Tuesday, October 22, 2024

தேவாரம் -3 திருவாரூர் திருஆலங்காடு திருவையாறு

 

திருவாரூர்  அருள்தரு அல்லியங்கோதையம்மை உடனுறை அருள்மிகு வன்மீகநாதர் திருவடிகள் போற்றி

 

சுந்தரர்  தேவாரம்

 

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் திருவும் புணர்ப்பானை,

பின்னை என் பிழையைப் பொறுப்பானை, பிழை எலாம் தவிரப் பணிப்பானை,

இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை, எளி வந்த பிரானை,

அன்னம் வைகும் வயல்-பழனத்து அணி ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

           

கட்டமும் பிணியும் களைவானை; காலற் சீறிய கால் உடையானை;

விட்ட வேட்கை வெந்நோய் களைவானை; விரவினால் விடுதற்கு அரியானை;

பட்ட வார்த்தை, பட நின்ற வார்த்தை, வாராமே தவிரப் பணிப்பானை;

அட்ட மூர்த்தியை; மட்டு அவிழ் சோலை ஆரூரானை; மறக்கலும் ஆமே? .

 

காலனை சீறிய கால் உடையானை

விட்ட வேட்கை  வெந்நோய்= Reappareance of an abandoned desire

பட்ட வர்த்தை பட நின்ற வார்த்தை = வந்த /வரும் பழி சொற்கள்

           

கார்க்குன்ற(ம்) மழை ஆய்ப் பொழிவானை, கலைக்கு எலாம் பொருள் ஆய் உடன்கூடிப்

பார்க்கின்ற(வ்) உயிர்க்குப் பரிந்தானை, பகலும் கங்குலும் ஆகி நின்றானை,

ஓர்க்கின்ற(ச்) செவியை, சுவை தன்னை, உணரும் நாவினை, காண்கின்ற கண்ணை,

ஆர்க்கின்ற(க்) கடலை, மலை தன்னை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

           

 

செத்த போதினில் முன் நின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்,

வைத்த சிந்தை உண்டே; மனம் உண்டே; மதி உண்டே; விதியின் பயன் உண்டே!

முத்தன், எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற(த்) திமில் ஏறு உடையானை,

அத்தன், எந்தைபிரான், எம்பிரானை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

           

 

செறிவு உண்டேல், மனத்தால்-தெளிவு உண்டேல், தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல்,

மறிவு உண்டேல், மறுமைப் பிறப்பு உண்டேல், வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல்,

பொறிவண்டு யாழ் செய்யும் பொன்மலர்க் கொன்றை பொன் போலும் சடைமேல் புனைந்தானை

அறிவு உண்டே; உடலத்து உயிர் உண்டே; ஆரூரானை மறக்கலும் ஆமே? .

           

நன்மையைத்தரும் கல்வியும், அதன் பயனாகிய உள்ளத்தெளிவும், அதன் பயனாகிய இறைவன் பற்றும் நமக்கு உள்ளன என்றால், அவற்றோடே இறப்பும், மறுபிறப்பும், வாழ்நாளை இடைமுரியச் செய்கின்ற தீங்குகளும் உள்ளன என்றால், இவற்றையெல்லாம் அறிகின்ற அறிவும். அவ்வறிவின் வழியே ஒழுகுதற்கு உயிர் உடம்பில் நிற்றலும் உள்ளனவாதலின்,….

           

பொள்ளல் இவ் உடலைப் பொருள் என்று, பொருளும் சுற்றமும் போகமும் ஆகி,

மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை,

வள்ளல்! எம்தமக்கே துணை! என்று நாள் நாளும்(ம்) அமரர் தொழுது ஏத்தும்

அள்ளல் அம் கழனிப் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே?.

 

           

கரி-யானை உரி கொண்ட கையானை, கண்ணின் மேல் ஒரு கண் உடையானை,

வரியானை, வருத்தம் களைவானை, மறையானை, குறை மாமதி சூடற்கு

உரியானை, உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை, உகந்து உள்கி நண்ணாதார்க்கு

அரியானை, அடியேற்கு எளியானை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

           

வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப் பெறும் வார்த்தையைக் கேட்டும்

நாள் நாளும் மலர் இட்டு வணங்கார்; நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்;

கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன், கிளைக்கு எலாம் துணை ஆம் எனக் கருதி;

ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன்; ஆரூரானை மறக்கலும் ஆமே? .

           

 

விடக்கையே பெருக்கிப் பலநாளும் வேட்கையால் பட்ட வேதனை தன்னைக்

கடக்கிலேன்; நெறி காணவும் மாட்டேன்; கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும்

இடக்(க்)கிலேன்; பரவைத் திரைக் கங்கைச் சடையானை, உமையாளை ஓர் பாகத்து

அடக்கினானை, அம் தாமரைப் பொய்கை ஆரூரானை, மறக்கலும் ஆமே?.

