Thursday, March 31, 2016

DAKSHAKAN







நாகங்கள் மற்றும் தக்ஷகன் கதை

 

சந்தியாவந்தனத்தில் ‘அகாசாத் பதிதம் தோயம்..’  என்ற  சூர்ய நாராயண மந்திரத்திற்க்கு பிறகு சிலர் இந்த சர்ப்ப ரக்ஷா மந்திரத்தின் சில பகுதிகளை ச் சொல்கிறார்கள்.

 

நர்மதாயை நம: ப்ராத: நர்மதாயை நமோ நிசி:

நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹிமாம் விஷ சர்பதா

 

அப ஸ்ர்ப்ப ஸ்ர்ப்ப பத்ரம் சே தூரம் கச்ச மஹா யச

ஜனமேஜயஸ்ய யஜ்னாந்தே ஆஸ்தீக வசனம் ஸ்மரண்

 

ஜரத்கார்வோ ஜரத்கார்வாம் சமுத்பன்னோ மஹாயச

அஸ்திக சத்ய சந்தோ மாம் பன்னகேப்யோ அபிரக்ஷது

 

பன்னகேப்ய அபிரக்ஷத்யோம் நம இதி

 

“நர்மதே உனக்கு காலையும்  மாலையும் வணக்கங்கள்.

விஷ சர்ப்பங்களீலிருந்து என்னை காப்பாற்றுமாறு வேண்டுகிறோம்”

 

ஜனமேஜயஸ்ய யக்ஞத்தின் முடிவில் அஸ்தீகன் சொன்ன

“மஹா சர்ப்பமே தூரம் போ” என்ற வாக்கினை நினைவில் கொள்வீர்.

 

ஏன் நர்மதை துதிக்கப்படுகிறது?

 

நாகங்கள் பல விதங்களீல் துன்பத்திற்க்கு உள்ளாகி இருக்கின்றன,

 

கந்தர்வர்கள்,  நாகர்களை தோற்கடித்து அவர்களது அரசையும் செல்வங்களையும் கவர்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. நாகர்கள் விஷ்ணுவை துதித்து உதவி கோருகிறார்கள். விஷ்ணு நாகர்களை அப்போதைய அயோத்தி அரசன் புருகுத்சு விடம் உதவி கேட்கச் சொல்கிறார். நாகர்கள் தங்கள் சகோதரி நர்மதா வை அரசரிடம் அனுப்பி உதவி கேட்கச் செய்கிறார்கள். புருகுத்சு உதவ சம்மதித்ததும், நர்மதா அவனை நாக உலகிற்க்கு அழைத்துச் சென்று கந்தர்வர்களை போரில் எதிர் கொண்டு, அரசன் உதவியுடன் கந்தர்வரை போரில் தோற்க்கடிக்கிறாள்.

நாக இனத்தை காப்பாற்றுகிறாள்.

இதை நினைவுறுத்து விதமாக நாகர்கள், நர்மதா இவ்விதம் புருகுத்சன் மூலம் நாக குலம் காத்த கதையை நினைவு கொள்பவரை நாக விஷம் பாதிக்காது என்று அறிவிக்கிறார்கள்.

இறுதியில் புருகுத்சு அரசனை நர்மதாவே மணம் செய்தி கொள்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன

 

ஒன்பது புகழ் பெற்ற நாகங்களாக

அனந்தன், வாசுகி , ஆதிசேஷன், பத்மனாபன், கம்பலன், திருதராஷ்டிரன், சங்கபாலன், தக்ஷகன், காளியன்

சொல்லப்படுகின்றன.

 

(வைஷ்ணவ சம்பிரதாய்த்தில் இந்த ஒன்பது நாகங்களும் கருடனின் ஆபரணங்களாக சொல்லப்படுகிறது. )

 

பாரத நாட்டின் மிகப் பழைமையான தெய்வ வழிபாடுகளில் நாக வழிபாடும் ஒன்றாகும். பாரதம் மட்டுமன்றி, அநேகமாக உலகின் எல்லா நாடுகளிலும் எல்லாச் சமயங்களிலும்

நாக வழிபாடு இருந்தது. எகிப்திலும், கிரீஸிலும், ரோமிலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும், வடதென் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், பசிபிக் தீவுகளிலும் எங்கும் நாகதெய்வங்களும், நாகக் கதைகளும் உள்ளன.

 

கம்போடிய நாட்டு வரலாற்றின் படி, பாரதத்திலிருந்து சென்ற அந்தணரான கவுண்டின்யர் அந்நாட்டின் நாக இளவரசியை மணந்ததாகவும் அவர்களது சந்ததியினரே கம்போடிய மக்கள் என்றும் தெரிய வருகிறது. நமது வேதங்களில் நாகங்களைப் பற்றிய குறிப்புகளும், கதைகளும் காணப்படுகின்றன.

சிந்து வெளி நாகரிகத்தைச் சார்ந்த இலச்சினைகளில் அரசமரமும், நாக உருவங்களும் காணப்படுகின்றன.*

 

(கவுண்டின்யா-கம்போடியா பெயர் ஒற்றுமை காண்க)

 

*எல்லாத் தெய்வங்களும் பாம்பை மிக உயர்வாக மதிப்பதைக் காண்கிறோம்.

 

 

ஆதிசேஷன் திருமாலின் படுக்கையாகி பூமியைத் தாங்குபவர்.

வாசுகி திருப்பாற்கடலைக் கடைய நாணானவர். (வாசுகி பெண் இனம் அல்ல)

பத்மன் சூர்யாந்தர்யாமி எனும் மந்திர வித்தையை தர்மாரண்யன் எனும் அந்தணருக்கு உபதேசித்தவர்.

மகாபத்மன் வடதிசையின் காவலன்.

ஈசனின் மோதிரமே கார்க்கோடகன்.

