Wednesday, November 3, 2010

ஆல்பர்ட்

இரவு சுமார் 1 மணி இருக்கும். யாருமில்லை. ஒரே நிசப்தம். எங்கோ ஒரு நாய் குரைத்தது. பதில் கொடுப்பது போல் இன்னொரு நாய் ஊளையிட்டது. வாசலில் யாரோ நட்ந்துபோனார்கள். யாரோ அல்ல. ஒரு எலும்பு கூடு நடந்து போயிற்று, அது ஒரு உடைந்து போன சவப் பெட்டியையும் தன் எலும்புத் தோள்களில் தூக்கி வைத்துக்கோண்டு இருந்தது. சவ பெட்டியின் ஒரு சில உடைந்த பலகைகளைத் தன் ஒரு கையில் வைத்துக்கொண்டிருந்தது. தன் இன்னொரு கையில் எதோ ஒரு பழைய மூட்டையும் இருந்த்து. ஒரு பழைய கிழிந்த வெள்ளைத்துணி போர்த்தி இருந்தது. அதன் துணி காற்றில் அசைந்து சலசலத்தது. அது நடக்கும்போது அதன் எலும்புகள் ஒன்றொடொன்று உரசி கரக் கரக் என்று சப்தம் தெளிவாக கேட்டது. அதன் துணி என்னை உரசிச் சென்றது. . என்னை கடந்து செல்லும்பொது அதன் குழி விழுந்த கண் களும் வாயும் என்னைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றியது, அருகில் ஒரு இடுகாடு உண்டு. நிறைய கல்லறைகள். சாலை ஓரமாக சிலவும் உள்ளே தள்ளி நிறைய கல்லறைகளும் இருக்கும். அதை நோக்கித்தான் இது போய்க் கோண்டிருந்தது.

இது போனதும் மற்றோரு எலும்புகூடு தொடர்ந்து நடந்து வந்துகொண்டு இருக்கும் சப்தம் கேட்டது. பார்த்தால் விளக்கு வெளிசத்தில் இந்த எலும்பு மனிதர் மிகவும் கஷ்டபட்டுக்கொண்டு ஒரு சவபெட்டியை க்யிற்றால் கட்டி இழுத்து வந்து கொண்டிருந்தார். இவரும் இந்த இடுகாடு நோக்கி மெதுவாக பெட்டியை இழுத்தபடி நடந்து சென்றார். என்னைப் பார்த்தார், "கொஞ்சம் உதவி செய்வீர்களா? அதோ அந்த கல்லறை வரை வாருஙகள். இந்த பெட்டியை அங்கே வைக்கவேண்டும்" என்றார்.

உடனே அவர் கூடச் சென்றேன். அந்த பெட்டியை நானும் அவருமாக மெல்ல இழுத்து இடுகாடு வரை சென்று ஒரு ஓரமாக வைத்து உத்வினேன். பெட்டியை வைக்கச் சொன்ன இட்த்தை அப்போது தான் நன்றாகப் பார்த்தேன், அங்கே ஏர்கனவே ஒரு கல்லால் ஆன பெயர் பலகை இருந்தது. பலகையில் " ஆல்பர்ட் ஆசீர்வாதம்" தோற்றம்: 1920; மறைவு: மார்ச் 1980" என்று இருந்தது. இறந்தவரும் நானும் அங்கேயே உட்கார்ந்தோம். ஆல்பர்ட் தன் எலும்பு கையால் தன் முகவாயைத் தடவிக்கோண்டார், பழைய பழக்கம் இன்னும் விடவில்லை போலும். எலும்புகூடு முகத்தில் வியர்வை ஒன்றும் தெரியவில்லை.

ஆல்ப்ர்ட் எலும்பார் மிகவும் அலுத்துக்கோண்டார். " ஒன்றும் சரியில்லை. எல்லாம் போச்சு, எல்லாம் போச்சு"
என்று தன் அழுக்கு துணியை இழுத்து போர்திக்கொண்டார்.

