Tuesday, October 22, 2024

தேவாரம் 1

 

திருஞானசம்பந்தர் பாடல்கள்

 

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்       

காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்        

ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த         

பீடுடைய பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே

 

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே

ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமம்

கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறம்அருளிக்

கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே

 

வேதமோதி வெண்ணூல்பூண்டு

  வெள்ளை யெருதேறிப்

பூதஞ்சூழப் பொலியவருவார்

  புலியி னுரிதோலார்

நாதாஎனவும் நக்காஎனவும்

  நம்பா எனநின்று

பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார்

  பழன நகராரே.  

 

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு    

ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்    

சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்    

குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே.

 

ஆறாடு சடைமுடியன் அனலாடு

  மலர்க்கையன் இமயப்பாவை

கூறாடு திருவுருவன் கூத்தாடுங்

  குணமுடையோன் குளிருங்கோயில்

சேறாடு செங்கழுநீர்த் தாதாடி

  மதுவுண்டு சிவந்தவண்டு

வேறாய உருவாகிச் செவ்வழிநற்

  பண்பாடும் மிழலையாமே

 

 

 

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு

இங்கேயென்று அருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்

கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர் பிரமபுரத்து உறையும்

சங்கே ஒத்து ஒளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே".

 

நீ நாளும் நன்னெஞ்சே நினை கண்டாய் யாரறிவார் 

சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம்பெருமாற்கே 

பூ நாளும் தலை சுமப்பப் புகழ் நாமஞ் செவி கேட்ப 

நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே. 

 

துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்

நெஞ்சக நைந்து   நினைமின் நாடொறும்

வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற்று

அஞ்ச உதைத்தன  அஞ்செ ழுத்துமே.

 

தும்மல் இருமல்   தொடர்ந்த போழ்தினும்

வெம்மை நரகம்   விளைந்த போழ்தினும்

இம்மை வினையடர்த்   தெய்தும் போழ்தினும்

அம்மையி னுந்துணை   அஞ்செ ழுத்துமே

 

காத லாகிக்   கசிந்துகண் ணீர்மல்கி

ஓது வார்தமை   நன்னெறிக் குய்ப்பது

வேதம் நான்கினும்   மெய்ப்பொரு ளாவது

நாதன் நாமம்   நமச்சி வாயவே.

 

வீடலால வாயிலாய் விழுமியார்க ணின்கழல்

பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே

காடலால வாயிலாய் கபாலிநீள்க டிம்மதில்

கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே

 

வீடுபேற்றிலன்றி வேறொன்றில் விருப்பம் இல்லாதவராய் மெய்ஞ்ஞானிகள் உம் திருவடிகளைப் போற்றிப்பாட, அவர்தம் வாக்கினிடமாக விளங்குபவரே! அவர்கள் துதித்துப் போற்றுகின்ற பண்புகள் பலவற்றை உடையவரே! சுடுகாட்டைத் தவிர வேறோர் இடத்தை விரும்பி நில்லாதவரே! கபாலி என்னும் பெயரையுடையவராய், மதில் சூழப்பெற்ற நான்மாடக்கூடல் என்னும் திருஆலவாயில் எழுந்தருளியுள்ள பெருமானாரே! நீர் மதுரையம்பதியில் குலாவி விளையாடுவது எம்மால் அறியும் தரத்த தன்றாயுள்ளது.

 

குற்றநீ குணங்கணீ கூடலால வாயிலாய்

சுற்றநீ பிரானுநீ தொடர்ந்திலங்கு சோதிநீ

கற்றநூற் கருத்துநீ யருத்தமின்ப மென்றிவை

முற்றுநீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே

 

“மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும்

பிறை உடையாய்! பிஞ்ஞகனே!” என்று உனைப் பேசின் அல்லால்,

குறை உடையார் குற்றம் ஓராய்! கொள்கையினால் உயர்ந்த

நிறை உடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

 

நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத,

“என் அடியான் உயிரை வவ்வேல்!” என்று அடல் கூற்று உதைத்த

பொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும்

நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

 

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி

அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்

வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்

சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே

 

 

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி

மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்

ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்           

ஓரூர னல்லன் ஓருவம னில்லி

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்

அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்    

இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.