           

 

ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப்போதனை, நச்சு அரவு ஆர்த்த

பட்டியை, பகலை, இருள் தன்னை, பாவிப்பார் மனத்து ஊறும் அத் தேனை,

கட்டியை, கரும்பின் தெளி தன்னை, காதலால் கடல் சூர் தடிந்திட்ட

செட்டி அப்பனை, பட்டனை, செல்வ ஆரூரானை, மறக்கலும் ஆமே?.

 

என்னை. வழக்கிட்டு ஆட்கொண்டு அதன் பின் கோயிலுள் சென்று மறைந்த, நண்பகற் போது போலும் ஒளியுடையவனும்,….. தேவர் மீது வைத்த அன்பினால், கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகனுக்குத் தந்தையும், வேதத்தில் வல்லவனும் 

           

ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கல் ஆம் பொருள் ஆய் உடன் கூடி,

கார் ஊரும் கமழ் கொன்றை நல்மாலை முடியன், காரிகை காரணம் ஆக

ஆரூரை(ம்) மறத்தற்கு அரியானை, அம்மான் தன் திருப்பேர் கொண்ட தொண்டன்-

ஆரூரன்(ன்) அடிநாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர் தாமே .

 

 

 

 

 

 

 

 

 

 

 

7.52 திருஆலங்காடு

பழம்பஞ்சுரம் 

 

சுந்தரர் தேவாரம்

 

1          முத்தா! முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை பங்கா!

சித்தா! சித்தித் திறம் காட்டும் சிவனே! தேவர் சிங்கமே!

பத்தா! பத்தர் பலர் போற்றும் பரமா! பழையனூர் மேய

அத்தா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

                       

2          பொய்யே செய்து புறம் புறமே திரிவேன் தன்னைப் போகாமே,

மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா! மெய்யர் மெய்ப்பொருளே!

பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா! பழையனூர் மேய

ஐயா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

                       

3          தூண்டா விளக்கின் நற்சோதீ! தொழுவார் தங்கள் துயர் தீர்ப்பாய்!

பூண்டாய், எலும்பை! புரம் மூன்றும் பொடியாச் செற்ற புண்ணியனே!

பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் மேய

ஆண்டா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

                       

4          மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு, மதி மயங்கி,

அறிவே அழிந்தேன், ஐயா, நான்! மை ஆர் கண்டம் உடையானே!

பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் மேய

அறிவே! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

 

5          வேல் அங்கு ஆடு தடங்கண்ணார் வளையுள் பட்டு, உன் நெறி மறந்து,

மால் அங்கு ஆடி, மறந்தொழிந்தேன்; மணியே! முத்தே! மரகதமே!

பால் அங்கு ஆடீ! நெய் ஆடீ! படர் புன்சடையாய்! பழையனூர்

ஆலங்காடா! உன்னுடைய அடியார்க்கு அடியேன் ஆவேனே.

                       

6          எண்ணார் தங்கள் எயில் எய்த எந்தாய்! எந்தை பெருமானே!

கண் ஆய் உலகம் காக்கின்ற கருத்தா! திருத்தல் ஆகாதாய்!

பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்

அண்ணா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

                       

7          வண்டு ஆர் குழலி உமை நங்கை பங்கா! கங்கை மணவாளா!

விண்டார் புரங்கள் எரி செய்த விடையாய்! வேத நெறியானே!

பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா! பழையனூர் மேய

அண்டா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

                       

8          பேழ்வாய் அரவின் அணையானும், பெரிய மலர் மேல் உறைவானும்

தாழாது, உன் தன் சரண் பணிய, தழல் ஆய் நின்ற தத்துவனே!

பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா! பழையனூர் தன்னை

ஆள்வாய்! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

                       

9          எம்மான்! எந்தை! மூத்த(அ)ப்பன்! ஏழ் ஏழ் படிகால் எமை ஆண்ட

பெம்மான்! ஈமப் புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே!

பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்

அம்மா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

                       

10        பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன், பழையனூர் மேய

அத்தன், ஆலங்காடன் தன் அடிமைத் திறமே அன்பு ஆகிச்

சித்தர் சித்தம் வைத்த புகழ்ச் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள்-

பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே.