"என்ன ஆல்பர்ட் இப்படி அலுத்துக்கிறீரே?" என்று மெதுவாகக் கேட்டேன்
"எல்லாம் போச்சு, எல்லாம் போச்சு. இற்ந்திருக்கவே வேண்டாம் என்று தோன்றுகிறது"
"அப்படி என்னய்யா ஆயிற்று?"
"என்ன ஆச்சா? இன்னும் என்ன ஆகணும்? பார் இந்த அழுக்கு கந்தல் துணியைப் பார். இந்த் உடைந்த சவப் பெட்டியைப் பார். இந்த உடைந்த பெயர் பலகை பார். என் கண் முன்பாகவே என் உடமைகள் எல்லாம் அழிந்து போவுது பார்"
"சரி சரி. நீங்க இப்போ இருக்கிற நிலமைக்கு நீங்க இதைப் பற்றி எல்லாம் கவலைப் பட வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது" என்று ரொம்ப மெதுவாக கூறினேன்

" என் கதை ரொம்ப சோகம் தம்பி. நீ ரொம்ப நல்லவன், உங்கிட்டே சொல்லாம் வேறே யார்கிட்டே சொல்வேன்?
உன் வீட்டிலிருந்து ஒரு நூறு தப்படி தள்ளீ இந்த இடுகாட்டிலே இருக்கேன். இப்போ உடம்பு ரொம்ப மோசமாப் போயிடுச்சு,.
எல்லா எலும்புகளும் ஒன்னொன்னா கழல ஆரம்பிச்சிடுச்சு. இந்த் இடுப்பில மேலேர்ந்து கீழ மொணாவது எலும்பு பாரு ரொம்ப தொங்குது. நல்ல கெட்டியா அங்கே அங்கே கட்டி விட்டா ரொம்ப நல்லா இருக்கும். வெள்ளி வயர் கம்பி ரொம்ப பெஸ்ட்டு. அப்பப்போ நல்லா பாலிஷ் பண்ணி பள பள என்று உடம்பை வச்சிக்கலாம்." தாடையை மெலும் கீழும் பக்கவாட்டிலும் நகர்ததி ஆல்பர்ட் பேசினார். பார்க்க பயமாக இருந்தது.

முப்பது வருஷம் ஆச்சு தம்பி நான் இங்கே வந்து. வெட்டியான் என் மேலே முதல் மண் கொட்டினதிலிருந்து கொஞ்ச காலம் வரை பெரிய தூக்கம் தூங்கி, அப்பப்போ நல்லா நீட்டி படுத்து, திரும்பி படுத்து, காலை நல்லா நீட்டி சோம்பல் முறித்து, என் கடடையை இங்கே சாய்ச்ச நாளிலிருந்து இப்போ வரை நிறைய மாறிட்டிருக்கு தம்பி. என் கல்லறைக்கு இந்த பெயர் பலகை வச்சு பெயிண்ட் எல்லாம் அடிச்சாங்க . அப்போ எப்படி இருந்தது தெரியுமா? நீ இதை எல்லாம் அனுபவிச்சா எப்படி இருக்கும் தெரியுமா? தன் எலும்பு கையால் என் முதுகில் தமாஷாக தட்டினார் ஆல்பர்ட். எனக்கு லேசாக உதறியது

"ஆமாம் தம்பி. நான் இங்கே கிடந்து 30 வருஷம் ஆச்சு. அப்போ இந்த இடம் எப்படி இருக்கும் தெரியுமா? நல்ல் காத்து, நிறைய மரம், பூ, காடு அப்பப்ப்பா ஜிலு ஜிலுன்னு இருக்கும். இஷ்டம் போல அணில் ஓடி ஆடும். காத்தும் பூ மணமும் பறவைகள் பாட்டும் அப்படியே எங்கேயோ கொண்டு போயிடும். இங்கே என் பக்கத்தில் யார் யார் இருந்தாங்க தெரியுமா? அத்தனை பேரும் பெரிய மனுஷங்க, நல்ல பாமிலி. அவங்க பாமிலிகாரங்களும் அடிக்கடி இங்கே வந்து எங்களை நல்லா பாத்துகிட்டாங்க.
கல்லறை சுத்தம் பண்ணீ, அப்பப்போ பெயிண்ட் அடிச்சு. ரோஜாபூ செடி வச்சு, கல்லு உடைஞ்சிடுச்சுன்னா புது கல்லு வச்சு நிமித்தி கொடுத்து. காக்கா அசுத்தம் இருந்ததுன்ன தண்ணி விட்டு சுத்தம் பண்ணீ, போற வர பாதைய சீர் பண்ணீ.. ம்ம் அதெல்லாம் அந்த காலம் பா". கையால் தன் ஓட்டை கண்களை கசக்கினார் ஆல்பர்ட்.

