Wednesday, July 14, 2010

தன்முகத்துச் சுட்டி

பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து
நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)

பாடல் 1
----------
தன்முகத்துச் சுட்டி தூங்கத்
தூங்கத் தவழ்ந்துபோய்,
பொன்முகக் கிண்கிணி யார்ப்பப்
புழுதி யளைகின்றான்,
என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மாமதீ,
நின்முகம் கண்ணுள வாகில்
நீயிங்கே நோக்கிப்போ

THAN MUGATHTHU CHUTTI THOONGATH
THOONGA THAVAZHNTHU POI
PON MUGA KINKINI AARPPA
PUZHITHI ALAIGINRAAN
EN MAGAN GOVINDAN KOOTHTHINAI ILA MAAMATHEE
NIN MUGAM KAN ULAVAAGIL
NEE INGE NOKKIPPO

hey moon, see my little boy is playing in the sand. his head chutti is dangling
his leg anklets are making sounds. don't you have eyes on your face to see this?
do not run away. see it.

குட்டிக் கண்ணனின் நெற்றியில் உள்ள சுட்டி வேகமாய் ஆட, விரைந்து மணற்முற்றத்திற்குத் தவழ்ந்து செல்கின்றான்; அங்கே அவன் கால் சதங்கையில் தொங்குகின்ற பொன்னாலான கிண்கிணிகள் மிகுவாய் ஒலி எழுப்ப, அங்கும் இங்கும் அலைந்து, அவன் தேகம் முழுவதும் புழுதியாகும் வண்ணம் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடுகின்றான் என்மகன். தன் மகன் தனியே விளையாடுவதைப்பார்த்த யசோதை அன்னை, நிலவினை நோக்கி, ' மாலைப் பொழுதில் ஞாயிறு மயங்கியதும், வெள்ளொளி வீசுகின்ற வெள்ளிநிலவேஏ! இங்கே என்மகன் கோவிந்தன் புழுதி மணலில் ஆடுகின்ற கூத்தினைப் பார். வட்டமான உன் முகத்தில் எங்கேனும் கண் இருக்குமானால், நீ என் மகன் விளையாடுகின்ற இடம் நோக்கிப் போய் அவனுடன் விளையாடுவாயாக', என்று கூறுகிறாள்.


பாடல் 2
--------

என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுது எம்பிரான்*
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்*
அஞ்சனவண்ணனோட ஆடலாட உறுதியேல்*
மஞ்சில்மறையாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா.

EN SIRU KUTTAN ENAKKOR INNAMUTHU EMPIRAAN
THAN SIRU KAIKALAAL KAATTI KATTI AZHAIKKIRAAN
ANJANA VANNANODU ADALAADA URUTHIYEL
MANJIL MARAYAATHEE MAAMATHEE VIRAINTHODI VAA

ANJANA = KAAJAL; MANJIL = CLOUD

my little boy is pointing you and calling u
IF U want to play WITH MY LITTLE BOY THEN
DONT HIDE UNDER THE CLOUDS BIG MOON. COME HERE RUNNING.

யசோதை அன்னை நிலவினைப்பார்த்துக் கூறுவது போல் அமைந்த பாடல் இது:

என்னுடைய இந்த சிறிய பாலகன், எனக்குக் கிடைக்கப்பெற்ற ஓர் இனிய தெவிட்டாத தெள்ளமிழ்தம் போன்றவன்; என்னுடைய தெய்வம் அவன்; அப்படிப்பட்ட என்னுடைய புதல்வன், தன்னுடைய சிறிய கைகளால் உன்னையேக் காட்டிக் காட்டி மிகுந்த ஆவலுடன் உன்னை விளையாட அழைக்கின்றான். பௌர்ணமி நிலவே! கருமை வண்ணங்கொண்ட என் சுந்தரனோட விளையாடுவதற்கு உனக்கும் விருப்பமுண்டாகில், மேகங்களில் சென்று ஒளிந்து கொள்ளாதே; விரைந்து ஓடிவந்து என்மகனுடன் விளையாடுவாயாக.

