Thursday, March 31, 2016

PAREEKSHIT


பரீக்ஷித்

மஹாபாரதத்தில் ஒரு அருமையான காட்சியைச் சித்தரிக்கிறார் வேத வியாஸர்.
சோகத்தின் உச்ச கட்டம் அது.
அதில் தான் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னைப் பற்றியும் தன் அரும் குணநலன்களைப் பற்றியும் பேசுகிறார். அதாவது அவருக்குப் பேச வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.கிருஷ்ண சரிதத்தைக் கேட்கும் பக்தர்களான நாம் பரவசப்படுகிறோம்.
காட்சியைப் பார்ப்போம்.

பாரத யுத்தம் முடிந்தது. த்வாரகை மீள்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். உற்சாகமான வரவேற்பு. தந்தை வஸுதேவரையும் அன்னையையும் அடி பணிந்து வணங்குகிறார் கிருஷ்ணர். ‘நடந்ததை உன் வாயாலேயே சொல்’ என்று கேட்கிறார் வஸுதேவர்.

விஸ்தாரமாக யுத்தத்தைச் சொன்ன கிருஷ்ணர் ஒரு விஷயத்தை மட்டும் வஸுதேவருக்குச் சொல்லவில்லை. அது தான், அவரது பேரனான அபிமன்யுவின் மரணம்.

சோகத்தினால் முதியவர் துக்கப்படக் கூடாது என்பது கிருஷ்ணரின் எண்ணம்

ஆனால் சுபத்திரையோ கிருஷ்ணரை நோக்கி, ‘அபிமன்யுவின் வதத்தைச் சொல்லும்’, என்று கூறி மயக்கமுற்று விழுகிறாள். அதைக் கண்ட வஸுதேவரும் மயக்கமுறுகிறார்.

ஒருவாறு அவர்களைத் தேற்றிய கிருஷ்ணர் அஸ்வமேத யாகம் செய்யுமாறு யுதிஷ்டிரரிடம் கூற யாக ஏற்பாடுகள் பிரமாதமாக ஆரம்பிக்கப்படுகின்றன.
இறந்து பிறந்த குழந்தை

யாகத்திற்காக அனைவருடனும் ஹஸ்தினாபுரத்திற்கு கிருஷ்ணர் வந்த அந்த சமயத்தில் தான் மிக்க சோகமான நிகழ்ச்சி நடைபெற்றது.

உத்தரையின் பிரசவ நேரம் அது. குழந்தையும் பிறந்தது. ஆனால் பிரம்மாஸ்திரம் பிரயோகிக்கப்பட்டதால் குழந்தை மரித்துப் பிறந்தது.
குந்தி தேவிக்கும், உத்தரைக்கும் அரண்மனையில் இருந்த இதர அனைவருக்கும் துக்கம் தாளவில்லை.

கிருஷ்ணரை எப்படியாவது குழந்தையை உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டிய

குந்தி தேவி கிருஷ்ணருடைய பிரதிக்ஞையை நினைவு படுத்துகிறாள்.

“அஸ்வத்தாமாவினால் பிரம்மாஸ்திரம் ஏவப்பட்ட காலத்தில் மரித்துப் பிறக்கும் குழந்தையை நான் உயிர்ப்பிக்கிறேன் என்று நீ பிரதிக்ஞை செய்திருக்கிறாய்” என்று நினைவு படுத்துகிறாள் குந்தி.

கிருஷ்ணருக்குத் துக்கம் தாளவில்லை. அப்படியே ஆகட்டும் என்று உரக்கச் சொல்லி அனைவரையும் சந்தோஷப்படுத்தியவாறே உத்தரையின் பிரசவ அறைக்குள் செல்கிறார்.

அங்கே உத்தரை கட்டுக் க்டங்காத துயரத்துடன் கிருஷ்ணரைப் பார்த்தவுடன் அழுது புலம்பலானாள். குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு, ‘இதோ இங்கே வந்திருக்கும் கிருஷ்ணரை நமஸ்கரிக்காமல் இருக்கிறாயே” என்றெல்லாம் கூறிப் புலம்புகிறாள்.

