Tuesday, April 12, 2016

சப்த ரிஷி பிருகுவும் அவர் மகன் சுக்கிரனும்


ஸப்த ரிஷி பிருகுவும் அவர் மகன் சுக்கிரனும்
================================

பிருகு சப்த ரிஷிகளில் ஒருவர்
அதிரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர்,கௌதமர், காஸ்யபர், ஆங்கிரஸ் இந்த 7 பேர் சப்த ரிஷிகள்
வானத்தில் தெரியும் ஒரு நக்ஷத்திர கூட்டத்திற்கு சப்த ரிஷி மண்டலம் என்று பெயர்
வைத்திருக்கிறார்கள். (க்ரேட் டிப்பர் கான்ஸ்டெல்லேஷன்)


பிருகு - இவர் பிரம்மாவின் மானச புத்திரன். பிரம்மா தன் படைப்புகளை காப்பாற்றுவதற்காக 11 பேரைப் படைத்தார். அவர்கள் ப்ரஜாபதிகள் எனப்படுவர்,  பிருகு அத்தகைய ப்ரஜாபதிகளில் ஒருவர்.

( விஸ்வகர்மன், மரீசி, அத்ரி, ஆங்கீரஸ், புலஸ்தியர், புலஹர், க்ரது,வசிஷ்டர், தக்ஷன், பிருகு, நாரதர் என்பவர் 11 ப்ரஜாபதிகள்

மஹாபாரதம் 14 பேர்களை ப்ரஜாபதிகள் என நாரதர் வாயிலாகச் சொல்கிறது.
விஸ்வகர்மன், நாரதர் தவிர்த்து வேறு 5 பெயர்கள் சேர்த்து தருகிறது. 
காஸ்யபர், ப்ராசேதஸ், கௌதமர், ப்ரஹ்லாத, கர்த்தமர் )

பிரம்மா நினைக்க பிருகு  பிறந்தார். நினைத்ததும் பிறந்ததால் மானச புத்திரன் என்று பெயர்.  மேலே சொன்ன 11 பேரும் பிரம்மாவின் மானச புத்திரர்கள்.

ஜோதிஷ விஞ்ஞானத்தின் முதன்மை ஆசிரியர். ப்ருஹத் சம்ஹிதை பிருகு
எழுதியதே.

பார்கவ கோத்திரத்தின் முதல்வர்.

இவர் மனைவி க்யாதி.  பூலோமை என்றும் கூறப்படுகிறது

இவரது புத்திரர்கள் சுக்கிரன் (தாய் பூலோமை), தாதா, விதாதா. (தாய் க்யாதி)
மகள் ஸ்ரீ

விஷ்ணு ஸ்ரீயை மணந்துகொண்டதால், இவர் விஷ்ணுவின் மாமனார்

===

ப்ருகுவை விட சுக்கிரன் மேல் நமக்கு அலாதி ஈடுபாடு இல்லையா?
அதனால் சுக்கிரன் பற்றி சில வார்த்தைகள்

சுக்ரவார் எனப்படும் வெள்ளிக்கிழமையில் பிறந்ததாகக் கருதப்படுகிறார்.
பெற்றோர் பிருகு - பூலோமை
ஆசிரியர்:  ஆங்கிரஸ் (ஆங்கிரஸின் மகன் ப்ருஹஸ்பதி. ப்ருஹஸ்பதியின் மகன் கசன்)
கௌதமரிடமும் பயின்றவர்
சுக்கிரனின் மகள் தேவயானி.
தன் ஆசிரியர் மகன் பிருஹஸ்பதி தேவர்களுக்கு குருவாகச் செல்ல, இவர்
அசுரர்களுக்கு குருவாக நேரிட்டது
சஞ்சீவினி மந்திரம் தெரிந்தவர். (இறந்தவரை எழுப்பும் வித்தை). அதனால் தேவ-அசுர யுத்தத்தில் இறந்துபட்ட அசுரர்களை தன் சஞ்சீவினி மந்திரத்தால் எழுப்பியவர்

===

தேவர்களுக்கு அசுரகுரு சுக்கிரர் மேல் கோபம். காரணம் அவரது சஞ்சீவினி மந்திரம். அந்த மந்திரத்தால் அவர் இறந்த அசுரர்களை உயிர்த்தெழும்படிச் செய்வதால் தேவர்களால் அசுரர்களை வெல்ல முடியவில்லை.  அதனால் தாங்களும் அந்த சஞ்சீவினி மந்திரத்தை தெரிந்துகொள்ள விரும்பினர்.

அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியிடமிருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொண்டு வர தேவர்கள் தம் குருவின் மகனான கசனை அனுப்புகிறார்கள்.

சுக்கிராச்சாரியார் அசுர அரசன் விருஷபர்வா வின் ஆதரவில்  அசுர குருவாக இருந்தார். கசன் அங்கு வருகிறான்.  சுக்கிராச்சாரியாரின் குருகுலத்தில் கசன் சேர்ந்து குருகுலக் கல்வியை தொடங்கினான். அந்நிலையில் சுக்கிராச்சாரியின் மகளான தேவயானி கசன் மீது ஒருதலைக் காதல் கொண்டாள்.

தங்கள் குலகுரு  சுக்கிராச்சாரியாரிடம் கசன் சஞ்சீவினி மந்திரத்தை கற்க வந்ததை உணர்ந்த அசுரர்கள், கசனை பலமுறை  கொல்ல முயன்றனர். ஒவ்வொரு முறையும் தேவயானி தலையிட்டு கசனை அசுரர்களிடமிருந்து
சுக்கிராச்சாரியார் மூலம் சஞ்சீவனி மந்திரத்தின் மூலம் உயிருடன் மீட்டாள்.
இறுதியாக அசுரர்கள் கசனை கொன்று எரித்து, கசனின் பிணத்தின் சாம்பலை சோம பானத்தில் கரைத்து அதை தங்கள் குலகுரு சுக்கிராச்சாரியாருக்கு வழங்கினர்கள். அவரும் விவரம் தெரியாமல் அதைக்
குடித்து விடுகிறார்..

 பின் அவர் கசன் காணாது தேடினார். தனது ஞானப்பார்வையால் கசன் தன்
வயிற்றில் சாம்பலாக உள்ளான் என்ற விஷயம் அறிந்தார்.
தேவயானியின் வேண்டுதலால் சுக்கிராச்சாரி, கசனை சஞ்சீவினி மந்திரத்தால் உயிர்ப்பித்து, கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்தார். பின் கசன் சுக்கிராச்சாரியின் வயிற்றை கிழித்து  வெளியே வந்து, இறந்த போன தன் குரு சுக்கிராச்சாரியை, அவர் உபதேசித்த சஞ்சீவினி மந்திரத்தால்  உயிர்ப்பித்தான்.

கசனின் குருகுலக் கல்வி முடியும் நிலையில் தேவயானி கசனை அனுகி தன்னை மண்ந்து கொள்ளும்படி வேண்டினாள். தேவயானி தனது குருவின் மகள் என்பதலாலும் மேலும் தான் குருவின் வயிற்றிலிருந்து  மீண்டும் வெளிப்பட்டதாலும் தேவயானி தனக்கு சகோதரிமுறை ஆவதால் கசன் தேவயானியை மணக்க மறுத்தான்.

இதனால் ஆத்திரம் கொண்ட தேவயானி, தனது தந்தையான சுக்கிராச்சாரியிடம் கற்ற சஞ்சீவினி  மந்திரத்தை கசன் பயனபடுத்த முடியாதபடி சாபமிட்டாள். அதற்கு கசன், நான் பயன்படுத்தா விட்டாலும்
மற்ற தேவர்களுக்கு இம்மந்திரத்தை கற்றுக் கொடுப்பேன் என்று கூறினான். பதிலுக்கு கசன்,  தேவயானியை நோக்கி உன்னை உன் குலத்தவன் திருமணம் செய்து கொள்ளமாட்டான் எனச் சாபமிட்டான். பின் சுக்கிராச்சாரியாரிடம் விடைபெற்று சஞ்சீவினி மந்திரத்துடன் தேவலோகத்தில் உள்ள
பிரகஸ்பதியை அடைந்தான்.

இது கச்ச தேவயானி கதை.  பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்,
===========
சுக்கிராச்சாரியார் அசுர அரசன்  விருஷபர்வா வின் ஆதரவில் அசுர குருவாக இருந்தார் என்று  பார்த்தோம்.
விருஷபர்வா வின் மகள் சர்மிஷ்டை. தேவயானியும் சர்மிஷ்டையும் நெருங்கிய தோழிகள்.
ஒரு முறை குளத்தில் நீராடிவிட்டு திரும்புகையில் கவனக்குறைவாக அரச குமாரி சர்மிஷ்டையின் ஆடையை தேவயானி அணிந்தமைக்கு, அவளை உடலாலும் மனதாலும் துன்புறுத்தினாள் ஷர்மிஷ்டை.