பாடல் 3

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதிபரந்தெங்கும்*
எத்தனை செய்யினும் என்மகன் முகம் நேரொவ்வாய்*
வித்தகன் வேங்கடவாணன் உன்னை விளிக்கின்ற*
கைத்தலம் நோவாமே அம்புலீ! கடிதோடிவா.

sutrum olivattom soozhn thu chothi paranthu engum
eththanai seyyinum en magan ner ovvaai
viththagan venkata vaanan unnai vilikkinra
kaithalam novaame ambulee kadithodivaa

அடே மாமதீ (நிலவெ) நீ எவ்வளவு தான் சோதி வீசினாலும்
என்ன தான் செய்தாலும் என் மகன் முகத்துக்கு ஈடாக மாட்டாய்
என் பிள்ளை உன்னை கூப்பிடுகிறானடா. அவன் கை வலிக்கிறதுக்கு
முன்னலே வாடா.

ஏ வெண்ணிலவே! உன் வட்டமான அழகிய முகத்திலிருந்து சிதறுகின்ற குளிர்ந்த வெண்கதிர்களின் ஒளியானது, இவ்வுலகம் முழுதும் விரவி ஒளியூட்டினாலும்; நீ வளர்வதும் தேய்வதும் போல் மாயங்கள் பல புரிந்தாலும் அவை எல்லாம் என் மகனின் அழகிய திருமுகத்திற்கு முன் எக்காலத்திலும் ஒப்பாகாது. வித்தகர்க்கெல்லாம் வித்தகன், தூய ஞானத்தின் வடிவானவன்; மலைகளிலே புனிதமான வேங்கடமலையில் வாழ்கின்ற வேங்கடவன் உன்னை எத்துனை காலமாய் அழைக்கின்றான். அச்சிறு பாலகனின் பச்சிளங்கைகளில் வலி தோன்றும் முன்னே விரைந்தோடிவந்து அவனுடன் விளையாடுவாயாக', என்று யசோதை அன்னை நிலவிடம் கூறுகிறாள்

4 சக்கரக்கையன் தடங்கண்ணால் மலரவிழித்து*
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக்காட்டும் காண்*
தக்கதறிதியேல் சந்திரா! சலம் செய்யாதே*
மக்கட்பெறாத மலடனல்லையேல்வா கண்டாய்.

சக்கரக்கையன் தடங்கண்ணால் மலரவிழித்து - உன்னினும் பொலிவுடைய, வடிவான சுதர்சன சக்கரத்தைக் கொண்டிருப்பவன் என் மகன்; தன் பெரிய அழகிய கண்கள் விரிய உன்னையே பார்த்து

ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக்காட்டும் காண் - வேங்கட மாமலை மேல் வீற்றிருப்பவன், இப்போது என் இடுப்பின் மேல் அமர்ந்து கொண்டு, என் தாவாயைத் திருப்பித் திருப்பி, உன்னையே மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டுகின்றதைப் பார் சந்திரனே! (ஒக்கலை - இடுப்பு)

தக்கதறிதியேல் சந்திரா! சலம் செய்யாதே - இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று உனக்குத் தெரியவில்லையா சந்திரா! பிடிவாதம் செய்யாமல் இறங்கி வந்து இந்த கார்மேகத்துடன் விளையாடுவாயாக (சலம் - பிடிவாதம்)

மக்கட்பெறாத மலடனல்லையேல் வா கண்டாய் - ஒரு மழலையின் விருப்பம் உனக்குப் புரியவில்லையா? மக்கட் செல்வம் வாய்க்கப் பெறாத மலடனல்லவே நீ. ஆகவே, உடனடியாக நீ இங்கே, இவ்விடத்தில் வந்து என் பிள்ளையுடன் விளையாடுவாயாக.

பதவுரை:

யசோதை அன்னை, 'தன் இறைவனான கண்ணன், சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தியிருப்பவன்; அவன், என் இடுப்பின் மேல் அமர்ந்து கொண்டு, தன்னுடைய பெரிய அழகிய கண்களை விரிய விரித்து, உன்னையே சுட்டிக்காட்டுகிறான் பார். மக்களைப் பெற்ற உனக்கு இப்பொழுது என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லையா? பிடிவாதம் செய்யாமல், உடனடியாக வந்து என் பிள்ளையுடன் விளையாடுவாயாக வெண்ணிலவே!,' என்று நிலவினை கண்ணனுடன் விளையாட விளிக்கின்றாள்.

5.அழகியவாயில் அமுதவூறல் தெளிவுறா*
மழலைமுற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்*
குழகன் சிரீதரன் கூவக்கூவ நீபோதியேல்*
புழையிலவாகாதே நின்செவிபுகர் மாமதீ!