தக்ஷகன் பரீட்சித்து மகாராஜாவைக் கடித்து வைகுண்டம் அனுப்பியவன்.

சங்கபாலன் ஈசனின் சிரத்தை அலங்கரிப்பவன்.

சிவபெருமானும் பாம்பைக் கழுத்தில் அணிந்திருக்கிறார்.

மகா கணபதியின் இடுப்புக் கச்சை பாம்பு தான்.

தேவாசுரர்கள் அமுதத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது

வாசுகி என்ற நாகராஜனே மந்தர மலையைக் கட்டும் கயிறாக உதவுவினான்.

இராம இராவண யுத்தம், மகா பாரதப் போர் ஆகியவற்றில் நாகாஸ்திரம் பயன்படுத்தப்பட்டது.

வருணன் நாகபாசத்தால் பிணைத்தான்.

சேஷன் தன் ஆயிரம் தலைகளால் பிரபஞ்சத்தைத்

தாங்குகிறான்.

பகவத் கீதையில் ‘சர்ப்பங்களில் நான் வாசுகி’ என்று கண்ண

பெருமான் பேசுகிறான்.*

 

மகாபாரதத்தில் நிறைய பாம்புகள் பற்றிப் பேசப்படுகிறது. சாமான்யப் பாம்புகள் அல்ல. பாதி தெய்வாம்சம் கொண்ட பாம்புகள். வரம் தரவும் சாபம் ஏற்கவும் தகுதி கொண்ட பாம்புகள். பீமன், நாகலோகத்தில் அவனது தாத்தாவின் முன்னோரைச் சந்தித்து ஆசி பெறுகிறதாக ஒரு கதை. நாகராஜன் தந்த நாக ரசம் குடித்துத் தன் பலத்தைப் பெருக்கிக் கொள்கிறான். அர்ச்சுனன் மனைவிகளில் ஒரு நாக அரசி தென்படுகிறாள். ஆனால், பாண்டவர்கள் மரபான குரு வம்பசத்துக்கும் பாம் வம்சத்துக்கும் தீராப் பகை இருந்துள்ளதையும், பல நூற்றாண்டுகள் அந்தப் பகை புகைந்ததையும், பல பழி தீர்த்தல்களோடு அது முடிந்ததையும் வியாசர் விரிவாகச் சொல்கிறார்.

 

இங்கே நாகங்கள் வரலாறு பற்றிக் காண்போம்

 

சப்த ரிஷிகளில் ஒருவர் காஷ்யபர், அவருக்கு இரண்டு மனைவிகள் முதலாமவள் விநதை, இரண்டாமவள் கத்ரு. இதில் விநதை மிக நல்லவள், கத்ரு கொடியவள். இருவரும் கரு தரித்து - ஆனால் வினோதமாக கத்ரு ஆயிரம் முட்டைகளும், விநதை இரண்டு முட்டைகளும் இட்டனர்.


ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் ( அப்பப்பா !!) கத்ருவின் ஆயிரம் முட்டைகள் குஞ்சு பொறித்து நாகங்கள் வெளி வந்தன. இதைக் கண்டு தன் முட்டைகள் என்னவாயிற்று என்று எண்ணி அவசரத்தில் ஒன்றை உடைத்து பார்த்தாள் விந்தை - அவசரத்தில் அவள் செய்த தவறு - உள்ளே குழந்தை பாதிதான் உருவாகி இருந்தது - அவனே அருணன். எஞ்சி உள்ள தன் தமயனின் முட்டையை பொறுமையுடன் பாதுகாக்க அறிவுரை கூறிவிட்டு அவன் சூரியனின் தேரோட்டி ஆனான். (அருணனின் மகனே ராமாயணத்தில் வரும் ஜடாயு )
அத்தருணத்தில் பொறாமையினால் கத்ரு ஒரு சூழ்ச்சி செய்தாள். அவள் விநதையை ஒரு போட்டிக்கு அழைத்தாள். அந்த போட்டியில் யார் தோற்றுப் போகின்றார்களோ அவர் வெற்றி பெற்றவரின் அடிமையாக இருக்க வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனை.

 

அந்தப் போட்டி என்ன ? இந்திரனிடம் ‘உச்சைஸ்ரவஸ்’ னு ஒரு வெள்ளைக் குதிரை இருந்தது. பாற்கடலை கடையும் போது வந்தது அது - அதனுடன் வந்ததே கௌஸ்துபம் - பெருமாளின் மார்பை அலங்கரிக்கும் மணி அந்தக் குதிரை சில சமயம் வானத்திலே பாய்ந்து போகும். அதைப் பார்த்ததும் கத்துருவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அவள் வினதையிடம், ‘உச்சைஸ்ரவஸ் என்ன நிறம்?’னு கேட்டாள். வினதையும் அந்தக் குதிரையைப் பார்த்திருக்கிறாள். அதனால் ‘வெள்ளை’ னு பதில் சொன்னாள்.  இல்லை, அது கறுப்புன்னா கத்துரு. ஆனா வினதைக்கு நல்லா தெரியும். அது முற்றிலும் வெள்ளைதான்னு; அதனால தான் சொன்னதுதான் சரின்னு அடிச்சுச் சொன்னா. உடனே கத்துரு, ‘அது முழுசுமாக வெள்ளையில்லே, அதனோட வால் கறுப்பு’ன்னா. வினதையோ, ‘கிடையவே கிடையாது’ன்னு தீர்மானமாகச் சொன்னா, கத்துரு உடனே, ‘பந்தயம் வெச்சுக்கலாம். உச்சைஸ்ரவஸ் ஏதாவது ஒரு பகுதியிலே கறுப்பா இருந்தா நீ எனக்கு அடிமையாகணும்னு சொன்னா. அப்படி இல்லேன்னா, தான் அவளுக்கு அடிமை’ன்னா, வினதையும் ஒப்புக்கிட்டா.