இப்போ அவங்க எல்லாம் எங்களை மறந்துட்டாங்க. எம் பேரன் அதோ அங்க நான் சம்பாரிச்சு கட்டின இர்ண்டுமாடி வீட்டிலே ஜம்முனு குடி இருக்கான். நான் இங்கே புல், முள்ளூ மண்டிகிடக்கிற இடத்தில, அழுக்குலே இருக்கேன். ஊர் பெரிசாப் போச்சு,
இதோ பக்கத்திலேயே வூடு எல்லாம் கட்டிகிட்டு வந்துட்டாங்க. எங்க பக்கத்திலே வந்திட்டு எங்க இட்த்தை திட்டறாங்க.

எங்க இடத்தை பாரு தம்பி. எல்லாம் புல் புதர் மண்டி இருக்கு. ஆடு மாடு மனுஷன் சாணம் தான் எங்கே பார்த்தாலும். மழை வந்துட்டா ரொம்ப கஷ்டம் தம்பி. திடீர்ன்னு எங்கே மேலே மழை தண்ணீ சிலீர் சிலீர் என்று விழும். மழைக்கு எல்லா கல்லறைக்குள்ளும் தண்ணி வந்திடும். அப்போ எங்க பாடு ரொமப திண்டாட்டமா போயிடும். பக்க மண் அரிச்சு போய், கல்லறைக எல்லாம் அப்படியே மேலே வந்து லேசாக ஆட ஆரம்பிச்கிடும்.பெயர்பலகைகள் எல்லாம் அப்படியே பின் பக்கமாவோ அல்லது முன் பக்கமாவோ சாஞ்சிடும். நாங்க எல்லாம் பொட்டிலே படுக்கவே முடியாது. எல்லாரும் எந்திருச்சி அப்படியே பக்கத்திலே இருக்கிற மரங்கள் மேலே ஏறி கிளைகள்லே உட்கார்ந்திடுவோம். அப்போ ராத்திரி 12 மணிக்கு இங்கே வந்தே ன்னு வச்கிக்கோ, நாங்க 10-15 பேர் இப்படி மரத்திலே தொங்கிட்டு இருக்கறதையும் குளிர்லே நடுங்கிட்டு இருக்கறதையும் நல்லா பார்க்கலாம். இப்படியே சில சமயம் ஒரு மூன்று நாலு மணி நேரம் தொங்க வேண்டி வரும். மழை விட்டப்புறம், மெல்ல இறங்கி வந்து, அப்படியே எவன் மண்டை ஒட்டையாவது கெஞ்சி கூத்தாடி வாங்கி, பெட்டியிலேர்ந்து தண்ணியை எல்லாம்
மண்டை ஒட்டாலே அப்படியே சேந்தி வெளியே விட்டு சுத்தம் பண்ண வேண்டியதுதான். அப்புறம் தான் கொஞ்ச்ம நிம்மதியா படுக்க முடியும்.

இப்ப கூட பாரு. இதோ என் கண் ஒட்டையிலே கை விட்டு கபாலத்தை தொட்டு பாரு, கொழ கொழ ந்னு மண் சகதி ஒட்டிகிட்டு இருக்கும். என்னா பண்ற்து? இப்படி தண்ணீ சேந்தினா இப்படித்தான் சேறு ஆகும். இதெல்லாம் பார்த்தா ஆகுமா? அதுக்கு அப்புறம் எங்க ஈர துணிகளையெல்லாம் இப்படி மரக்கிளையிலும் தடுப்பு சுவர்லேயும் காயப்பொட்டு உலர்த்தி காலைலேதான் திருப்பி போட்டுக்க முடியும். ரொம்ப பெஜார் தம்பி. அன்னிக்கி பாரு என்னோட நல்ல் துணியை காய் போட்டு வச்சேன். காலைலே காணம். எங்கேடா போக்சு ன்னு பார்ததா நம்ப ஜார்ஜ் ஜம்முன்னு பொட்டுக்கிட்டு உலாத்துறாரு. அன்னிக்கி பாரு நாங்க எல்லாம் மசான சூறை ராத்திரி கும்பலா உட்கார்ந்து ஜாலியா மஜாவா இருந்தோம். இவர் ஒருத்தர் தான் சூப்பர் ட்ரெஸ் போட்டுக்கிட்டுருந்தாரு. அவங்கிட்டே நல்ல்துணி ஏது? எல்லம் என் துணியை சுட்டு போட்டுகிட்டுதான் சுத்தறான்னு தெரிஞ்சு போச்சு. கேக்கவா முடியும்? அப்படியே கேட்கலாம்ன்னு போனா, என்னை பார்த்ததும் திடீர் ன்னு காணாம போயிடுறான்.

