Thursday, May 12, 2016

மூன்று கேள்விகள்




ஒரு ராஜாவுக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்தததாம்.

 
நாம ஒரு காரியம் செஞ்சா, அது நல்லபடியாக அமையணும். அது எப்படின்னு  யோசிச்சார்.  தொடங்கிற நேரம், காரியம் செய்யற விதம், அதோட முக்கியத்துவம்  இந்த மூணும் சரி ஆச்சுன்னா அது நிச்சயமா வெற்றி அடையும் என்று  முடிவு  கட்டினார்.

 
ஒரு காரியம் வெற்றி அடையணும் ன்னா அதைத் தொடங்க எது சரியான நேரம்? காரியம் சரியாக நடக்க யார் கிட்டே ஆலோசனை கேக்கணும்? யார் கிட்டே கேட்கக்கூடாது? நாம செய்யவேண்டிய முக்கியமான காரியம் எது? இப்படி தன் சந்தேகத்தை மூன்று கேள்விகளா பிரித்துக்கொண்டார். வழக்கமா எல்லா ராஜாவும் பண்றா மாதிரி, தன் சந்தேகத்தைத் தன் ராஜ்ஜியம் முழுமைக்கும் பறை அடிச்சு தெரிவிச்சு நல்ல பதிலுக்கு பரிசு என்று அறிவித்தார்.

 

நிறைய பேர் வந்தாங்க.  முதல் கேள்விக்கு ஒவ்வொரு  விதமா பதில் சொன்னாங்க. ஒருத்தன் சொன்னான். பஞ்சாங்கம் பார்த்து நாள் கிழமை பார்த்து காரியம் தொடங்கணும் னான்,  இன்னொருத்தன் சொன்னான்.  ராஜாவே,ஒவ்வொரு காரியமும் தொடங்க  நல்ல நேரம் பார்த்து பார்த்து செய்ய முடியவே முடியாது,

எல்லா காரியமும் முக்கியம் தான். எல்லாத்தையும் செய்திட்டிருக்கணும் தான், அதிலே எது முக்கியமோ அதுக்கு அதிக கவனம் குடுக்கணும் அவ்ளோதான் என்றான். வேறு ஒருத்தன் சொன்னான். ராஜாவே எல்லாத்தையும் பார்த்து பார்த்துச் செய்ய முடியாது. அறிவாளிகள் கமிட்டி ஒன்னு போட்டு அவங்க சொல்றபடி செய்யலாம் என்றான், ஒருத்தன் சொன்னான். முன்கூட்டியே எல்லாம் தெரிஞ்சுக்க மந்திரவாதியாலேதான் முடியும். அதனாலே, அவங்களை வைச்சு காரியம் தொடங்கலாம். என்றான்.

 

ரெண்டாவது கேள்விக்கும் வித விதமா பதில் வந்தது.  சரியான ஆலோசனை சொல்ல தகுந்தவர்கள் துறவிகள், மத குருக்கள், டாக்டர்கள் என்று  இப்படி பல வித யோசனைகள் சொன்னார்கள்.

 

மூன்றாவது கேள்வியான முக்கிய காரியம் எது என்பதற்க்கும் பல பதில்கள் வந்த்ன. நாட்டின் பாதுகாப்பு, கல்வி, மதம் என்று பல விஷயங்கள் சொன்னார்கள். எதுவும் ராஜாவுக்கு திருப்தியாக படவில்லை. தன் ராஜ்ஜியத்தில் ஒரு மூலையில் உள்ள ஒரு காட்டில் ஒரு  நல்ல துறவி  இருக்கிறார் என்று கேள்விப்பட்டு ராஜா அவரை கேட்கலாம் என்று முடிவு எடுத்து காட்டுக்குப் போனார்

 

ஒரு சாதாரண ஆள் மாதிரி மாறு வேஷம் போட்டுகிட்டு காட்டிலே தனிமைலே வாழ்ந்து கொண்டிருக்கிற அந்த துறவி கிட்டே போனார். ராஜா போன சமயத்திலே துறவி தன் குடிசைக்கு முன்னாடி எதோ  தோட்ட

வேலைக்காகத் தோண்டிக்கொண்டிருந்தார். புது ஆளைப் பார்த்ததும். துறவி அவருக்கு வணக்கம் சொல்லிட்டு அவர் பாட்டுக்கு தோண்டிக் கொண்டிருந்தார். துறவிக்கு வயது அதிகம், பாவம் ஒவ்வொரு தோன்டலுக்கும் அவருக்கு மூச்சு வாங்கியது,  ராஜா துறவிகிட்டே தன் மூனு கேள்விகளைச் சொல்லி பதில் சொல்லுங்களேன் என்று கேட்டார். துறவி கேள்வி கேட்ட ஆளைப் பார்த்தார். பதில் ஒன்னும் சொல்லாமல் தன் பாட்டுக்கு மண் தோண்ட ஆரம்பித்தார்.