 

‘‘உச்சைஸ்ரவஸ் முற்றிலும் வெண்மைதான்னு கத்துருவுக்கும் தெரியும். ஆனா, தான் போட்டியில ஜெயிக்க அதனோட வாலை மட்டுமாவது கறுப்பாகக் காட்டணுமே! உடனே பாம்பாக இருந்த தன்னோட பிள்ளைகள்ல கறும்பாம்புகள் சிலவற்றைக் கூப்பிட்டா, ‘நீங்க உடனே போய் அந்த உச்சைஸ்ரவஸ் வால்ல போய் சுத்திக்கோங்க. இங்கேயிருந்து பார்த்தா, அந்த வால் கறுப்பாகத் தெரியணும்’னு சொன்னா. உடனே அந்தப் பிள்ளைகளும் அம்மா பேச்சைத் தட்டாம அப்படியே சுத்திகிட்டாங்க. வழக்கம்போல உச்சைஸ்ரவஸ் வானத்திலே வந்தபோது, இந்த சமயம் அதனோட வால் கறுப்பாக இருந்தது. அதை வினதைக்கு கத்துரு காட்டினாள். ‘பார், அதனோட வால் கறுப்பா இருக்கு. அதனால நீ எனக்கு அடிமை’ அப்படின்னா. குதிரையைப் பார்த்த வினதை திடுக்கிட்டாள். அது எப்படி கறுப்பாச்சு? இத்தனை நாள், தான் பார்த்தபோது வெள்ளையாக இருந்ததேன்னு வினதைக்கு ஒரே குழப்பம். ஆனா அதைத் தீர விசாரிக்காம, உண்மையைத் தெரிஞ்சுக்கணும்னு ஆத்திரப்படாம, வாக்குக் கொடுத்ததுபோல கத்துருவுக்கு அடிமையானா.

 

குறிப்பிட்ட காலத்தில் வினதயின் மகன் கருடன் முட்டையில் இருந்து வெளி வருகிறான். அவன் உருவம் வளர்ந்து மிக பிரம்மாண்டமாக அனைவரும் அஞ்சும் அளவிற்கு பெரியதாக உள்ளது. தேவர்கள் வேண்டுகோளின் படி அவன் தன் உருவத்தை சிறியது படுத்துகிறான்.


தான் அடிமைப்பட்டதைத் தன்னோட மகன் கருடன்கிட்ட சொன்னா வினதை. மகனுக்கோ கோபமான கோபம். தன்னோட தாயை ஏமாற்றி அடிமையாக்கிய சின்னம்மாவை அவன் உடனே பழி வாங்கத் துடிச்சான். ஆனா, அவனை வினதை சமாதானப்படுத்தினா. தன்னைப் போலவே தன்னுடைய மகனும் கத்துருவுக்கு அடிமையாகிடுவானோன்னு பயந்தாள். கருடனும் யோசிச்சான். போட்டின்னு வந்துட்டா எப்படியாவது ஜெயிக்கணும்னுதான் நினைப்பாங்க. அந்த வகையில கத்துரு ஜெயிச்சதிலேயும் அவளைப் பொறுத்தவரை நியாயம் இருக்கலாம். ஆத்திரப்பட்டு கத்துருவோட சண்டை போடறதைவிட, அவளை அனுசரிச்சுகிட்டுப் போகலாம்னு நினைச்சான். ஆகவே, கத்துருகிட்ட போய் அவளுக்குத் தேவையானதைப் பண்ணிக் கொடுத்து, தன் தாயை விடுவிக்கணும்னு நினைச்சான். கத்துருகிட்ட போய், ‘எங்க அம்மாவை விட்டுடுங்க. உங்களுக்கு என்ன வேணும்னு கேளுங்க. நான் பண்ணித் தரேன்’ன்னான். உடனே கத்துரு ஒரு ஐடியா பண்ணினாள். அம்மாவை அடிமையாக்கியாச்சு. இவனையும் ஏதாவது கஷ்டமான வேலையைச் சொல்லி மடக்கிப் போட்டுட வேண்டியதுதான்னு நினைச்சா. அதனாலே, அவன்கிட்ட தேவலோகத்திலே இருக்கற அமிர்தத்தைக் கொண்டு வரும்படி சொன்னா. கருடனுக்கோ அது ஒண்ணும் பெரிய வேலையாகத் தெரியலே. ஏன்னா, அப்படிக் கொண்டு வந்துட்டானா அம்மாவை விடுதலை செய்துடலாமே?


இந்திர லோகத்தை தன் பறக்கும் சக்தியினால் சுலபமாக அடைந்து விடுகின்றான் கருடன். கருடனும் வழியில் தன்னை எதிர்த்தவர்களை அழித்துக் கொண்டே தேவலோகம் சென்றார்.
 

அமிர்த குடத்தை நெருங்கும் கருடனுக்கும் தேவர்களுக்கும் இடையே பெரும் போர் நடை பெறுகின்றது. அப்போது கருடனுடன் போரிட இந்திரனே வருகிறான் தேவர்களை வெற்றி பெற்று அடுத்து உள்ளே செல்கிறான் கருடன். அங்கே ஒரு பெரிய தீ அவனை தடுக்கிறது. உடனே அவன், பூமியில் இருக்கும் பெரிய அருவிகள் மற்றும் ஆறுகளில் இருந்து நீரை குடித்து வந்து - அதை அந்த தீயின் மேல் துப்பி அணைக்கிறான். பிறகு ஒரு இயந்திரம் - வெட்டு கத்திகள் பொருந்தியது - சுழன்று கொண்டே இருக்கிறது - தன் உருவத்தை சிறியதாய் மாற்றி அதனுள்ளே நுழைகிறான். அங்கே இரு ராட்சசப் பாம்புகள் - அவற்றை எளிதில் கடித்து நசுக்கிக் கொன்று, அமிர்தம் உள்ள குடத்தை எடுக்கிறான்.