"ச்ரி அது போகட்டும். இங்கே எங்க கூட ஒரு கிழவி இருக்கா. அவளோட சவபெட்டியையே ஒருத்தன் எடுத்துக்கிட்டு போயிட்டான். சாதாரணமா எங்க் போகணும்னாலும் அவ, அவளோட பெட்டியை எடுத்துக்கிட்டுதான் போவா. குளிர் அவளுக்கு ஆகாது.
முடக்குவாததுல தான் செத்தா. இப்பவும் அதே தொந்தரவு தான் அவளுக்கு. அதனாலே தான் அவ பொட்டியை மறக்கவே மாட்டா. ஒரு நாள் எமாந்துட்டாப் போல. பொட்டி தாரவாந்திடுச்சு. . பாவம். மழை குளிர் எடுத்தா போதும். ஒரே கலாட்டா தான் போ
உனக்கு கூட அவளைத் தெரியும் நினைக்கிறேன். அவ பேரு எலிசபெத். மேல் தாடையிலே இரண்டு பல் தான் இருக்கும். இடது தோள்பட்டையிலே ஒரு சின்ன எலும்பு எதோ சண்டையிலே உடைஞ்சீடுச்சாம். அத்னாலே இடது கையை கொஞ்சம் வித்தியாசமாய் ஆட்டி ஆட்டி தான் நடப்பா. நீ பார்த்திருக்கியா அவளை?"ஆல்பர்ட் கேட்டார்.

"இல்லைங்க. நான் பார்த்ததில்லை. உங்க துணியைக் கூட ஒருத்தன் களவாடிட்டு போயிட்டான் ன்னு கேக்கறப்போ எனக்குரொம்ப கஷ்டமாப் போயிடிச்சு. ஆனா இப்போ நீங்க போட்டிட்டு இருக்கிற துணியைப் பார்த்தா ஒரு காலத்திலே ரொம்ப விலை பிடிச்சதா இருந்திருக்கும் போலத் தெரியுதே," என்றேன். ஆல்பர்ட் சிரித்தார். எனக்கு ரொம்ப பயமாக இருந்த்து. ஆல்பர்ட் தொடர்ந்தார். " நான் இருக்கிற இந்த கல்லறையும் இதுக்கு பக்கத்திலே இருக்கிற இன்னொரு கல்லறையும் தான் ரொம்ப டாமேஜா போயிடுச்சு. எங்களுக்கு அடுத்த தலைமுறை ஆளுங்க இதை சரியாவே கவனிக்கலை. இங்கே யார் யார் எல்லாம் இருக்காங்க தெரியுமா? எல்லாம் அந்த கால்த்து ரொம்ப பெரிய மனுஷங்க. எவ்வளோ பண்க்காரங்க தெரியுமா? அவங்க பெட்டியும் பேர் பலகையும் எப்படி இருக்கும்னு தெரியுமா? ஆனா இப்போ பாரு, எல்லாம் போச்சு. எல்லாம் சீரழிஞ்சு கிடக்கு. எங்களுக்கு எல்லாம் எங்க கல்லறையும் பேர் பலகையும் எவ்வளவு முக்கியம் தெரியுமா? நாங்க அடிக்கடி எங்க பெயர் பலகயையும் அதில எங்களை பற்றி கொஞ்சம் பாராட்டியும் எழுதி இருக்கறதை படிச்சு படிச்சு பார்த்துப்போம். ரொம்ப சந்தோஷமா இருக்கும். ரொம்ப கஷ்டத்திலே இருந்து செத்து போனவனுக்கு அவன் கல்லறையிலே நாலு வார்த்தை நல்லா எழுதி இருந்தா அதை அவன் செத்துப்போனப்புறம் படிக்கிறது எவ்வளவு ஆறுதலா இருக்கும்ன்னு தெரியுமா? இன்னும் நிறைய எழுதியிருக்கணும்.
என்னோட கல்லறை பெயர் பலகையிலே அடிபாகம் எல்லம் உடைஞ்சி போச்சு. அதிலே என்ன எழுதி இருந்தது தெரியுமா?
"உழைப்பால் உயர்ந்த உத்தமர். எங்களுடனே என்றும் இருப்பார்" அடிக்கடி வேலிக்கிட்ட் நின்னு படிச்சு படிச்சு ரசிப்பேன். என் நண்பர்களுக்கு எல்லாம் படிச்சு காட்டுவேன். சிலருக்கு கொஞ்சம் கடுப்பாக இருக்கும். ஒன்னும் சொல்லாம போய்டுவாங்க. என்று மீண்டும் சிரித்தார் ஆல்பர்ட். "தயவு செய்து சிரிக்காதீங்க. எனக்கு பயமாக இருக்கு" என்று சொல்லணும் போல் தோன்றியது. சொல்வதற்கும் பயமாக இருந்தது.