 

ராஜா துவண்டு போயிருக்கிற துறவியைப் பார்த்தார். “ரொம்ப களைப்பா இருக்கிறீர்களே சாமி, நான் கொஞ்சம் உதவி செய்யட்டுமா” ன்னு ஆதரவாகக் கேட்டார்.  ஆஹா, ரொம்ப நன்றி ன்னு சொல்லி துறவியும் கடப்பாறையை ராஜா கிட்டே கொடுத்துட்டு பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டார். ராஜாவும் கொஞ்சம் செடிகள் நடவு செய்ய ஓரிரண்டு குழிகள் தயார் செய்து விட்டு மீண்டும் துறவியிடம் தன் கேள்விகளைப் பற்றி கேட்டார். அப்போதும் துறவி ஒன்றும் சொல்லவில்லை. தன் கைகளை நீட்டி ”நன்றி அய்யா. நீங்கள் சற்று ஓய்வெடுங்கள். நான் இன்னும் கொஞ்சம் வேலை செய்கிறேன்” என்று சொல்லி ராஜாவிடமிருந்து கடப்பாறையை கேட்டார். ராஜா கடப்பறையத் தராமல் தானே மீண்டும் வேலை செய்ய தொடங்கினார்.

 

சூரியனும் மறையத் தொடங்கி இருள் கவ்வ ஆரம்பித்தது. ராஜா தன் வேலையை நிறுத்தி கடப்பாறையைk கீழே போட்டார். “துறவியாரே என் கேள்விக்கு பதில் கேட்டு உங்களிடம் வந்தேன். பதில் சொல்லவிருப்பம் இல்லை என்றால் சொல்லிவிடுங்கள். நான் போய் விடுகிறேன்” என்றார்.

 

அப்போது யாரோ ஓடி வரும் சப்தம் கேட்டது.  “வாருங்கள் அய்யா, யாரென்று பார்ப்போம் என்று ராஜாவை அழைத்தார் துறவியார்.

 

தாடிக்காரன் ஒருவன் காட்டின் உள்பகுதியிலிருந்து துறவியின் குடிசை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தான். வயிற்றில் வெட்டுக்காயம். இரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது. ரத்தப்போக்கை நிறுத்தும் வகையில் கையால் அழுத்திபிடித்துக்கொண்டே குடிசை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தான்.  இவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்ததும் அவனால் நிற்க முடியாமல்  மயங்கி கீழே விழுந்தான்,

 

துறவியும் ராஜாவும் உடனே அவனுடைய ஆடைகளை களைந்து வயிற்றில் உள்ள பெரிய காயத்தைப் பார்த்தனர், உடனே ராஜா அவனுடைய காயத்தைக் கழுவி தன் கைக்குட்டையைக் கொண்டு கட்டுபோட்டார். இரத்தப்போக்கு நிற்காமல் போக, துறவி கொடுத்த துண்டையும் சேர்த்துக் கட்டினார்.  இரத்தம் நிற்கும் வரை அவனுக்கு சிகிச்சை செய்து ஓரளவு இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தினார். கொஞ்சம் நினைவு திரும்பிய தாடிக்காரன்  தண்ணீர் கேட்டான், ராஜாவே அவனுக்கு நல்ல தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து அவனை குடிக்க வைத்தார்.  குடிசையின் உள்பகுதியில் ஒரு படுக்கையில் அவனை இருவரும் படுக்க வைத்தனர். இப்போது நன்றாக இருட்டி விட்டது.  களைப்பு மிகுதியால் ராஜாவும் தன்ன மறந்து அருகிலேயே உறங்கிவிட்டார்.

 

விடிந்து மிக நேரம் ஆகியும் ராஜா உறக்கம் தெளியவில்லை. திடீரென்று உறக்கம் விழித்தார். தான் எங்கு இருக்கிறோம் என்ன செய்தோம்? இந்த தாடிக்காரன் யார் எனை ஏன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என கொஞ்சம் யோசித்தவருக்குக் சட்டென்று நேற்று நடந்தவை எல்லாம் நினைவுக்கு வந்தது.

 

“என்னை மன்னியுங்கள்” என்று ராஜாவிடம் தீனக்குரலில் பேச ஆரம்பித்தான் தாடிக்காரன்.

 

“உங்களுக்கு என்னைத் தெரியாது, ஆனால் எனக்கு உங்களைத் தெரியும், உங்கள் எதிரி நான். முன்பு, என் தம்பியைக் கொன்று அவனது உடைமைகளை நீங்கள் எடுத்துக்கொண்டுவிட்டீர்கள். அதனால் பழி தீர்க்கப்புறப்பட்டேன். நீங்கள் துறவியை பார்க்கக் கிளம்பியதும், பழி தீர்க்க இது தான் சமயம் என்று உங்களைப் பின் தொடர்ந்தேன். உங்கள் காவலர்கள் என்னை அடையாளம் கண்டு என்னைத் தாக்கி காயப்படுத்தினர்.  நான் அவர்களிடம் இருந்து தப்பி ஓடி இங்கு வந்தேன், நீங்கள் என் இரத்தப் போக்கை நிறுத்தி தகுந்த சிகிச்சை அளிக்காமல் போய் இருந்தால், நான் இறந்து போயிருப்பேன். உங்களைக் கொல்ல நினைத்தேன் ஆனால் உங்களால் காப்பாற்றப்பட்டேன்.அதற்கு நன்றிக் கடனாக இனி நான் உங்கள் அடிமையாக இருப்பேன். என் இரண்டு பிள்ளைகளும் இனி உமக்கே அடிமை. என்னை மன்னியுங்கள்” என்று தழுதழுத்தான்,