 


amrit garuda.jpg


.ஆயினும் இந்திரனால் கருடனை வெல்ல முடியாமல் இறுதியாக வஜ்ராயுதத்தை இந்திரன் எய்கின்றான்.  கருடன் அப்போது வஜ்ராயுதத்தை வணங்கி இந்திரனிடம் சென்று நடந்ததைக் கூறி தான் அமிர்தம் பெற வந்ததற்கான உண்மையான நோக்கத்தை கூறுகின்றான். இருவரும் சேர்ந்து கருடனின் தாயின் அடிமைத்தனம் போக்கவும், நாகங்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் போகவும் ஒரு வழி வகுக்கின்றனர்.


இந்திரன் கருடனுக்கு ஒரு வரம் தருகிறான். கருடன் அன்று முதல் சிற்றன்னைக்கு துணை சென்ற நாகங்கள் எல்லாம் தனக்கு இயற்கையான இரைஆக வேண்டும் என்று கேட்கிறான். பிறகு கருடன், ஆணவத்தால் அறிவிழந்த பெரியம்மாவிடம் அமிர்தத்தை அளித்து தன் தாயின் அடிமைத்தனத்தை நீக்கி, தன்னைப் பெற்றவளின் வயிற்றை குளிரச் செய்கின்றான். அமிர்தத்தை தரையில் வைத்து, நாகங்களை அதை பருகும் முன் சென்று குளித்து வருமாறு கூறுகிறான் கருடன். அவர்கள் குளிக்க செல்லும் போது இந்திரன் வந்து அமிர்தத்தை எடுத்து சென்று விடுகிறான். அமுத கலசம் வைத்திருந்த

தர்ப்பைப் புல்லின்மீது சிந்தியிருந்த அமுதத் துளிகளை நக்கப் போன பாம்புகளின் நாக்குகள் இரண்டாகப் பிளந்தன இப்படியாக கருடனுக்கும் நாகங்களுக்கும் அமிர்தம் கிடைக்காமல் செய்து விடுகிறான் இந்திரன்.

தாயை மீட்டதும், தமது தாயாரை ஏமாற்றிய சகோதரர்களை துவம்சம் செய்யத் துவங்குகிறான் கருடன்.  காஷ்யப முனிவர் தலையிட்டு இருவருக்கும் சமாதானம் செய்தார். அங்கு வந்த இந்திரனும் அது முதல் கருடனுக்கு பாம்புகள் அடிமையாகட்டும்; என கருடனுக்கு அருள் புரிந்தார். பின்னர் திரும்பும் பொது மகா விஷ்ணு எதிரில் வர - இருவரும் ஒருவரை ஒரவர் புரிந்து - ஒரு சமரசத்திற்கு வருகின்றனர். விஷ்ணு கருடனுக்கு அமிர்தத்தை அருந்தாமலே அமர ஆயுளை தருகிறார், கருடனும் தன் பணி முடிந்தவுடன் அவரின் வாகனமாக இருக்க வாக்கு தருகிறான். கருடன் விஷ்ணுவிற்கு வாகனமாகிறான்.

 தமது தாயை அடிமைத்தனத்தில் இருந்து மீட்ட விஷ்ணுவின் வாகனமான கருடனை கொண்டாடும் விதத்திலேயே சக்தி வாய்ந்த மழலைச் செல்வமும், குடும்ப ஒற்றுமையும், முக்கியமாக தாயார் மகன் உறவு பலப்பட வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டு கருட பஞ்சமி கொண்டாடப் படுகின்றது.

 

 

வ்யாசர் இந்த கதைகளை த் தன் சிஷ்யர்கள் வைசம்பாயனருக்கும் ஜைமினிக்கும் இன்னும் பலருக்கும் சொல்லி வைக்கிறர். நம்மிடம் சேர்ந்திருப்பது வைசம்பாயனின் பிரதியாகும். ஒவ்வொரு சிஷ்யரும், அவரவர் சிஷ்யரும் பாரதத்தைப் பெருக்கி அதை மகாவாக மாற்றியுள்ளார்கள். எல்லோர் கையிலும் பாரதம் மேலும் மேலும் பிரகாசிக்கவே செய்தது. புதிய கதைகள், வம்ச மரபுகள், ரிஷி பரம்பரைகள் கூடியும் குறைத்தும் சொல்லப்பட்டாலும் எல்லா பாரத ஆசிரியர்களும், ஒரு கதையை மாற்றவே இல்லை.

 

அது ஜனமேஜயனின் சர்ப்பயாகம் செய்த கதை. பாண்டவ வம்சத்துக்கும் பாம்பு வம்சத்துக்கும் இடையே நேர்ந்த பகை, சுமார் ஐநூறு ஆண்டுகள் நீடித்தது. அது முடிவுக்கு வந்தது ஜனமேஜயனின் சர்ப்பசத்ர யாகத்தில்தான். முடித்து வைத்தவன் ஆஸ்தீகன் என்கிற சர்ப்ப குலத்து ரிஷிகுமாரன்.

 

பாகப்பிரிவினை நடத்தும் திருதராஷ்டிரன், குருதேசத்தின் வளமான வயல்வெளிகள், நதிகளைக் கொண்ட பகுதியைத் தனக்கும், வெறும் காட்டுப் பகுதியைத் தம்பி பிள்ளைகளான பாண்டவர்களுக்கும் ஒதுக்குகிறான்.  காண்டவப் பிரஸ்தம் என்று பெயர் கொண்ட அந்தக் கடுமையான, மனிதர் புக முடியாத காட்டை அர்ச்சுனனும் கிருஷ்ணனும் நின்று, மிகக் கடுமையாக உழைத்து, வாழும் இடமாக மாற்றுகிறார்கள். அப்போது காட்டுக்குள் வசித்த விலங்குகள், பறவைகள் என்று பலவும் மாய்ந்து ஒழிந்தன. காட்டுக்கு அவர்கள் வைத்த நெருப்பு சூழ்ந்து பாம்புகள் இறக்க நேர்ந்தது.

