Wednesday, November 3, 2010

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்

நம்மாழ்வாரின் பாசுரம்

7ஆம் பத்து 2ஆம் திருவாய்மொழி

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்
தாமரைக் கண் என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்
இருநிலம் கைதுழாவிருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்
இவள்திறத்து என் செய்கின்றாயே

சிவந்த கயல்மீன்கள் பாய்ந்து விளையாடும் நீர்வளம் மிக்கத் திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெரிய பெருமாளே! இந்தப் பெண் இரவும் பகலும் தூக்கம் என்பதே அறியாமல் இருக்கிறாள். அவள் கண்களில் இருந்து விழும் கண்ணீர் துடைக்கும் படியாய் இல்லை; கைகளால் இறைக்கும் படியாய் இருக்கிறது. உன் திவ்ய ஆயுதங்களை எண்ணி 'சங்கு, சக்கரம்' என்று சொல்லிக் கை கூப்புகிறாள். உன் அழகிய தாமரை போன்ற கண்களை நினைந்து அந்த அழகில் மயங்கித் தளர்ந்து போகிறாள். 'உன்னைப் பிரிந்து எப்படி நான் உயிர் வாழ்வேன்' என்று மயங்குகிறாள். வேறு வழி தெரியாமல் பூமியைக் கைகளால் துழாவித் துன்புற்று ஒன்றும் செய்ய இயலாமல் வருந்துகிறாள். நீர் இந்தப் பெண் விஷயமாக என்ன செய்யப் போகின்றீர்?

என் செய்கின்றாய் என் தாமரைக்கண்ணா
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என்செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்
என்னும் வெவ்வுயிர்த்துயிர்த்து உருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா தகுவதோ என்னும்
முன்செய்திவ்வுலகம் உண்டுமிழ்ந்தளந்தாய்
என்கொலோ முடிகின்றது இவட்கே

முன்னொரு காலத்தில் இந்த உலகங்களை எல்லாம் படைத்துப் பின் பிரளயக் காலத்தில் அவற்றை எல்லாம் உண்டு தன் திருவயிற்றில் வைத்துக் காத்து பின் வெளிக் கொணர்ந்து நிலைப்படச் செய்த நீ பின் திரிவிக்கிரமனாய் அந்த உலகங்களை அளக்கவும் செய்தாய்! அப்படிப் பட்ட எல்லா வல்லமையும் பெற்றவனே! இந்தப் பெண் 'தாமரைக் கண்ணா. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?' என்று புலம்புகிறாள். கண்ணீர் மல்க இருக்கிறாள். 'அலைகள் வீசும் காவிரியை உடைய திருவரங்க நகரானே! நான் என்ன செய்வேன்?' என்கிறாள். உம்மை எண்ணி எண்ணி பெருமூச்சுகள் விட்டுக் கொண்டே உருகி நிற்கிறாள். 'நான் முன் செய்த தீய வினைகள் தான் இன்று என்னை வாட்டுகின்றன. ஏ தீய வினைகளே. தடையாய் முன்னே நில்லாதீர்கள்' என்கிறாள். 'கருணை மேகம் போல் நிறம் கொண்டவனே. இது உனக்குத் தகுமா?' என்கிறாள். நீர் இவளுக்கு என்ன முடிவு வைத்திருக்கிறீர்?

வட்கிலள் இறையும் மணிவண்ணா என்னும்
வானமே நோக்கும் மையாக்கும்
உட்குடை அசுரர் உயிரெல்லாம் உண்ட
ஒருவனே என்னும் உள்ளுருகும்
கட்கிலீ உன்னைக் காணுமாறருளாய்
காகுத்தா கண்ணனே என்னும்
திட்கொடி மதில்சூழ் திருவரங்கத்தாய்
இவள் திறத்து என்செய்திட்டாயே

இவள் கொஞ்சம் கூட வெட்கம் என்பதே இல்லாமல் எங்கும் எப்போதும் உன் பெயர்களைச் சொல்லித் திரிகிறாள். கரிய மாணிக்கம் போன்ற நிறத்தானே என்கிறாள். நீ வருவாய் என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பின் நீ வராததால் மயங்கி நிற்கிறாள். 'உடலின் உள்ளே, உயிரின் உள்ளே நின்று நம்மை எல்லாம் கெடுக்கும் அசுரர் கூட்டங்களை எல்லாம் அழித்து நிற்கும் ஒருவனே' என்கிறாள். அந்தக் கருணையை எண்ணி உள்ளம் உருகுகிறாள். 'கண்களால் காண்பதற்கு அரியானே! உன்னை நான் கண்டு அனுபவிப்பதற்கு நீயே அருள வேண்டும். காகுத்தா. கண்ணனே' என்கிறாள். கொடிகள் ஏற்றப் பட்ட திடமான மதில்களால் சூழப்பட்டிருக்கும் திருவரங்க நகரானே! இவள் இப்படி உன் மேல் பைத்தியமாய் அலையும் படி நீ என்ன தான் செய்தாய்?