 

திருவையாறு

அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை

அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி

 

திருநாவுக்கரசர்  தேவாரம்

 

ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே; உலகுக்கு ஒருவனாய் நின்றாய், நீயே;

வாசமலர் எலாம் ஆனாய், நீயே; மலையான் மருகனாய் நின்றாய், நீயே;

பேசப் பெரிதும் இனியாய், நீயே; பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே;

தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

 

[ 1]

 

நோக்க(அ)ரிய திருமேனி உடையாய், நீயே; நோவாமே நோக்கு அருள வல்லாய், நீயே;

காப்ப(அ)ரிய ஐம்புலனும் காத்தாய், நீயே; காமனையும்   கண் அழலால் காய்ந்தாய், நீயே;

ஆர்ப்ப(அ)ரிய மா நாகம் ஆர்த்தாய், நீயே; அடியான்   என்று அடி என்மேல் வைத்தாய், நீயே;

தீர்ப்ப (அ)ரிய வல்வினை நோய் தீர்ப்பாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ!.

 

[ 2]

 

கனத்து அகத்துக் கடுஞ் சுடர் ஆய் நின்றாய், நீயே; கடல், வரை, வான், ஆகாயம், ஆனாய், நீயே;

தனத்து அகத்துத் தலை கலனாக் கொண்டாய், நீயே; சார்ந்தாரைத் தகைந்து ஆள வல்லாய், நீயே;

மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய், நீயே; மலர்ச் சேவடி என்மேல் வைத்தாய், நீயே;

சினத்து இருந்த திரு நீலகண்டன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

 

[ 3]

 

வான் உற்ற மா மலைகள் ஆனாய், நீயே; வடகயிலை   மன்னி இருந்தாய், நீயே;

ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய், நீயே; ஒளி மதியோடு, அரவு, புனல், வைத்தாய், நீயே;

ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அடியான் என்று அடி என்மேல் வைத்தாய், நீயே;

தேன் உற்ற சொல் மடவாள் பங்கன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

 

[ 4]

மேலே செல்

 

பெண் ஆண் பிறப்பு இலியாய் நின்றாய், நீயே; பெரியார்கட்கு எல்லாம் பெரியாய், நீயே;

உண்ணா அருநஞ்சம் உண்டாய், நீயே; ஊழி முதல்வனாய் நின்றாய், நீயே;

கண் ஆய் உலகு எலாம் காத்தாய், நீயே; கழல்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;

திண் ஆர் மழுவாள் படையாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

 

[ 5]

 

உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய், நீயே; உற்றவர்க்கு ஓர் சுற்றம் ஆய் நின்றாய், நீயே;

கற்றிருந்த கலைஞானம் ஆனாய், நீயே; கற்றவர்க்கு ஓர் கற்பகம் ஆய் நின்றாய், நீயே;

பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய், நீயே; பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே;

செற்றிருந்த திரு நீலகண்டன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

 

[ 6]

 

எல்லா உலகமும் ஆனாய், நீயே; ஏகம்பம் மேவி இருந்தாய், நீயே;

நல்லாரை நன்மை அறிவாய், நீயே; ஞானச்சுடர் விளக்கு ஆய் நின்றாய், நீயே;

பொல்லா வினைகள் அறுப்பாய், நீயே; புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய், நீயே;

செல்வாய செல்வம் தருவாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

 

[ 7]

 

ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய், நீயே; அளவு இல் பெருமை உடையாய், நீயே;

பூவினில் நாற்றம் ஆய் நின்றாய், நீயே; போர்க் கோலம் கொண்டு எயில் எய்தாய், நீயே;

நாவில் நடு உரை ஆய் நின்றாய், நீயே; நண்ணி அடி என்மேல் வைத்தாய், நீயே;

தேவர் அறியாத தேவன், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

 

[ 8]

 

எண் திசைக்கும் ஒண்சுடர் ஆய் நின்றாய், நீயே;   ஏகம்பம் மேய இறைவன், நீயே;

வண்டு இசைக்கும் நறுங்கொன்றைத் தாராய், நீயே; வாரா உலகு அருள வல்லாய், நீயே;

தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய், நீயே; தூ மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;

திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

 

[ 9]

 

விண்டார் புரம் மூன்றும் எய்தாய், நீயே; விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய், நீயே;

கண்டாரைக் கொல்லும் நஞ்சு உண்டாய், நீயே; காலங்கள் ஊழி ஆய் நின்றாய், நீயே;

தொண்டு ஆய் அடியேனை ஆண்டாய், நீயே; தூ மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;

திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய், நீயே   திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

 

[ 10]

 

ஆரும் அறியா இடத்தாய், நீயே; ஆகாயம் தேர் ஊர வல்லாய், நீயே;

பேரும் பெரிய இலங்கை வேந்தன் பெரிய முடிபத்து இறுத்தாய், நீயே;

ஊரும் புரம் மூன்றும் அட்டாய், நீயே; ஒண் தாமரையானும் மாலும் கூடித்

தேரும் அடி என்மேல் வைத்தாய், நீயே திருஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.

No comments:

Post a Comment