 

பாம்புகளின் அரசன் தட்சனின் மனைவி அர்ச்சுனனால் வனத்தை எரிக்கும் நெருப்பில் கொல்லப்படுகிறாள். அது மட்டுமின்றி, தட்சகனின் மகனும் பெரும் விபத்துக்குள்ளாகிறான். பக்கத்தில் நிற்கும் கிருஷ்ணனைக் கண்டு, கிருஷ்ணனின் சன்னிதானத்தில், அர்ச்சுனனுக்கு எதிராக, யார் என்ன செய்யக்கூடும் என்பதாக நினைத்து, பழிவாங்கக் காத்திருக்கிறான். அந்தப் பகை, அர்ச்சுனனுக்கு பின் அவன் மகன் அபிமன்யு காலத்தில் முடிவு பெறுகிறது. பரிட்சித்தைத் தட்சகன் கொல்கிறான். நாடும் வீடும் நிர்மாணிப்பதற்கு  மூட்டிய தீ என்னவெல்லாம் விளைவுகளை எற்படுத்துகின்றது என்று பாருங்கள்.

 

பகை, இத்துடன் முடிவு பெறுகிறதா? இல்லை. பகையும், வஞ்சினமும் புகுந்த மனம் எப்போதுமே ஆறாதே! தந்தை (பரீக்ஷித்தின்) மரணம், மகன் ஜனமேஜயன் மனத்தை வாட்டுகிறது. தட்சகனை மட்டுமல்ல, பாம்பு வம்சத்தையே கொன்று, பழி தீர்க்க சர்ப்ப சத்ரயாகம் எனும் கொடும் யாகத்தைத் தொடங்குகிறான் ஜனமேஜயன். பகை, ஒரு சங்கிலித் தொடர். ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டது. வியாசன் மிக நுட்பமாக மனித மனத்தை ஆராய்ந்த மிகச் சிறந்த கதைப்பின்னல் இன்னும் நீள்கிறது.

 

பரிட்சித்தைத் தட்சகன் கொன்றதுக்கு, தக்ஷகனின் மனைவி அர்ச்சுனனால் கொல்லப்பட்டது ஒரு காரணமா என்றால், அது மட்டுமல்ல. பரிட்சித்துவும் குற்றம் செய்கிறான். அது என்ன? ஒருமுறை, பரிட்சித்து, பாண்டு வம்சம் மிகவும் விரும்பிச் செய்த வேட்டைக்குப் புறப்படுகிறான். பலமணி நேரத்துக்குப்பிறகு, பல விலங்குகளைக் கொன்றொழித்து, ஒரு மானைத் துரத்திக்கொண்டு ஓடுகிறான். மான் மறைந்து விடுகிறது. அங்கு, ஒரு முனிவர் உள்முகப் பயணம் மேற்கொண்டிருந்தார். பேசா நோன்பிருக்கிறார் அவர். அது தெரியாமல், பரிட்சித்து அவரிடம் மான் சென்ற வழியைக் கேட்கிறான். சமீகர் என்று அந்த ரிஷி மௌனம் காக்கிறார். அரசன் என்கிற ஆணவம் மேலெழுகிறது. ரிஷியை அவமானம் செய்யக் கருதும் பரிட்சித்து, தன் ஆயுள் முடிவைத் தானே கைதட்டி அழைக்கிறான். அங்கே செய்துக் கிடந்த ஒரு பாம்பை எடுத்து, முனிவரின் கழுத்தில் போட்டு, ஏளனச் சிரிப்புடன் அகன்றான். வீடு திரும்பிய முனிவரின் மகன் சிருங்கி, தன் தந்தைக்கு நேர்ந்த அவமானம் சகியாது, "இந்தப் பாவம் செய்த பரிட்சித்து மன்னன், ஏழு இரவுகளுக்குள் தட்சனாகிய பாம்பு கடித்துச் சாவான்' என்று சாபம் இடுகிறான். ஆக, அர்ச்சுனன் பேரனும் அபிமன்யுவின் புதல்வனும் ஆகிய பரீக்ஷித் மரணத்துக்கு எத்தனை காரணங்கள்.

 

பகை, சினம், ரௌத்ரம் அனைத்தும் சாபத்தை அழைக்கும் முகாந்திரங்கள் என்கிறார் வியாசர். மனித வெறுப்புகள் மட்டுமல்ல, பிற உயர் வெறுப்புகள்கூட மனித உயிரைப் பகைக்கும் என்கிறார் வியாசர் பெருமான். இன்னுமொரு பகையின் கதை.

 

கத்ரு, பாம்புகளின் தாய். பாம்பு வசம்சத்தின் மாதா அவர். தன் குழந்தைப் பாம்புகள், தன் சொல்லை மதிக்கவில்லை என்பதுக்காகத் தாயே தன் குழந்தைகளைச் சபிக்கிறான். என்னவென்று?

தன் சொற்படிகேட்காத தம் மக்கள் (பாம்புகள்) அனைவரும் தீயில் கருகி மடிவார்கள் என்று கத்ரு சாபமிட்டுவிட்டாள். இது, பிரும்மா முன்னிலையில், அவர் அங்கீகாரத்துடன் நிகழ்கிறது. மனித குலத்தை இந்தப் பாம்புகள் பெரும் துன்பம் செய்கின்றன என்று நினைக்கிறார் பிரும்ம தேவர். ஆகவே, அவைகள் மறையட்டும் என்பது பிரம்ம வாதம்.

 

 

ஆக, பாம்பு வதத்துக்குக் காரணங்கள் சொல்லி முடித்தாயிற்று. ஜனமேஜயன் தன் தந்தையைக் கொன்ற தட்சகன் மற்றும் பாம்பு வம்சத்தையே கொல்ல, யாக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறான்.

