகுப்பு நன்றாகப் தெரிந்ததும் சொல்கிறேன்.
 

No comments:

Post a Comment