 

திருநாவுக்கரசர் பாடல்கள்

 

கூற்றாயின வாறுவி லக்ககிலீர்

  கொடுமைபல செய்தன நானறியேன்

ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்

  பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

  குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில

  வீரட்டா னத்துறை அம்மானே.

 

 

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்

உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்

எற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் ஞானமேதும்

கற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே..

 

ஓம்பினேன் கூட்டை வாளா

  உள்ளத்தோர் கொடுமை வைத்துக்

காம்பிலா மூழை போலக்

  கருதிற்றே முகக்க மாட்டேன்

பாம்பின்வாய்த் தேரை போலப்

  பலபல நினைக்கின் றேனை

ஓம்பிநீ உய்யக் கொள்ளாய்

  ஒற்றியூ ருடைய கோவே.

 

 மனமெனுந் தோணி பற்றி

    மதியெனுங் கோலை யூன்றிச்

சினமெனுஞ் சரக்கை யேற்றிச்

   செறிகட லோடும் போது

மதனெனும் பாறை தாக்கி

   மறியும்போ தறிய வொண்ணா

துனையுனும் உணர்வை நல்காய்

  ஒற்றியூ ருடய கோவே.

  

ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பங்கா! மிக்க

சோதியே! துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே!

ஆதியே! அமரர்கோவே! அணி அணாமலை உளானே!

நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே

 

பாலனாய் கழிந்த நாளும் பனிமலர் கோதைமார்தம்

மேலனாய் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்  கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்

சேலுலாம் பழனவேலி திருக்கொண் டீச்சசரத்து ளானே

 

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி

தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்

உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று

வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே

 

உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளியாக

மடம்படும் உணர்நெய்அட்டிஉயிரெனும்திரிமயக்கி

இடம்படும் ஞானத்தீயால் எரிகொளஇருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழல் அடி காணலாமே

 

அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து

பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னை

சங்கொத்த மேனிச் செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை

எங்குற்றாய் என்ற போது இங்குற்றேன் என் கண்டாயே

 

பங்கம்=இழிந்த எண்ணம், உலகப் பொருட்கள் மேல் வைத்துள்ள பாசம்: பரமன்=அனைவருக்கும் மேம்பட்டவன்: அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி என்பதற்கு, தரையில் உடலின் எட்டு அங்கங்களும் படுமாறு கீழே விழுந்து வணங்குதல் என்றும் பொருள்

 

 

காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக

வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக

நேயமே நெய்யும்பாலா நிறையநீ ரமையவாட்டிப்

பூசனை ஈசனார்க்குப்  போற்றவிக் காட்டினோமே

 

பொருள்:

 

இவ்வுடம்பைக் கோயிலாகவும்,  நல்ல நினைவுகளை உடைய மனத்தை அடிமையாகவும் கொண்டு, வாய்மையைத் தூய்மையாகவும் வைத்து, மனதிற்குள் ரத்தினம் போல ஜொலிக்கும் ஆன்மாவை இலிங்கமாகப் பாவித்து, அன்பை நெய்யும் பாலாய் நிறைய வைத்துப் பூசித்து, இறைவனைப் போற்றினேன்.

 

 விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகும்

துளக்கினன் மலர்தொ டுத்தாற் றூயவிண் ணேற லாகும்

விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞான மாகும்

அளப்பில கீதஞ் சொன்னார்க் அடிகள் தாம் அருளு மாறே.

 திருக்கோயிலைப் பெருக்குவதனால் பெறும் இன்பத்தைப் போல அதனை மெழுகுவதனால் பத்து மடங்கு இன்பம் ஏற்படும். ஒளியை உடைய நல்ல மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு ஒப்படைத்தால், தூய வீட்டுலகத்துக்கு இவ்வான்மா மேல் நோக்கிச் செல்லும். கோயிலில் விளக்கு ஏற்றுபவர்கள் உண்மை வழியில் செலுத்தும் ஞானமாகிய பேறு பெறுவர். எல்லையில்லாத பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைகள் எல்லை இல்லாதன.

 வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் வளாகம் தன்னுள்

சென்றிலேன்; ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்;

நின்று உளே துளும்புகின்றேன்; நீசனேன்; ஈசனேயோ!

இன்று உளேன்! நாளை இல்லேன்!-என் செய்வான் தோன்றினேனே!