சரி... பாம்புகள், யாக நெருப்பிலிருந்து தப்பிக்க யோசிக்கும்தானே? அப்போதைய பாம்புகளின் அரசன் வாசுகி, தன் அமைச்சுப் பாம்புகளுடன் சேர்ந்து யோசிக்கிறான். தாயின் சாபம் என்பது தெய்வச் சாபம். தெய்வச்சாபம், தெய்வத்தால் மட்டுமே தீரும் என்று முடிவெடுக்கிறான் வாசுகி.  பிரும்மதேவர், சாப விமோசனத்தையும் சொன்னது அவன் நினைவுக்கு வருகிறது.  "ஜரத்காரு என்னும் மகாத்மாவிடம் இருந்து அஸ்தீகன் என்கிற மகாஞானி தோன்றப் போகிறான். அவனே, ஜனமேஜயன் செய்யும் யாக நெருப்பிலிருந்து பாம்புகளைக் காப்பாற்றப் போகிறான்' என்ற ப்ரம்மனின் வாக்கு வாசுகி நினைவுக்கு வருகிறது,

 

அப்படியானால், பிறக்கப்போகும் அஸ்தீகனுடைய தாய் யார் என்று யோசிக்கிறார்கள் நாகர்கள். அப்படி

தாயாகப் போகிறவள், வாசுகியின் சகோதரியே எங்கிறார் ப்ரம்மா.

 

ஜரத்காருவை ப் பற்றி பல பக்கங்கள் எழுதுகிறார் வியாசர் தம் பாரதத்தில். அந்த ரிஷி, காற்றை ஆகாரமாகப் புசித்துக் கொண்டு, கடும் தவம் செய்து கொண்டிருக்கிறார். உடம்பை, ஒரு சுமை என்று திரிகிறார் அவர். உலக இன்பங்கள் என்பவை தமக்கு விரிக்கப்படும் வலை என்பது அவர் எண்ணம். எவருடனும் பேசாது, எவர் உறவும் கொள்ளாது, மனிதர் பிரவேசியாத காட்டுக்குள் அலைகிறவராக அவர் இருக்கிறார். இவன் யாயாவர்ஸின் ஒரே மகன் தவத்தால் தன் உடலை ஒல்லியாகவும் வ்யாதியுள்ளவன் போல் காட்டிக் கொண்டதால், ஜரத்காரூ எனப் பெயர் பெற்றார்.  அவர் மூலமாக, பாம்பினம் பிழைக்க வேண்டுமே? காலம் கனிந்தது.

 

ஒருமுறை ஜரத்காரு, பூமியின் பள்ளம் ஒன்றில், இருட்டுப் பகுதியில் தலைகீழாகவும் கால் மேலாகவும், புல்லையே ஆதாரமாகப் பற்றிக் கொண்டு தொங்கிக் கொண்டு ஒருத்தி இருப்பதைக் கண்டு, அந்த ரிஷியின் வற்றிய மனத்திலும் நீர் சுரந்தது.

 

"யார் நீங்கள். உங்களுக்கு இந்தத் துன்பம் ஏன் நிகழ்ந்தது. நீங்கள் செய்த பாவம் என்ன?' என்று கேட்கிறார் ஜரத்காரு.

"நாங்கள் பாவம் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் எங்கள் வம்சம் முடிவு பெறும் நிலையில் இருக்கிறது எங்கள் வம்சத்து மகன், புத்திர உற்பத்தி செய்யாது, வம்ச விருத்தி கொள்ளாமல் இருப்பதால், எங்களுக்கு இந்தத் துன்பம் நேர்ந்தது.'

 எங்கிறாள் அந்தப் பெண்.

"அப்படி என்றால், அந்தப் பாவி யார்? எங்கிருக்கிறான் சொல்லுங்கள். என ஜரத்காரு கேட்க

"எங்கள் முன்னால்தான் நிற்கிறான்.' என்கிறாள்.

"என்ன நானா?'

"ஆம், ஜரத்காருவே. நீயே எங்கள் வம்சத்து கடைசிக் கொழுந்து, நீ இல்லற தர்மத்தைப் புறக்கணித்து எங்களுக்கு இந்தத் துயரத்தைக் கொடுத்திருக்கிறாய். நீயே பாவி.' என்கிறாள்.

ஜரத்காருவின் மனம் இளகியது

 

ஜரத்காருவின் மனம் இளகியது. அவர் சில நியமங்களை இப்போது உருவாக்குகிறார். "எந்தப் பெண், என் பெயராகிய ஜரத்காரு என்பதையே தன் பெயராக வைத்திருக்கிறாளோ அவளையே நான் மணப்பேன். அதோடு, என் மனம் எப்போது நினைக்கிறதோ, அப்போது, எனக்குப் பிட்சையாக ஜரத்காருவைத் தருவீர்களா என்று மூன்று முறை கேட்பேன். அதற்கு பிட்சையாகத் தருகிறேன் என்று பதில் வரவேண்டும். பிட்சையாக அந்தப் பெண்ணைத்தான் மணப்பேன்' என்று சொல்லி தம் பணியை மேற்கொண்டு அவ்விடம் விட்டு நகர்கிறார் ஜரத்காரு.

 

இதை வாசுகியாகி பாம்பரசன் கேட்கிறான். அந்தக் கணம் முதல், ஜரத்காரு பின்னாலேயே அவர் அறியாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். தன் குலத்தைக் காக்க ஓர் அரசன் செய்கிற பெரிய தியாகத்தை மிக அருமையாகச் சொல்கிறார் வியாசர்.

 

காலம் கனிகிறது.