பொருள்:


அழகியவாயில் அமுதவூறல் தெளிவுறா - குட்டிக் கண்ணனின் அழகிய பவளவாயில் ஊறுகின்ற உமிழ்நீர் அமுதத்துடன் கலந்து தெளிவில்லாமல் வருகின்ற

மழலைமுற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான் - குழந்தைத்தனம் மாறாத மழலைச் சொற்களால் நிலவே! உன்னைக் கூவிக் கூவி அழைக்கின்றான்

குழகன் சிரீதரன் கூவக்கூவ நீபோதியேல் - அழகன், குழந்தையாய் வந்திருக்கின்ற திருமகளைத் தன் உள்ளத்திலேயே என்றும் இருத்தியிருக்கின்ற திருமாலவன் கூவிக் கூவி அழைத்தும் நீ அகன்று செல்கின்றாயே (குழகன் - குழந்தை, அழகன், இளையவன்; குழகு - அழகு, குழந்தை, இளமை ஆகிய மூன்றனையும் குறிக்கும் ஒரு சொல்லாகும்)

புழையிலவாகாதே - உனது செவிகள் அடைக்கப்பெற்றுள்ளனவா?? இப்பாலகன் உன்னைக் கூவி அழைப்பது, நின் செவிகளில் விழவில்லையா? அவை கேட்கும் தன்மையை இழந்துவிட்டனவா?? முழு உருவத்துடன், மிகுந்த பொலிவுடன் பூரண சந்திரனாய் விளங்கினாலும், நீ கேளா செவிகளைக் கொண்டிருப்பதால், நீ முழுமையானவன் அல்லன், பௌர்ணமி நிலவே! (புழை - சிறுவழி, துளை)

நின் செவி புகர் மாமதீ - உனது செவிகள் கேட்கும் தன்மை கொண்டவையாயிருந்தாலும், நீ இம்மழலையினது குரலைக் கேட்காமல் இருப்பதற்காக, உனது செவிகள் கேட்கும் தன்மையை இழந்து போகட்டும் முழுநிலவே! (புகர் - குறை, குற்றம்)

பதவுரை:

குழந்தை கண்ணனின் அழகிய பவளவாயில் ஊறுகின்ற எச்சில் அமுதத்துடன் கலந்து, தெளிவுறாத, குழந்தைத்தனம் மாறாமல் வருகின்ற மழலைச் சொற்களால் உன்னைக் கூவி அழைக்கின்றான். அழகன், குழந்தையாயிருக்கின்ற திருமகள் கேள்வன் கொஞ்சிக் கொஞ்சி உன்னை பல முறை அழைத்தும் நீ விலகி விலகிப் போகின்றாயே வட்டநிலவே. முழுநிலவே! உனது செவிகள் அடைக்கப்பெற்றுவிட்டனவோ?? இந்த பௌர்ணமி நாளில் நீ பூரணமாய் ஒளிவீசி, முழுமைப் பெற்றுத் தோன்றினாலும், கேளா செவிகளைக் கொண்டிருப்பதால் நீ குறையுடையவனே. அப்படியே, நினது செவிகள் கேட்கும் தன்மைக் கொண்டவையாயிருந்தாலும், இப்பாலகனின் மழலைக் குரலுக்கு செவிமடுக்காமையால், இனி, அவை செயலிழந்து போகட்டும், சந்திரனே!

6.தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்*
கண்துயில் கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான்*
உண்டமுலைப்பாலறா கண்டாய் உறங்காவிடில்*
விண்தனில் மன்னிய மாமதீ! விரைந்தோடிவா.



தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன் - இந்த சிறு பிள்ளை, தன்னிடம் விளையாடுவதற்கு ஏதும் இல்லாதபடியால் உன்னை அழைக்கவில்லை; தன் வலிமையான பெரிய பிஞ்சு கைகளில் கௌமோதகி என்ற கதாயுதத்துடன்(கதையுடன்), உன்னினும் பொலிவான சுதர்சன சக்கரத்தையும், சார்ங்கம் என்ற வில்லினையும் வைத்திருக்கின்றான்.