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்
எழுந்துலாய் மயங்கும் கைகூப்பும்
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்
கடல்வண்ணா கடியை காண் என்னும்
வட்டவாய் நேமி வலங்கையா என்னும்
வந்திடாய் என்றென்றே மயங்கும்
சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்
இவள் திறத்து என் சிந்தித்தாயே

சில நேரங்களில் எந்த வித உணர்வும் இன்றி தன் கைகளும் கால்களும் இட்டது இட்டபடி இவள் கிடக்கிறாள். சில நேரங்களில் எழுந்து உலாவி மயங்கி நிற்கிறாள்; கைகளைக் கூப்புகிறாள். 'காதலில் விழுவது மிகுந்த துன்பத்தைக் கொடுக்கிறது' என்று மூர்ச்சை அடைகிறாள். 'கடல் நிறத்தானே! நீ மிகுந்த கொடுமைக்காரன்' என்கிறாள். 'வட்டமான வடிவத்தை உடைய சக்கரத்தை வலக்கையில் ஏந்திய பெருமானே! எனக்கு அருள வந்திடாய்' என்று சொல்லிச் சொல்லி மயங்குகிறாள். இப்படி இவளை துன்புறுத்தும் நீயோ நல்லவன் (சிட்டன்) போல் தூங்கிக் கொண்டிருக்கிறாய். நீர் வளம் செழித்து இருக்கும் திருவரங்க நகரானே! இவளைப் பற்றி நீர் என்ன எண்ணம் கொண்டிருக்கிறீர்?

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கைகூப்பும்
திருவரங்கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும் ஆங்கே மழைக்கண்ணீர் மல்க
வந்திடாய் என்றென்றே மயங்கும்
அந்திப் போது அவுணன் உடலிடந்தானே
அலைகடல் கடைந்த ஆரமுதே
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய்தானே

உன்னையே இவள் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். சில நேரம் நீ வருவாயோ இல்லையோ என்று திகைத்து நிற்கிறாள். பின் நிச்சயம் நீ வருவாய் என்று தேறி கைகளைக் கூப்புகிறாள். 'திருவரங்கத்தில் இருப்பவனே' என்று உன்னை அழைக்கிறாள். தலையால் வணங்குகிறாள். மழையைப் போல் கண்களில் நீர் மல்க 'வந்திட மாட்டாயா' என்று மயங்குகிறாள். பகலும் இரவும் சந்திக்கும் அந்திப் போதில் அவுணனாகிய இரணியனின் உடலை நரசிங்கமாய் வந்துப் பிளந்தவனே! அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்த ஆரா அமுதனே! உன்னைக் கண்டு உன் திருவடிகளையே அடைய திண்ணமான எண்ணம் கொண்டிருக்கும் இந்தப் பெண்ணை மயக்குகிறாயே? இது உனக்குத் தகுமோ?

மையல் செய்தென்னை மனம் கவர்ந்தானே
என்னும் மாமாயனே என்னும்
செய்யவாய் மணியே என்னும் தண் புனல் சூழ்
திருவரங்கத்துள்ளாய் என்னும்
வெய்யவாள் தண்டு சங்கு சக்கரம் வில்
ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்
பைகொள் பாம்பணையாய் இவள் திறத்தருளாய்
பாவியேன் செயற்பாலதுவே.

'என்னை மயக்கி என் மனதைக் கொள்ளை கொண்டவனே. மாமாயனே' என்கிறாள். 'செம்மையான சிவந்த அழகிய உதடுகள் உடைய மணியே' என்கிறாள். 'குளிர்ந்த தண்ணீரால் சூழப்பட்டத் திருவரங்கத்தில் உள்ளவனே' என்கிறாள். 'வெம்மையுடைய வாள், கதை, சங்கு, சக்கரம், வில் என்னும் திவ்ய ஆயுதங்களை ஏந்தும் விண்ணவர்களின் தலைவனே' என்கிறாள். படம் விரித்து இருக்கும் ஆதி சேடனை படுக்கையாய் கொண்டவனே! இவள் மீது உன் கருணையை வைப்பாய். பாவியேனாகிய நான் செய்யக் கூடியது அது மட்டுமே தான் (வேண்டுவது மட்டுமே தான்).

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்
பற்றிலார் பற்ற நின்றானே
காலசக்கரத்தாய் கடலிடங் கொண்ட
கடல்வண்ணா கண்ணனே என்னும்
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்
என்னும் என் தீர்த்தனே என்னும்
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்
என்னுடைக் கோமளக் கொழுந்தே

'உலகத்தைக் காப்பதற்காக (பாலிப்பதற்காக) இன்பத்தையும் துன்பத்தையும் படைத்தவனே. உலகப் பற்றில்லாதவர்களுக்கு ஒரே பற்றாய் நிற்பவனே. காலம் என்னும் சக்கர வடிவாய் இருப்பவனே. பாற்கடலில் பள்ளி கொண்ட கடல்வண்ணனே. கண்ணனே' என்கிறாள். 'அழகிய மீன்கள் துள்ளி விளையாடும் நீரால் சூழப்பட்ட திருவரங்க நகரானே' என்கிறாள். 'தூய்மைகளுக்கெல்லாம் தூய்மையான என் தீர்த்தனே' என்கிறாள். அழகு பொருந்திய கண்களில் கண்ணீர் மழைபோல் வழிய நிற்கும் என் மென்மையான கொழுந்து போன்ற பெண் உருகித் துடிக்கிறாள்.