“கிருஷ்ணரே! என் குழந்தையை உயிர்ப்பித்துத் தாரும்” என்று கூறி அவள் அழ, கூடவே அங்கு குழுமியிருந்த அனைவரும் அழ அந்தச் சமயத்தில் எழுந்தது கிருஷ்ண சபதம்!

உத்தரை கிருஷ்ணரை நமஸ்கரித்து எழுந்தாள். உடனே கிருஷ்ணர் ஆசமனம் செய்து பிரம்மாஸ்திரத்தை அதன் விளைவு இல்லாமல் போகச் செய்தார்.
 பின்னர் அந்தக் குழந்தை உயிருடன் எழுவதைப் பற்றி உலகமெல்லாம் அறியும் படி பிரம்மாண்டமான ஒரு சபதத்தை செய்தார்:

“உத்தரையே! நான் பொய் சொல்லவில்லை. இது உண்மையாகவே ஆகப் போகிறது. எல்லா மக்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இந்தக் குழந்தையை உயிருள்ளதாக ஆக்குகிறேன்.

நான் ஒரு பொழுதும் விளையாட்டுக்களிலும் கூடப் பொய் சொன்னதில்லை.யுத்தத்திலிருந்து புறம் காட்டியது இல்லை.இது உண்மையானால் இந்தக் குழந்தை உயிருடன் வாழட்டும்.

எனக்குத் தர்மத்திலும் அந்தணர்களிடத்திலும் அதிகமான அன்பு இருக்குமானால், இறந்து பிறந்த இந்த அபிமன்யுவின் குழந்தை ஜீவித்திருக்கட்டும்.

நான் ஒருபொழுதும் அர்ஜுனனிடத்தில் விரோதத்தை எண்ணாமலிருப்பது உண்மையானால் மரித்த இந்தக் குழந்தை ஜீவிக்கட்டும்.

சத்தியமும் தர்மமும் என்னிடத்தில் எப்பொழுதும் நிலைபெற்றிருக்குமானால் அபிமன்யுவின் புத்திரனும் இறந்தவனுமாகிய இந்தக் குழந்தை ஜீவிக்கட்டும்.

நான் கம்ஸனையும் கேசியையும் தர்மமாகக் கொன்றது உண்மையானால் இப்பொழுது இந்தக் குழந்தை மறுபடியும் பிழைக்கட்டும்”

இப்படி கிருஷ்ணர் சபதத்தை உலகம் முழுவதும் அறியுமாறு உரக்கக் கூறினார்.

பின்னர் பிரம்மாவும் ருத்திரரும் பூஜிக்கப்பட்ட தன் பாதத்தால் குழந்தையின் கால் முதல் தலை வரையில் தடவினார்.
உடனே அந்தக் குழந்தை மெல்ல மெல்ல தன் பிரக்ஞையை அடைந்தது; பின்னர் அசைந்தது. இந்த குழந்தை தான் பரீக்ஷித்

உயிர் பிழைத்த குழந்தையைக் கண்டு அனைவரும் ஆனந்த மிகுதியால் கிருஷ்ணரைப் புகழ்ந்தனர்.

பிரம்மாஸ்திரமோ கிருஷ்ணரால் உபசம்ஹாரம் செய்யப்பட்டதால் பிரம்மாவை அடைந்தது. இப்படியாக ஸ்ரீ கிருஷ்ணரின் சபதம் நிறைவேறியது.
பரி ஈக்ஷித: என்றால் பார்த்தவன் என்று பொருளாகும். கருவிலேயே கடவுளைப் பார்த்ததனால் குழந்தை பிறந்தவுடன் அதற்கு பரீக்ஷித் என்று பெயர் வைத்தனர்.

பிறந்த குழந்தையைக் கண்ட தௌம்யர் அதன் வருங்காலத்தை இவ்வாறு கணித்துக் கூறினார். இவன் பரம்பொருளான விஷ்ணுவினால் காப்பாற்றப்பட்டு உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளான். அதனால் அவன் விஷ்ணுராத் என்ற பெயராலும் அழைக்கப்படுவான். அவன் நற்குணம் நல்லொழுக்கம் நிறைந்தவனாகவும் மதக்கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவனாகவும் அயோத்தி அரசர்களான இக்ஷ்வாகு மற்றும் ராமனைப்போல் அறிவாளியான அரசனாகவும் இருப்பான். தனது பாட்டன் அர்ஜுனனைப்போல் வில்லாளி வீரனாய் இருந்து தனது குலத்தின் பெருமையை ஓங்கச்செய்வான்