மேலும் சர்மிஷ்டை, அவளை அங்கிருந்த ஒரு கிணற்றில் தள்ளிவிட்டு, வீடு திரும்பினாள். அந்த சர்மிஷ்டை, நிச்சயமாக, தேவயானி இறந்து போனாள் என்று கருதி கோபத்துடன் தனது வீடு நோக்கி நடையைக் கட்டினாள்.

சர்மிஷ்டை அந்த இடத்தைவிட்டு அகன்றவுடன், அந்த இடத்திற்கு நகுஷனின் மகன் யயாதி வந்தான் - கிணற்றில் விழுந்து கிடந்த தேவயானியைக் காப்பற்றிவிட்டு தன் நகரம் போய் சேர்கிறான்.

இந்த நகுஷன் கதையை பின்பு பார்க்கலம்.

தேவயானி தன் தந்தை சுக்கிராச்சாரியாரிடம் நடந்ததைக் கூறி சர்மிஷ்டையின் கர்வத்திற்க்கு தகுந்த தண்டனை வேண்டுகிறாள்,
விருஷபர்வா நடந்ததை கேள்விப்பட்டு, தன் மகளின் செய்கைக்காக வருத்தமுற்று தனது  பணியாள்மங்கை ஒருத்தியிடம், "நீ சென்று, உடனே சர்மிஷ்டையை இங்கு கொண்டு வா. அவள் தேவயானியின் விருப்பத்தை நிறைவேற்றட்டும்." என்று கட்டளையிட்டான்

நிலைமையைப் புரிந்து கொண்ட சர்மிஷ்டை, "தேவயானி விரும்பியதை நான் மகிழ்வுடன் செய்வேன். தேவயானியின் தூண்டுதலாலேயே என் தந்தையும் எங்கள் குல குருவும் என்னை அழைக்கின்றனர். எனது தவறால், எங்கள் குரு சுக்ரரும் அவர் மகள் தேவயானி ஆகிய இருவரும் அசுரர்களை விட்டு
அகலக்கூடாது." என்று பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறாள்.

தேவயானி சர்மிஷ்டை தனக்கு அடிமையாக வேண்டும் என்ற எண்ணத்துடன் " சர்மிஷ்டையுடன் கூடிய ஆயிரம் மங்கையர் எனக்குப் பணியாளாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! எனது தந்தை என்னை
எங்கு திருமணம் செய்து கொடுக்கிறாரோ அங்கும் அவள் என்னைத் தொடர வேண்டும்." என்று நிபந்தனை விதிக்கிறாள். விருஷபர்வாவும் சர்மிஷ்டையும் சம்மதிக்கின்றனர்.

காலப்போக்கில் நகுஷ மன்னனின் மகன் யயாதி தேவயானையை மணந்துகொள்கிறான். தேவயானியுடன் சர்மிஷ்டையும் பணிப்பெண்ணாகச் செல்கிறாள்,

தேவயானியின் மூலம் யயாதிக்கு நான்கு ஆண் மக்கள் பிறந்தனர். இந்நிலையில் தேவயானிக்கு தெரியாமல் சர்மிஷ்டை மீது காதல் கொண்ட யயாதி, சர்மிஷ்டை மூலம் துரு, அனு, புரு எனும் மூன்று ஆண் மக்களைப் பெறுகிறான்.

இது தெரியவந்ததும், மீண்டும் தேவயானி கோபம் கொள்கிறாள்.

யயாதி தனக்கு துரோகம் செய்தான் என்று தன் தந்தையிடம் முறையிடுகிறாள், 

சுக்கிராச்சாரியும், தன் மகளுக்கு துரோகம் செய்த, யயாதியை உடனே கிழவனாக மாற சாபமிட்டார். இதனால் உடனே பாதிக்கப்பட்டவள் தேவயானியே. அதனால் அவள் சாபவிமேசனத்திற்கு வழி கேட்க, அவரும், யயாதியின் முதுமைப் பருவத்தை அவன் மகன்களில் ஒருவர் ஏற்றால், யயாதியின் முதுமை நீங்கி இளமை அடைவான் என்று கூறுகிறார்.

யயாதியின் முதுமையைத் தேவயானியின் நான்கு மகன்களில் ஒருவர் கூட ஏற்கவில்லை, ச்ர்மிஷ்டையின் மகன்களில் புரு என்பவன், யயாதியின் முதுமை ஏற்று தன் இளமையை வழங்கினான் இதனால் மகிழ்ந்த யயாதி, தனக்குப் பிறகு சர்மிஷ்டைக்கு பிறந்த இளவரசன் புரு, தன்நாட்டை ஆள
வரமளித்தான்.