ஏதோ ஒரு கணத்தில், ஜரத்காரு, மிக மென்மையாக, சப்தம் இல்லாமல், யாரும் கேட்டுவிடக்கூடாது என்கிற எச்சரிக்கையோடு, "ஜரத்காரு என்ற பெயர் கொண்ட கன்னிகையை எனக்கு யார் பிட்சையாகத் தரப் போகிறார்' என்கிறார்.

"நான் தந்தேன் சுவாமி' என்று முன்னால் வந்து நின்றான் வாசுகி.

தன் பேச்சை யாரு கேட்டிருக்க முடியாது என்று நினைத்த ஜரத்காரு திடுக்கிட்டார். திருமணத்தைத் தவிர்க்க நினைத்த ரிஷி, விதியின் ஆணைக்குக் கட்டுப்படுகிறார். வாசுகியின் தங்கை ஜரத்காருவை மணக்கிறார். மகாஞானியும் மகா கருணையானதுமான ஆஸ்தீகன் ஜனன தருணம் வருகிறது

 

இந்த வாசுகியின் தங்கை ஜரத்காரு தான் வட இந்தியாவில் மானசா தேவி என்று அழைக்கப்படுகிறாள்.

பாம்பினங்களை, மனிதர்கள் பெருவாரியாக அழிக்க, ப்ரம்மா பாம்பு இனத்தை காப்பாற்றுமாறு, கஸ்யபரிடம் கூற, அவரின் மனதிலிருந்து உருவானவள் என்பதால் இந்த மானசாதேவி என்ற பெயர்காரணம். ஓம் ஹ்ரீம்,ஸ்ரீம்,க்லீம்,ஐம் மானஸாதேவியே ஸ்வாஹா" என லக்ஷம் முறை உச்சாடனம் செய்தால் விஷ முறிவு அடையும் சக்தி கிடைக்கும்.

 

ஒருமுறை "எனக்குப் புத்திரன் பிறப்பானா' என்று மனைவி கேட்டபோது, உண்டு என்ற பொருளில், அஸ்தி என்றார் கணவர் ஜரத்காரு. அதுவே பிறக்கப் போகும் குழந்தையின் பெயர் காரணமாக அமைந்தது,  ஒருநாள் மாலை நேரமாகி விட்டது. சந்தியாவந்தனத்திற்கான வேளை நெருங்கி விட்டதே என்ற கவலையுடன் தன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்த கணவனை  எழுப்பினாள் ஜரத்காரு. தன் துயிலை அவள் கெடுத்து விட்டதாகக் கோபித்துக் கொண்டு மனைவியை  விட்டு விட்டு ஜரத்காரு போய்விட்டார். உரிய காலத்தில் குழந்தை பிறக்கிறது. ஆஸ்தீகன் என்று பெயரிடப்படுகிறான்.

 

உரிய காலம் வந்ததும்,  அரசனும் தாய்மாமனும் ஆன வாசுகி, தன் பாம்புச் சுற்றத்தோடு ஆஸ்தீகன் முன் வந்து நின்று, "எங்களைக் காப்பாற்று குழந்தாய். ஜனமேஜயன் யாக நெருப்பு எங்களை அழைக்கத் தொடங்கி விட்டது. யாக மந்திரங்கள் எங்களை மிகச் சீக்கிரம் கட்டி இழுக்கத் தொடங்கும்' என்கிறான். தாய் ஜரத்காரு, "மகனே, உன் பிறவிப் பயன் விளையும் காலம் வந்துவிட்டது' என்கிறாள். ஆஸ்தீகன், யாகம் நடக்கும் தட்சசீலம் நோக்கிப் புறப்படுகிறான்.

 

ஜனமேஜயனின் தலைநகரம் அஸ்தினாபுரம். அங்கு அல்லவா யாகம் நடந்திருக்க வேண்டும். ஏன் தட்சசீலத்துக்குச் செல்கிறான் ஜனமேஜயன் என்பது ஓர் ஆராய்ச்சி. அறிஞர்கள் பலரும் இதுபற்றிப் பேசி இருக்கிறார்கள். ஒன்று ஜனமேஜயன் அப்போதுதான் தட்சசீலத்தைக் கைப்பற்றி இருந்தான். இரண்டாவது தட்சகன் என்ற பெயர் நட்பு அளவிலும், தட்சகனுக்குச் செல்வாக்கு உள்ள இடமாகவும் அந்த நாடு இருந்துள்ளது என்பது. மூன்றாவது காரணம், பாம்புகள் நிறைந்த பூமி அது என்பது. அதாவது பாம்புகளால் ஆளப்பட்ட பிரதேசம் அது என்பதும் கூட காரணம்.

யாக சாலையில் யாகம் நடந்துகொண்டிருந்தது. யாக சாலை நிர்மாணிக்கப்பட்டபோதே, ஒரு வாஸ்து அறிஞன், "இந்த இடத்தில் நடத்தப்படும் எந்தச் சடங்கும் நிறைவேறாது' என்று சொல்லி இருந்தான். ஜனமேஜயன் அவர் பேச்சை அலட்சியம் செய்ததோடு, வேத பாராயணம் பண்ணுகிறவர் தவிர, ஈ, எறும்பும் நுழையாது காவல் காத்தான்.

 

அந்தப் பாதுகாப்புகளை உடைத்துக் கொண்டு நுழைகிறான் பாலகன் ஆஸ்தீகன். நுழைந்தனைக் கண்ட ஜனமேஜயன், "பால சந்நியாசி, நீ யார்?' என்கிறான். பதிலுக்கு ஆஸ்திகன், ஜனமேஜயனைப் புகழத் தொடங்குகிறான்.