கொழுந்து வானவர்கட்கு என்னும் குன்றேந்திக்
கோநிரை காத்தவன் என்னும்
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்
அஞ்சன வண்ணனே என்னும்
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்
எங்ஙனே நோக்குகேன் என்னும்
செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்
என் செய்கேன் என் திருமகட்கே

'வானில் வாழ் தேவர்களுக்கு எல்லாம் கொழுந்து போன்றவனே' என்கிறாள். 'கோவர்த்தன மலையைத் தூக்கி பசுக்கூட்டத்தைக் காத்தவனே' என்கிறாள். உன்னை எண்ணி அழுகின்றாள். தொழுகின்றாள். உயிர் வெந்து போகும் படி பெருமூச்சு விடுகின்றாள். 'கரு நிற மை போன்றவனே' என்கிறாள். எழுந்து நின்று மேலே நோக்கி கண் கொட்டாமல் இருக்கிறாள். 'உன்னை நான் எப்படிப் பார்ப்பேன்' என்கிறாள். அகன்று ஆழமாகத் தண்ணீர் சூழ்ந்திருக்கும் திருவரங்கத்தாய்! எனது திருமகளுக்காக நான் இன்னும் என்ன செய்வது?

என் திருமகள் சேர் மார்பனே என்னும்
என்னுடை ஆவியே என்னும்
நின் திருஎயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே என்னும்
அன்றெரு தேழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே என்னும்
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே
தெளிகிலேன் முடிவிவள் தனக்கே

'நான் உன்னை அடைவதற்கு உறுதுணையாய் இருக்கும் என் திருமகள் வாழும் மார்பினை உடையவனே' என்கிறாள். 'என் உயிருக்கும் உயிரானவனே' என்கிறாள். 'அன்று வராக அவதாரம் எடுத்த போது உன் திருக் கொம்பால் தாங்கி நீ அடைந்த நிலமகள் மணவாளனே' என்கிறாள். 'கண்ணனாக அவதாரம் செய்த போது ஏழு எருதுகளைத் தாக்கிக் கொன்று அதன் பரிசாக நப்பின்னைப் பிராட்டியை அடைந்த அன்பனும் நீயே' என்கிறாள். தென் திசைக்கு அணிகலனாய் விளங்கும் திருவரங்கத்தில் கோயில் கொண்டவனே! உன்னைப் பிரிந்து என் மகள் படும் துன்பத்திற்கு என்ன தான் முடிவோ; எனக்குத் தெரியவில்லை.

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும்
மூவுலகாளியே என்னும்
கடிகமழ் கொன்றைச் சடையனே என்னும்
நான்முகக் கடவுளே என்னும்
வடிவுடை வானோர் தலைவனே என்னும்
வண்திருவரங்கனே என்னும்
அடியடையாதாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில் வண்ணன் அடியே

'எனக்கு என்ன முடிவு என்று அறிகிலேன்' என்கிறாள். 'மூன்று உலகங்களையும் ஆள்பவனே' என்கிறாள். 'மணம் வீசும் கொன்றை பூவை தன் சடைமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானாகவும் நீயே இருக்கிறாய்' என்கிறாள். 'நான்முகனாம் பிரம்ம தேவனாகவும் நீயே இருக்கிறாய்' என்கிறாள். 'அழகான வடிவம் கொண்ட தேவர்கள் தலைவனாம் இந்திரனாகவும் நீயே இருக்கிறாய்' என்கிறாள். 'வளங்கொண்ட திருவரங்க நகரானே' என்கிறாள். இதுவரை உன் அடிகளை அடையாதவள் போல் இருந்தாள். இப்போது முகில் வண்ணனாகிய உன் திருவடிகளை நெருங்கி அனுபவித்து அடிகளை அடைந்துவிட்டாள்.

முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண்குருகூர்ச் சடகோபன்
முகில்வண்ணன் அடிமேல் சொன்ன சொல்மாலை
ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே

முகில்வண்ணன் அடியை அடைந்து அவன் அருளைச் சூடி உய்ந்தவன், வெண்மையான ஆடையைப் போன்ற வண்ணம் கொண்ட நீரையுடைய தாமிரபரணி நதிக் கரையில் இருப்பவன், வளம் மிக்க குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் வாழ்பவன், சடகோபன் - முகில்வண்ணன் திருவடிகளின் புகழைச் சொன்ன சொல் மாலையாம் திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களில் இந்தப் பத்துப் பாடல்களும் பாடக் கூடியவர் மேகங்களால் நிறைந்த வானத்தில் தேவர்கள் சூழ்ந்திருக்க பேரின்ப வெள்ளத்தில் என்றும் இருப்பார்கள்.

No comments:

Post a Comment