கண்துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான் - குட்டிக் கண்ணனுக்குத் தூக்கம் வருகின்றபடியால், அதற்கு அடையாளமாய் கொட்டாவி விடுகின்றான். இத்துனை நேரம் உன்னை அழைத்தும் நீ வரவில்லை வெள்ளி நிலவே! அவனும் உன்னை அழைத்து அழைத்துப் பார்த்துவிட்டு, அயர்ந்து போய்விட்டான். தூக்க மயக்கமும் அவனைத் தழுவிக் கொண்டது; நீயும் இன்னும் வாராமையால் மிகவும் வாட்டத்துடன் அவன் கொட்டாவி விடுவதைப் பார். (கொட்டாவி - தூக்க மயக்கம், பசி மயக்கம் போன்றவற்றால் வாய் வழியாக வெளியிடும் நெட்டுயிர்ப்பு)

உண்ட முலைப்பாலறா கண்டாய் உறங்காவிடில் - உறங்காவிடில் உண்ட முலைப்பால் அறா கண்டாய் - சரியான நேரத்திற்கு அவன் உறங்காவிட்டால், அவன் உண்ட தாய்ப்பாலும் சரியாக செரிமானமாகாது, பாத்துக்கோ! (அறா - செரிமானம் ஆகாது; அறு - செரிமானமாதல், செரித்தல்)

விண்தனில் மன்னிய மாமதீ! விரைந்தோடிவா - விண்ணிலே என்றும் நிலைபெற்றிருக்கின்ற முழுமதியே! என்மகன், கண்ணன் கண்ணுறக்கம் கொள்ளவேண்டும் விரைந்தோடிவா. (விண் - வானம்; மன்னிய - நிலைபெற்ற)

பதவுரை:

விண்ணிலே நிலைபெற்ற முழுமதியே! எத்துனை முறைதான் என் மகன் உன்னையேக் கூவி அழைத்துக் கொண்டிருப்பான். தன் வலிமையான பிஞ்சு கைகளில் கௌமோதகி என்கிற கதையுடன், சுதர்சன சக்கரத்தையும், சார்ங்கம் என்ற வில்லினையும் வைத்திருப்பவன், தூக்கமயக்கம் தழுவுவதால் உறங்குவதற்கு நிமித்தமாய் வாய்வழியே நெடுமூச்சு விடுகின்றான். இதோ பார் வெண்மதியே!அவன் சரியான நேரத்திற்கு, உறங்கினால் தான் அவன் நிறைவாய் உண்ட தாய்ப்பாலும் செரிமானமாகும். என் மகன், கண்ணுறக்கம் கொள்ளவேண்டும்; தாமதிக்காமல் விரைந்தோடிவா, வெண்ணிலவே!

பாலகனென்று பரிபவம் செய்யேல்* பண்டொருநாள்
ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவன் இவன்*
மேலேழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல்*
மாலைமதியாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா

பாலகனென்று பரிபவம் செய்யேல் - தாய்ப்பாலைக் கூட சீரணிக்க இயலாத சிறு பாலகனென்று இப்பிள்ளையை நீ இழிவாய் எண்ணிவிடாதே. (பரிபவம் - இழிவு, எளிமை)

பண்டொருநாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவன் இவன் - இவன் யாரென்று தெரியுமா?? முன்னொரு காலத்தில், மகாப் பிரளயம் வந்தபோது, அண்டசராசங்களனைத்தையும் தன் வயிற்றினுள் வைத்துக் காத்துக் கொண்டு, ஊழிப் பெருவெள்ளத்தில், தன் பாதவிரலை சூப்பிய வண்ணம் ஆலிலைமேல் பால முகுந்தனாக மிதந்துவந்த அந்த சிறுபிள்ளையை நீ அறிவையோ?? அந்த பாலகன் தான் இவன், தெரிந்துகொள் வெண்ணிலவே! (பண்டு - பழைமை; முற்காலம்; சிறுக்கன் - சிறுபிள்ளை, சிறுக்கி என்ற பெண்பாலுக்கெதிரான ஆண்பால்)

மேலேழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல் - இந்த சிறுக்கனுக்குக் கோபம் வந்துவிட்டால், ஒரே பாய்ச்சலில் உன்னை எட்டிப் பறித்து, எங்கும் நகரவிடாமல் கெட்டியாகப் பிடித்துத் தன்னிடமே வைத்துக் கொள்வான். (வெகுளுமேல் - கோபம் கொண்டால்)

மாலைமதியாதே மாமதீ! மகிழ்ந்தோடிவா - உன்னை ஒரே பாய்ச்சலில் எட்டிப் பிடிக்கக்கூடிய வல்லமையுடைய திருமாலை, அவமதிக்காமல், மகிழ்ச்சியுடன் அவனோட விளையாட ஓடிவருவாயாக.