 

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,

இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்

மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

 

படைக்கலமாக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்

இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்

துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறு அணிந்து உன்

அடைக்கலம் கண்டாய் அணி தில்லைச் சிற்றம்பலத்து அரனே."🌺

  

பொருளுரை : அழகிய தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்தில் உள்ள பெருமானே!

என்னை ஏழையர் செய்யக் கூடிய தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் படைக்கருவியாக உன் திருநாமமாகிய திருவைந்தெழுத்தினையும் அடியேன் நாவினில் நீங்காது கொண்டுள்ளேன். இடையில் ஒருபோதும் உனக்கு அடிமைத் தொண்டு செய்தலைத் தவிர்ந்தேன் அல்லேன். எழுவகைப்பட்ட பிறப்புக்களில் எந்தப் பிறவி எடுத்தாலும் எடுத்த பிறவிக்கு ஏற்ப உனக்கு அடிமைத் தொண்டு செய்கிறேன். அடியேனை நீ விலக்கினாலும் அடியேன் உன்னை விட்டுப் பெயரேன். எப்பொழுதும் உன்னை மனத்தால் தொழுது உடலால் வணங்கித் திருநீறு அணிந்து உன்னால் காக்கப்படவேண்டிய பொருளாக அடியேன் உள்ளேன்.

 

கருவாய்  கிடந்து  உன்  கழலே  நினையும்  கருத்துடையேன் 

உருவாய் தெரிந்து உன் நாமம்  பயின்றேன்  உன தருளால்

திருவாய்  பொலிய சிவாய நம என நீற ணிந்தேன்

தருவாய்  சிவகதி  நீ பாதிரிப்  புலியூர் அரனே

 

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்

நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்

அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்

தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.

 

பனைக்கை = துதிக்கை ; மும்மதம் = யானைக்கு 3 இடங்களிலிருந்து மத நீர் ஒழுகுவதால்.

அனைத்தும் வேடமாம் = பரந்த உலகும் அந்த உலகில் உள்ள அனைத்தும்

சிவனே. 

 

தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்

நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்

ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ

ஓடிப் போம் நமது உள்ள வினைகளே

 

மாசில் வீணையும்   மாலை மதியமும்

வீசு தென்றலும்   வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை   பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை   இணையடி நீழலே.  

 

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்;

நமச்சிவாயவே நான் அறி விச்சையும்;

நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே;

நமச்சிவாயவே நன்நெறி காட்டுமே

 

பூக் கைக் கொண்டு அரன் பொன் அடி போற்றிலார்;

நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்;

ஆக்கைக்கே இரை தேடி, அலமந்து,

காக்கைக்கே இரை ஆகி, கழிவரே!.

 

குறிகளும்(ம்), அடையாளமும், கோயிலும்,

நெறிகளும்(ம்), அவர் நின்றது ஓர் நேர்மையும்,

அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்,

பொறி இலீர்! மனம் என்கொல், புகாததே?

 

விதியற்றவர்களே! குறிகளும், அடையாளமும், கோயிலும், நெறிகளும், அவ்விறைவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் வேதங்கள் கூறினும் உம் மனம் அவற்றுட் புகாதது என்னையோ?

 

கு-ரை: குறிகளும் - கடவுள் திருவுருவங்களும்,

 அடையாளம் - விடை கொடி முதலிய சின்னங்கள், விபூதி உருத்திராக்க சாதனங்கள்.

கோயிலும் - திருக்கோயில்களும்,

நெறிகளும் - சமயநெறிகளும். அல்லது சரியை கிரியை யோக ஞான நெறிகளும் என்க.

அவர் நின்றதோர் நேர்மையும் - அப்பெருமான் இவற்றை நாம் உய்யும் நெறிகளாகக் காட்டி நின்றதொரு நடுநிலையையும். நேர்மை நுண்மை எனலுமாம்.

அறிய - எல்லாரும் அறிய. ஆயிரம் - பலவான.

ஆரணம் - வேதங்களில் கூறிய உபதேசங்கள்.

ஓதிலும் - கூறினாலும்.

பொறியிலீர் - ஞானப்பொறி இல்லாதவர்களே.

 ஊழ் எனவுமாம்.

மனம் புகாதது என்கொல் - உங்கள் மனம் ஈடுபடாததற்குக் காரணம் என்ன


No comments:

Post a Comment