கலியுகத்தின் துவக்கத்தில் கிருஷ்ணர் பூவுலகிலிருந்து சென்றுவிட்டார். இளைஞனான பரீக்ஷித்திற்கு மணிமுடி சூட்டி அரசனாக அபிஷேகம் செய்தபின் .பாண்டவர்களும் திரௌபதியுடன் வானப்ரஸ்தம் சென்றனர். அரசன் பரீக்ஷித்திற்கு ஆலோசகராக கிருபாசார்யர் நியமிக்கப்பட்டார். அவருடய வழிகாட்டுதலின்படி அவன் மூன்று அச்வமேதயாகங்களைச் செய்தான்.

ஒரு நாள் அரசன் பரீக்ஷித் வேட்டையாடுவதற்காக காட்டிற்குச் சென்றான். அப்பொழுது கலிபுருஷன் அவன் முன் தோன்றி அவனது நாட்டினுள் புக அனுமதி கேட்டான். அரசன் பரீக்ஷித் அனுமதி மறுத்தான். கலி மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதன்பேரில் அரசன் சூதாடுமிடம், மது அருந்துமிடம், விபசாரம் நடக்குமிடம், இறைச்சிக்கூடம், தங்கம் இருக்குமிடம் ஆகிய ஐந்து இடங்களில் வசித்துக்கொள்ள அனுமதியளித்தான். கலிபுருஷன் மிகவும் கெட்டிக்காரத்தனமாக பரீக்ஷித்தின் தங்கக் கிரீடத்தில் புகுந்து அவனுடைய எண்ணங்களைச் சிதைக்கத் துவங்கினான்.

பரீக்ஷித் வேட்டையாடிக்கொண்டு செல்லும்பொழுது அங்கு ஸமீகர் என்ற முனிவரின் ஆச்ரமத்தினுள் நுழைந்தான். முனிவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அரசன் பலமுறை வணங்கியும் அவர் அவனை கவனிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் வேட்டையாடிக் களைத்துவந்த அரசனுக்கு தண்ணீர் வேண்டுமா என்றுகூடக் கேட்கவில்லை. கலியின் வலிமையால் அரசன் மிகுந்த சினமுற்று அவரை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் அங்கு கிடந்த ஒரு செத்தபாம்பை எடுத்து அவரது கழுத்தில் அணிவித்துவிட்டுத் தன் நாட்டிற்குத் திரும்பினான்.

தனது அரண்மனைக்குத் திரும்பிவந்த அரசன் உணவருந்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்பொழுது தான் செய்த செயலை எண்ணி அச்சமடைந்து கடவுளிடம் Ôகடவுளே Ôநான் ஏன் காமக்ரோதாதி அரிஷட்வர்கத்திற்கு வசப்பட்டேன். கோமாதா, தேவதைகள், ப்ராஹ்மணர்கள் ஆகியோரைத் துயரப்படுத்தக்கூடாது என்றறிந்த நான் பூஜிக்கத்தகுந்த மஹாதபஸ்வியான ஸமீகரை அவமானப்படுத்தி மன்னிக்கமுடியாத தவறைச் செய்துவிட்டேன். உன்னிடம் நான் மன்னிப்பைக் கோரவில்லை. இனிமேலும் நான் இதுபோன்ற தவறைச் செய்யாதிருக்கும் அளவிற்கு நீ எனக்கு தண்டனை அளிப்பாயாக என்று வேண்டினான். இதிலிருந்து அரசனின் மேன்மையான குணம் வெளிப்படுகிறது.

சிறிது நேரத்திற்குப் பிறகு ஆச்ரமத்திற்கு வந்த ஸமீக முனிவரின் மகன் சிருங்கி தனது தந்தையார் கழுத்தில் ஒரு செத்த பாம்பு கிடப்பதைக் கண்டான். விவரங்களத் தெரிந்துகொண்டபிறகு Ôஅரசன் பரீக்ஷித் இன்றிலிருந்து ஏழாவது நாள் தக்ஷகன் என்ற பாம்பு கடித்து இறப்பான் என்று சாபம் கொடுத்தான்.