"இந்திர சபை போன்றது உன் ராஜ சபை. நூறு இந்திரன் போன்றவன் நீ. உன் யாகம், சந்திரன், வருணன் போன்ற தேவர்களின் யாகத்தையும் விடச் சிறந்தது. ராமர் செய்த யாகம் போன்றது உன் யாகம். உன் யாகத்தை நடத்தும் ரிக்விக்குள் மகா ஞானிகள். அதோ அக்னி பகவான். நேராகவே வந்து அவிசைப் பெற்றுக் கொள்கிறார். வால்மீகி, வசிஷ்டர் போன்ற மகா ரிஷிகள் உன் சன்னதியில் காணப்படுகிறார்கள்' என்பது போல நூறு வரிகளில் புகழ்கிறான் ஆஸ்தீகன்.

ஜனமேஜயன், மகிழ்ந்து போகிறான். "பாலகனே உனக்கு வரம் தர ஆசைப்படுகிறேன் என்ன வரம் வேண்டுமோ கேள்' என்கின்றான்.

யாகம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பெருந்திசையிலிருந்து பாம்புகள் ஆகாயத்தில் மிதந்து வந்து, நெருப்பில் விழுந்து துடிதுடித்துச் சாகின்றன.

 

"இன்னும் தட்சகன் ஏன் வரவில்லை?' என்கிறான் ஜனமேஜயன்.

"அவனக்குத்தான் இந்த யாகம். அவனைச் சீக்கிரம் அழைத்துக் கொல்லுங்கள்' என்கிறான்

தட்சனை இந்திரன் பாதுகாக்கிறான். என்று பதில் வருகிறது.

அப்படியென்றால் இந்திரனையும் கொல்லுங்கள் என்கிறான்  ஜனமேஜயன்

இந்திரன் பயந்து ஓடி விடுகிறான்.

தட்சகன் அலறிக் கொண்டு யாக குண்டத்தின் நேராக வானத்தில் நின்று, "என்னை காப்பாற்று ஆஸ்தீகா' என்று அலற்கிறான்

 

ஆஸ்தீகன், தட்சகனிடம், "அங்கே நில்' என்று தன் தவ வலிமையில் ஆணை இடுகிறான். சொன்னதும், ஜனமேஜயனிடம், "எனக்கு வரம் தருவதாகச் சொன்னீரே' என்று கேட்கிறான்.

"ஆம், என்ன வேணும்' என கேட்கிறான் ஜனமேஜயன்

"யாகம் நிறுத்தப்பட வேண்டும். அதுவே என் கோரிக்கை'

ஜனமேஜயன் திடுக்கிடுகிறான்.

"அறிஞரே... உமக்கு நாடு தருகிறேன். அளவற்ற செல்வம் தருகிறேன். எது வேண்டும்?'

"யாகம் நிறுத்தப்பட வேண்டும். அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் வேண்டாம். என் முன்னால் உயிர்கள் அழிவதை நான் அனுமதிக்க முடியாது.' எங்கிறான் அஸ்தீகன்.

 

இதன் ஊடாக, ஜனமேஜயனின் பழி மனம் மாறி, கனிந்து கொண்டு இருக்கிறது. வியாசர் பெருமான் வேறு அந்த யாகத்தில் கலந்து கொண்டு ஆஸ்தீகனை ரசித்துக் கொண்டிருக்கிறார். தன் பரம்பரை பாண்டு - அர்ச்சுனன் - அபிமன்யு - பரிட்சித்து - ஜனமேஜயன் என்று வளர்ந்து வந்து, ஐந்தாவது தலைமுறையில், நாக குலத்துச் சிறுவன் ஒருவன், தருமத்தைக் கையில் எடுத்தக் கொண்டு, தர்மத்தை மிக தீவிரமாக நிர்மாணம் செய்வதை மிகவும் திருப்தியுடன் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், "ஆஸ்தீகன் சொல்வதுதான் தர்மம்' என்கிறார்.

ஒர பிதாமகருக்கு இதைவிட வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்?

"யாகம் நிறுத்தப்படுகிறது' என்று அறிவிக்கிறான் ஜனமேஜயன்.

 

இதன் ஊடாக, ஜனமேஜயனின் பழி மனம் மாறி, கனிந்து கொண்டு இருக்கிறது. வியாசர் பெருமான் வேறு அந்த யாகத்தில் கலந்து கொண்டு ஆஸ்தீகனை ரசித்துக் கொண்டிருக்கிறார். தன் பரம்பரை பாண்டு - அர்ச்சுனன் - அபிமன்யு - பரிட்சித்து - ஜனமேஜயன் என்று வளர்ந்து வந்து, ஐந்தாவது தலைமுறையில், நாக குலத்துச் சிறுவன் ஒருவன், தருமத்தைக் கையில் எடுத்தக் கொண்டு, தர்மத்தை மிக தீவிரமாக நிர்மாணம் செய்வதை மிகவும் திருப்தியுடன் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், "ஆஸ்தீகன் சொல்வதுதான் தர்மம்' என்கிறார்.

ஒர பிதாமகருக்கு இதைவிட வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்?

"யாகம் நிறுத்தப்படுகிறது' என்று அறிவிக்கிறான் ஜனமேஜயன்.

 

சர்ப்ப வம்சம் பிழைத்தது. அப்போது ஏற்பட்ட நிபந்தனை ஆஸ்திகரது பெயரைச் சொல்லுபவர்களை பாம்புகள் கடிக்கக் கூடாது என்பதே. இந்த உடன்பாடு தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

 

இந்த வசனம் சந்தியாவந்தன மந்திரங்களில் இப்போதும் சொல்லப்படுகிறது

 

அப ஸ்ர்ப்ப ஸ்ர்ப்ப பத்ரம் சே தூரம் கச்ச மஹா யச

ஜனமேஜயஸ்ய யஜ்னாந்தே ஆஸ்தீக வசனம் ஸ்மரண்

 

ஜனமேஜயஸ்ய யக்ஞத்தின் முடிவில் அஸ்தீகன் சொன்ன

“மஹா சர்ப்பமே தூரம் போ” என்ற வாக்கினை நினைவில் கொள்வீர்.

 

No comments:

Post a Comment