காலப்போக்கில் வாழ்க்கயின் நிலையாமை உணர்ந்த யயாதி, தன் இளமையை திரும்ப புருவுக்கே திருப்பிக் கொடுக்கிறான், நகுஷ மைந்தன் யயாதி அரியணையில் புருவை அமர்த்தினான். உரிய  சடங்குகளுடன் அரசாங்கத்தை புருவுக்கு அளித்த அந்த ஏகாதிபதி, தனது தலைநகரை விட்டு
அந்தணர்களுடனும் துறவிகளுடனும் கானகமேகினான்.

யயாதி-தேவயானிக்கும் பிறந்த மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்கள் யாதவர்கள்
துர்வசுவின் வழித்தோன்றல்கள் யவனர்கள்
திரஹ்யுவின் வழித்தோன்றல்கள் போஜர்கள்
அனுவின் வழித்தோண்றல்கள் மிலேச்சர்கள்
புரு வின் வழித்தோண்றல்கள் பௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர்

மன்னர் புரு அத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்டு குரு நாட்டை ஆண்டார்.  புருவின் பௌரவ குலத்தில் தோண்றியவர்களே பாண்டவர் மற்றும் கௌரவர் ஆவார்.  பௌரவ அரசமரபைச் சேர்ந்த போரஸ், கி மு 326இல் நடந்த போரில் ஜீலம் ஆற்றாங்கரையில் நடந்த போரில், அலெக்சாண்டரிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும் போரசின் போர் வீரத்தைப் பாராட்டி,
அலெக்சாண்டர் தாம் வென்ற இந்தியப் பகுதிகளுக்கு, போரசையே தமது பிரதிநிதியாக நியமித்து  கௌரவித்தார்.


நகுஷன் கதை
==========
யயாதியின் தந்தை நகுஷன். தேவ லோக இந்திர பதவி அடைய வேண்டி நகுஷன் நூறு அசுவமேத  யாகங்கள் செய்து முடித்த பின்பு, அவனை தேவ லோகத்திற்கு அழைத்துச் செல்ல பல்லக்குடன் சப்த ரிசிகள் வந்தனர்.

சப்த ரிசிகள் நகுஷனை பல்லக்கில் ஏற்றி தேவலோகம் அழைத்து செல்கையில், நகுஷன் முனிவர்களைப் பார்த்து, பல்லக்கை வேகமாக தூக்கிச் சென்றால் உங்கள் கால்கள் வலிக்கும் எனவே மெதுவாக செல்லுங்கள் என்று பணிவாக கேட்டுக்கொண்டான். அதற்கு முனிவர்கள், நாங்கள்
வழக்கமான வேகத்துடன்தான் பல்லக்கை சுமந்து செல்கிறோம் என்றனர்.

நகுஷனின் பல்லாக்கு தேவலோகத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், அங்கு நின்று கொண்டு  இருந்த இந்திராணியை பார்த்தவுடன் அவள் மேல் ஏற்பட்ட வேட்கை மிகுதியால், விரைவில் இந்திராணியை அடையும் நோக்கில், பல்லக்கை வேகமாக சுமந்து செல்லுங்கள் என்று முனிவர்களை  விரைவுப்படுத்தினான். முனிவர்களும் நாங்கள் வழக்கமான வேகத்தில்தான் பல்லாக்கை சுமந்து  செல்கிறோம் என்றனர். 

சப்தரிஷிகளில் குள்ளமான முனிவரான அகத்தியர் தான் பல்லக்கு மெதுவாக செல்லக்காரணம் என்று  கருதிய நகுசன், அகத்திய முனிவரைப் பார்த்து ’சர்ப்ப, சர்ப்ப’ என்று (சமஸ்கிருதம் மொழியில் 'வேகமாக,  வேகமாக' என்ற பொருளும் உண்டு) என்று கூவிக்கொண்டு தன் கையில் இருந்த குச்சியால் அகத்திய  முனிவரை நகுஷன் அடித்தான்.

இந்திராணியின் மீது கொண்ட மையல் காரணமாக தன்னை அடித்த
நகுஷனை, பூவுலகத்தில் மலைப்பாம்பாக விழக்கடவாய் என சாபமிட்டார். நகுசன் பூவுலகில்  பல்லாண்டுகள் மலைப்பாம்பாக வாழ்ந்து, தவமிருந்து மீண்டும் மனித உருவமடைந்து பின்னர் சொர்க்க  லோகத்தை அடைந்தான் என்று புராணங்கள் கூறுகின்றன.

 

No comments:

Post a Comment