இதை அறிந்த ஸமீகர் தன் மகனை இவ்வாறு கடிந்துகொண்டார். சினமே ஒருவனின் மிகப்பெரிய எதிரி. அதுவே தவத்திற்கு முக்கியமான தடங்கல் ஆகும். சினமே அறவழியைப் பின்பற்றுவதிலும் அணிமா முதலான அஷ்டஸித்திகளை அடையும் பாதையிலும் தடைக்கற்களாக நிற்கும். ஒரு தபஸ்வி ஒருபொழுதும் கோபங்கொள்ளக்கூடாது. தண்ணீர் சிறிய துளையின் வழியாக வெளியேறுவதுபோல், அஹங்காரமுடைய செல்வந்தனின் செல்வம் அழிவதுபோல், அறவழியைப் பின்பற்றாத அரசனின் அரசு அழிவதுபோல் பொறுமையற்ற தபஸ்வியின் தவமும் அழிந்துபோகும்.
 அவன் செய்த ஒரு சிறு தவறுக்காக நீ ஏன் அவனுக்கு இத்தனை கடுஞ்சாபம் கொடுத்தாய்? ஒரு செயலைச் செய்யுமுன் நன்றாக யோசித்துச் செய்யவேண்டும். ஒருபொழுதும் கோபத்தின் வசப்படக்கூடாது. கோபத்தின் வசப்பட்டால் மனிதன் எதைச் செய்யலாம் எதைச் செய்யக் கூடாது என்ற பகுத்தறிவற்றவனாகிவிடுவான். பரமபாகவதோத்தமனான அரசன் பரீக்ஷித் இதை அறிந்து உன்னைப் பழிவாங்கவோ பிரதிசாபம் கொடுக்கவோமாட்டான் என்பதை நான் நன்கறிவேன். ஏனெனில் சான்றோர் இன்பத்தையும் துன்பத்தையும் ஸமமாக எண்ணுவார்கள்

இவ்வாறு மகனைக் கடிந்துகொண்டாலும் உண்மையே பேசும் தபோதனனான அவனது சாபம் பலிக்காமல் போகாது என்பதால் சிருங்கி சாபம் கொடுத்த விபரத்தை தனது சீடனான கௌரமுகன் வாயிலாக ஸமீகர் அரசன் பரீக்ஷித்திற்குத் தெரிவிக்கிறார்.

இதைக் கேட்டு அரசன் கடவுள் தனது வேண்டுகோளை நிறைவேற்றியதாக எண்ணினான். Ôஎந்த மகன் இதுபோன்ற செயலை அறிந்து சாபம் அளிக்காமல் இருப்பான்? எவ்வாறாயினும் ஆண்டவன் விருப்பத்தை யாரால் மாற்ற முடியும்?என்று அரசன் எண்ணினான். அரிஷட்வர்கத்தை வென்றவனும் பரம்பொருளிடம் அசஞ்சலமான பக்தி பூண்டிருந்தவனுமான அவனுக்கு ச்ருங்கியிடம் சிறிதளவுகூடச் சினம் உண்டாகவில்லை.

அதற்கு மாறாக அவன் உடனடியாகத் தனது மகன் ஜனமேஜயனை அரியணையில் அமர்த்தி அவனுக்கு முடி சூட்டினான். ஏழு நாட்களில் தனக்கு மரணம் ஏற்படும் என்றிந்த பின்னரும் கடவுளிடம் முழுமையான பக்திகொண்டிருந்த அவன் தான் இறக்குமுன்னர் உலகத்திலுள்ள அனைத்து இன்பத்தையும் துய்க்கவேண்டுமென்பதில் வேகம் காட்டவோ அல்லது தக்ஷகனிடமிருந்து தன்னைக்காத்துக்கொளவதற்காக தன் நேரத்தை வீணாக்கவோ செய்யவில்லை. இதிலிருந்து அவன் எந்த அளவு மஹானான பாகவதோத்தமன் என்பதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது.