"தம்பீ, அதோ பாரு. என் சகாக்கள் எல்லாம் அங்கே போறாங்க. பிச்சை, பீட்டர், ஆரோக்யசாமி, சகாயம். லூர்து. லூர்து 1981 லேர்ந்து இங்கே இருக்கான். என் செட்.ரொம்ப தோஸ்த். "டேய் லூர்து?" குரல் கொடுத்தார். லூர்து கூடு திரும்பிபார்க்கவில்லை. "அவனுக்கு காது கேட்காது. அதான்" என்றார் ஆல்பர்ட். அவன் துணி பார்த்தியா? அப்பவே அது 500 ரூபாய். எப்படி உழைக்குது பார். அவன் துணியைப் பார்க்கிறதுக்குன்னே கண்ணம்மாபேட்டை, கிருஷ்ணாம்பேட்டை ல்லேர்ந்து எல்லாரும் வருவாங்க. அதோ பாரு துணியே இல்லம ஒருத்தன் போறான் பாரு. கையிலே பொட்டி வச்சிக்கிட்டு. அவன் தான் சைமன். அவனும் ஒரு காலத்திலே நல்லா உடுத்துனவன் தான். நாங்க எல்லோரும் இந்த இடத்தை விட்டு போறோம். எனன செய்யறது? எங்க பசங்க ஒன்னும் எஙகலை நல்லா பாத்துக்கலை, புதுசு புதுசா சிமெட்றி கட்றான். பழசை எல்லாம் மறந்துடறான். அவன் ரோட்டை சூப்பரா போட்டுக்கிறான். எங்க பாதயை அசிங்கம் பண்ணிடறான். என் பெட்டியை பாரு. ஒருகாலத்தில எப்படி இருந்தது தெரியுமா? பள பளனுஇருக்கும். இப்போ? எனக்கு இது வேண்டவே வேண்டாம். என்னல ரிப்பேர் எல்லாம் செய்ய முடியாது. நீ வேணா எடுத்துக்கோ. அடி பலகை, சைடு பல்கை, மேல் பலகை மட்டும் மாத்திடு. ஜம்முனு இருக்கும். என்ன வேண்டாமா. சரி விடு. நீ எங்கிட்டே ரொம்ப அன்பா இருக்கே. அதனாலேதான் எங்கிட்ட இருக்கிற எல்லாத்தயும் உனக்கு கொடுத்திடலாம் னு நினைச்சேன். நன்றி மறக்ககூடாது பாரு. அதான். சரி. விடு. என்றார் ஆல்பர்ட்.
பாவமாக் இருந்தத்து.

மீண்டும் தொடர்ந்தார். "எல்லாரும் போறாங்க. நானும் போறேன். இந்த அசிங்கம் புடிச்ச இடமே வேண்டாம். இன்னிக்கி நல்ல நடராசா சர்வீஸ் தான். நல்ல் இடமா பாக்கணும்.
பெசண்ட் நகர்ல நல்ல காத்து வரும் னு சொல்றாங்க. சரி கொஞ்சம் கை கொடு. இந்த பொட்டியைக் கொஞ்சம் தூக்கிகிறேன். வரட்டா கண்ணூ. பத்திரமா வூடு போ. காத்து கருப்பு அடிச்சிடப் போவுது" என்று சொல்லி நடந்தார் ஆல்பர்ட். போகும் போது "நைனா, நான் சொன்னதை தப்பா எடுத்துக்காதே, இந்த மாதிரி சிமெட்றியை தாங்கிக்கிற ஜனங்க
நான் சொல்றதை கேட்டா சங்கடப்பட போறாங்க? நீ இதுக்கெல்லாம் அப்செட் ஆகாதே நைனா " என்று சொல்லி சிரித்து என் கன்னத்தை தன் எலும்பு கைகளால் தடடினார்,

நான் பயந்து போய் "அய்யோ" என்று கத்தினேன். " என்னடா 8 மணி ஆகுது. இன்னும் என்ன தூக்கம்? வேலைக்கு போகலையா? என்றார் அப்பா.

1 comment:

  1. Very nice story written with a great skill. I liked it a lot. Please continue your writing of short stories.
    Jaya

    ReplyDelete