 

ராஜாவிற்கு தன் எதிரி எளிதில் சமாதானம் அடைந்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அவனை நண்பனாகப் பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்தது. அவனை அவன் நாட்டிற்கு அனுப்பி வைத்துத், தன் மருத்துவரையும், அவன் சிகிச்சைக்காக கூடவே அனுப்பிவைத்தான், அபகரித்த பொருட்களையும் திருப்பி அனுப்புவதாக வாக்களித்தான்.

 

அவனிடம் இருந்து விடைபெற்று வெளியே வந்த ராஜா துறவியைத் தேடினார். துறவி வழக்கம் போல தோட்ட வேலை  செய்துகொண்டிருந்தார். “என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் துறவியாரே  என்று கேட்டார். “உங்களுக்கு பதில் கிடைத்து விட்டது அரசே” என்றார் துறவி. ராஜாவிற்கு ஒன்றும் புரியவில்லை.  “என்ன சொல்கிறீர் துறவியாரே“ என்று கேட்டார்.

 

“புரியவில்லையா அரசரே? நீங்கள் என் நிலைமை கண்டு கருணை கொள்ளாமல் போய் இருந்தால், உங்கள் எதிரி உங்களைத் தாக்கி இருக்கலாம். அப்போது நீங்கள் ஐயோ துறவியின் குடிசையிலேயே இருந்திருக்கலாமே என்று நினைத்திருக்கலாம்”என்று ஆரம்பித்தார் துறவி.

 

“ஆகையால், மிக முக்கியமான நேரம் நீங்கள் எனக்கு உதவி செய்த நேரம். அப்போதைய முக்கியமான மனிதர் நான் தான். எனக்கு உதவி செய்ததே உங்களுக்குரிய முக்கியமான வேலை”

 

“பிறகு அந்த தாடிக்காரன் நம்மை நோக்கி வந்தபோது, அப்போது முக்கியமான நேரம் அடிபட்டவனுக்கு நீங்கள் உதவிய நேரம். எனென்றால், அப்போது நீங்கள் அவனுக்கு உதவாமல் போய் இருந்தால், அவன் உங்களோடு சமாதானம் செய்துகொள்ளாமலேயே இறந்து போயிருக்கக்கூடும்.  அப்போதைய முக்கியமான நபர் அந்த காயம் பட்டவர்தான்.  நீங்கள் அவனுக்கு உதவியது தான் அப்போதைய முக்கிய காரியம்.

 

ஆகவே ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் அரசே. ஒரே ஒரு நேரம் தான் நம் வாழ்கையில் மிக முக்கியமான நேரம். அது “இந்த நேரம்”. இந்த நொடி மட்டுமே.”

 

“மாற்றும் சக்தி நமக்கு இருக்கிறது என்றால் அது இந்த நேரத்தில் மட்டுமே சாத்தியம். கடந்த காலத்தையோ அல்லது எதிர் காலத்தையோ நம்மால் இப்போது மாற்ற முடியாது. நிகழ் காலம் மட்டுமே நம் கையில் உள்ளது. அதனால்தான் சொல்கிறேன் நம்மால் நிகழ்காலத்தை மட்டுமே நம் செயல் மூலம் மாற்ற முடியும். ஆகவே முக்கியமான நேரம் என்பது இந்த நொடிதான்.”

 

“இரண்டாவது என்ன கேட்டீர்? ஆலோசனை கேட்க யார் முக்கியமான மனிதர்? இல்லையா? நீங்கள் யாரோடு இந்த சமயத்தில் இருக்கிறீர்களோஅவரே உங்கள் செயலுக்கு முக்கியமானவர். ஏனெனில், யார் யாருடன் எப்போது இருப்பார் என்று யாரால் சொல்லமுடியும்? ஆதலால் இப்போது யார் உங்களுடன் இருக்கிறாரோ அவரே உங்கள் செயல் நடத்த மிகவும் முக்கியமானவர்.  உங்கள் செயல் பொறுத்தது அவர் ஆலோசனை தருகிறாரா அல்லது பெறுகிறாரா என்பது”

 

“மூன்றாவதாக எது முக்கியமான வேலை என்று கேட்டீர்கள். உங்களுடன் இருப்பவருக்கு உதவுவதே உங்கள் முக்கியமான வேலை. ஏனெனில் , அவர் உங்களோடு இருப்பதே உங்கள் உதவி பெறுவதற்க்குத்தான். அவருக்கு உதவி செய்வதற்கே நீங்கள் படைக்கப்ப்ட்டு இருக்கிறீர்கள் என்று உணருங்கள்”  என்றார் துறவி

 

-    

No comments:

Post a Comment