தன்னை உலகப்பற்றிலிருந்து விடுவித்துக்கொண்ட பரீக்ஷித் கடவுளின் கதையைக் கேட்பதில் தன் நேரத்தைச் செலவிட்டால் கடவுள் ஜனன மரண பந்தத்திலிருந்து தன்னை விடுவிப்பார் என்ற எண்ணத்துடன் கங்கைக்கரையை நோக்கிச் சென்றான். அங்கு மஹான்களுடன் வசித்து அவர்களிடமிருந்து பகவான் கிருஷ்ணனின் கதைகளைக் கேட்பதிலும் அவனைத் த்யானம் செய்வதிலுமே தனது இறுதி 7 நாட்களை கழித்து வீடுபேறடைய நிச்சயித்தான்.

அவன் ஹரித்வாரிலுள்ள சுக்ரதால் என்ற இடத்திலுள்ள ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தான்.
கடவுளின் சித்தப்படி அங்கு பல கற்றறிந்த யோகியரும் பக்தர்களும் வந்தனர். அவர்களில் வ்யாஸ முனிவரின் மகனான சுகப்ரஹ்ம ரிஷியும் ஒருவராவார். பரீக்ஷித் அவரையே தனது ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் பகவான் கிருஷ்ணனின் உயர்வானதும் போற்றத் தகுந்தந்ததுமான கடந்தகாலக் கதைகளைக் கூறுமாறு வேண்டிக் கொண்டான்.

பரீக்ஷித்தினுடைய பக்தியையும் பணிவையும் கண்டு மகிழ்ச்சியுற்ற சுகப்ரஹ்ம முனிவர் அவனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். அவர் கடவுளின் அமுதமயமான கடந்தகாலக் கதைகளை விரிவாக எடுத்துக் கூறினார். பரீக்ஷித் இரவு பகல் பாராமல், கண்துஞ்சாமல், உணவு உட் கொள்ளாமல் அந்த ஏழு நாட்களும் கிருஷ்ணனின் கதைகளில் முழுவதுமாக மூழ்கி அவனையே த்யானித்துக்கொண்டிருந்தான்.

ஏழாவது நாள் நிறைவுற்றவுடன் சிருங்கியன் சாபத்திற்கிணங்க தக்ஷகன் என்ற பாம்பு பரீக்ஷித்தை கடித்தது. பாம்பின் நஞ்சினால் அவன் உடல் உடனடியாக எரிந்து சாம்பலாகிவிட்டது. அவன் கடவுளின் சரணாம்புஜங்களை மீண்டும் சென்றடைந்தான்.

பாகவத சிரவணத்தினால் முக்தியடையலாம் என்பதற்கு பரீக்ஷித்தினுடைய கதையே சான்று.

சுகப்ரஹ்ம முனிவரால் கூறப்பட்டு பரீக்ஷித்தினால் கேட்கப்பட்ட இந்தக் கதைகள் ஸ்ரீமத்பாகவதம் என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளன. இதை ஸப்தாஹம் என்ற பெயரில் ஏழு நாட்களில் படித்து முடிக்கும் வழக்கம் உள்ளது. ஸ்ரீமத்பாகவதக் கதைகளை முறையாகக் கேட்பவர்கள் பரீக்ஷித்தைப்போன்றே பிறப்பு இறப்பென்னும் சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். நாமும் பகவானின் அவதாரங்களையும் அவனது அழகான கதைகளையும் முறையாகக் கேட்டு நம் வாழ்க்கையை முழுமையடையச் செய்துகொள்வோமாக.

பரீக்ஷித் ஸாதாரண அரசனல்ல. அவனுடைய மகிமையாலேயே இந்த நாட்டில் தர்மம் நிலைநிற்கிறது. அவனால்தான் கலிபுருஷன் இந்த நாட்டினுள் நுழையாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளான்.

ஆஸ்வமேதிக பர்வம் அறுபத்தொன்பதாம் அத்தியாயத்தைப் படிப்பவர்களின் மனம் ஆனந்தம் அடைவதோடு, கிருஷ்ணரின் மஹிமையை அவர் வாயாலேயே சொல்லக் கேட்ட பெருமையையும் அடையும்.

கிருஷ்ணரின் அரிய பெரிய பெருமைகளை மனம் காலம் எல்லாம் அசை போட்டாலும் முழுவதையும் உணர்ந்ததாகச் சொல்ல முடியுமா?
முடியாது!

No comments:

Post a Comment