பதவுரை:

பௌர்ணமி நாளில் பூத்திருக்கின்ற பூரண நிலவே! என்மகனை சிறிய மழலைதானே என்று எளிமையாய் எண்ணிவிடாதே. முன்னொரு காலத்தில், ஊழிப் பிரளயத்தின் போது, அண்டங்களனைத்தையும் தன் வயிற்றினுள் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, பங்கயப் பாதவிரலை பவள இதழால் சுவைத்துக்கொண்டே பிரளய நீரில் ஆலிலைமேல் சயனத்திருக்கோலத்தில் பாலமுகுந்தனாக மிதந்து வந்த அந்த சிறுவன்தான் இவன். இவனுக்குக் கோபம் வந்துவிட்டால், உன்னை ஒரே பாய்ச்சலில் எட்டிப் பறித்து, எங்கும் அசையவிடாமல் பிடித்துக் கொள்வான். அதற்காக நீ அச்சம் கொள்ளவும் தேவையில்லை; என்மகன் உன்னுடன் அன்பாக விளையாடுவான் அதனால் விரைந்தோடிவா வெண்மதியே!

சிறியனென்று என்னிளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய்*
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்*
சிறுமைப் பிழைகொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண்*
நிறைமதீ! நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்.

This Blog Linked From Here
This Blog
Linked From Here
.
Monday, November 16, 2009
பெரியாழ்வார் திருமொழி 1 - 4 - 8
பெரியாழ்வார் திருமொழி - முதற்பத்து

நான்காம் திருமொழி - தன்முகத்து
(அம்புலிப்பருவம் - குழந்தையுடன் விளையாட நிலவினை அழைத்தல்)
கலிநிலைத்துறை

பாடல் 8


சிறியனென்று என்னிளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய்*
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்*
சிறுமைப் பிழைகொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண்*
நிறைமதீ! நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்.






பதவுரை:

சிறியனென்று என்னிளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய் - என் சிங்கக்குட்டியை சிறு குழந்தை தானே, இப்பொடியனால் என்ன செய்து விட முடியும் என்று சிறுமையாய் எண்ணிவிடாதே

சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள் - சிறுமையின் வார்த்தைக்கு முழுமையான விளக்கத்தை மாவலி (மகாபலி)ச் சக்கரவர்த்தியிடத்தில் கேட்டுத் தெரிந்து கொள்.

சிறுமைப் பிழைகொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண் - சிறுமதி கொண்ட முழுமதியே! இவனை சிறுவனாக எண்ணி, அவமதித்து, அழிந்துவிடாதே! இப்பிள்ளை மட்டும், விசுவரூபம் கொண்டு எழுந்துவிட்டால், நீ எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவாய். ஆகையால், என் பாலகனுடன் வந்து விளையாடி, நற்பலன் பெற்றுக் கொள்வாயாக.

நிறைமதீ! நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான் - முழுநிலவே! என் நெடுமால் வேகமாய், பலமுறை உன்னைக் கூவி அழைக்கின்றான். விரைந்து வருவாயாக!

பதவுரை:

முழுநிலவே! என் மகன், நெடுமால், உற்சாகத்துடன் வேகமாக, பலமுறைக் கூவி அழைக்கின்றான். சிறுமதி கொண்ட முழுமதியே! தோற்றத்தில், சிறிய பாலகனாக இருக்கிறானென்று என் சிங்கக் குட்டியை சிறுமையாய் எண்ணிவிடாதே. இச்சிறுமையின் வலிமையை மாவலிச் சக்கரவர்த்தியிடம் சென்று கேட்டுப்பார், தெரியும். இச்சிறு பிள்ளை மட்டும் விசுவரூபம் கொண்டு எழுந்துவிட்டால், நீ இருக்கும் இடம் தெரியாது போய்விடுவாய். சமரசமாக, மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து, என் பாலகனுடன் விளையாடி நற்பலன் பெற்றுக் கொள்வாயாக! விரைந்து நெடுமாலிடம் வருவாயாக, வெண்ணிலவே!

தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய*
பேழைவயிற்றெம்பிரான் கண்டாய் உன்னைக்கூவுகின்றான்*
ஆழிகொண்டு உன்னையெறியும் ஐயுறவில்லைகாண்*
வாழவுறுதியேல் மாமதீ! மகிழ்ந்தோடிவா.

தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய - மோர்ப் பானையில் வைத்திருந்த வெண்ணெய் முழுவதையும், தன் பெரிய கைகளால் எடுத்து, ஒரே வாயாக விழுங்கி உண்ட

பேழைவயிற்றெம்பிரான் கண்டாய் உன்னைக்கூவுகின்றான் - பெரிய வயிறுடைய, என் தெய்வம், அம்புலியே உன்னைக் கூவி அழைக்கிறான் பார்.

ஆழிகொண்டு உன்னையெறியும் ஐயுறவில்லைகாண் - தானே எழுந்து, உன்னைத் தாவிப் பிடிக்கவேண்டும் என்று இல்லை. இங்கிருந்தபடியே, தன் சக்கராயுதத்தை ஏவி விட்டாலே போதும். நீ இல்லாமல் போய்விடுவாய். எங்கள் குலதெய்வம் பலமுறை, உரக்கக் கூவி அழைத்தும் நீ வரவில்லை. ஆதலால், சந்தேகமே இல்லை. அவன் தன் சக்கராயுதத்தினால் உன்னைக்
கொல்லப்போகிறான் பார்.

வாழவுறுதியேல் மாமதீ! மகிழ்ந்தோடிவா - இறுதியாக அழைக்கிறேன், உனக்கு வாழ விருப்பம் இருந்தால், மாமதியே மகிழ்ந்தோடி வந்து என் மகனுடன் விளையாடுவாயாக.

பதவுரை:

மோர்ப் பானையில் வைத்திருந்த, வெண்ணெய் முழுவதையும், தன் பெரிய கையால் எடுத்து, ஒரே வாயில் விழுங்கி உண்ணுமளவினுக்குப் பெரிய வயிறுடையவன்; எங்கள் குல தெய்வம் உன்னைக் கூவி அழைக்கின்றான். அவன் பல முறை அழைத்தும் நீ வராததால், தன் சக்கராயுதத்தை அனுப்பி, நிச்சயமாக உன்னைக் கொல்லப் போகிறான்.இதில் சந்தேகமே இல்லை. உயிர் வாழ விருப்பம் கொண்டாயானால், மாமதியே! மகிழ்ந்தோடிவந்து என்மகனுடன் விளையாடுவாயாக

மைத்தடங்கண்ணி யசோதைதன் மகனுக்கு* இவை
ஒத்தன சொல்லி உரைத்தமாற்றம்* ஒளிபுத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை*
எத்தனையும் சொல்லவல்லவர்க்கு இடரில்லையே.
மைத்தடங்கண்ணி யசோதைதன் மகனுக்கு - அகன்ற, பெரிய, அழகிய கண்களை உடையவளான யசோதை அன்னை, தன் மகனான குட்டிக் கண்ணனின்

இவை ஒத்தன சொல்லி உரைத்தமாற்றம் - வீர பராக்கிரமங்களையும், அவன் வலிமையையும், மாயசக்திகளைப் பற்றியெல்லாம் பொருந்த சொன்ன, இந்த மேலான உண்மைப் பொருள்களை எல்லாம்

ஒளிபுத்தூர் வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை - மேன்மையுடைய திருவில்லிப்புத்தூர் நகர் வாழ், இறைவனின் தூதுவனான அடியன் விட்டுசித்தன் விரிவாய் உரைத்த, இந்த தீந்தமிழ்ப் பாடல்கள்

எத்தனையும் சொல்லவல்லவர்க்கு இடரில்லையே - முழுவதையும் மனமாற சொல்பவர்களை எந்த துன்பமும் தீண்டாது.

பதவுரை:

அகன்ற, பெரிய, அழகிய கண்களை உடையவளான யசோதை அன்னை, தன் மகனான குட்டிக் கண்ணனின் வீர பராக்கிரமங்களையும், அவன் வலிமையையும், மாயசக்திகளைப் பற்றியெல்லாம் பொருந்த சொன்ன, இந்த மேலான உண்மைப் பொருள்களை எல்லாம் மேன்மையுடைய திருவில்லிப்புத்தூர் நகர் வாழ், இறைவனின் தூதுவனான அடியன் விட்டுசித்தன் விரிவாய் உரைத்த, இந்த தீந்தமிழ்ப் பாடல்கள் முழுவதையும் மனமாற சொல்பவர்களை எந்த துன்பமும் தீண்டாது.

No comments:

Post a Comment