Friday, April 1, 2016

Garudan




கருடன்

 

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக்கண்டீரே?
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்

மேலாப்பின் கீழ்வருவானை விருந்தாவனத்தே கண்டோமே


என்று சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் பாடியபடி எம்பெருமானுக்கு வெயில் படாதபடி தன் பரந்து விரிந்த சிறகால் காப்பவன் விநதை சிறுவன் கருடன்
மகாபாரதத்தில் அவன் பிறந்த கதை மிக அழகாக வர்ணிக்க படுகிறது.

 

சப்த ரிஷிகளில் ஒருவர் காஷ்யபர், அவருக்கு இரண்டு மனைவிகள் முதலாமவள் விநதை, இரண்டாமவள் கத்ரு. இதில் விநதை மிக நல்லவள், கத்ரு கொடியவள். இருவரும் கரு தரித்து - ஆனால் வினோதமாக கத்ரு ஆயிரம் முட்டைகளும், விநதை இரண்டு முட்டைகளும் இட்டனர்.


ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் ( அப்பப்பா !!) கத்ருவின் ஆயிரம் முட்டைகள் குஞ்சு பொறித்து நாகங்கள் வெளி வந்தன. இதைக் கண்டு தன் முட்டைகள் என்னவாயிற்று என்று எண்ணி அவசரத்தில் ஒன்றை உடைத்து பார்த்தாள் விந்தை - அவசரத்தில் அவள் செய்த தவறு - உள்ளே குழந்தை பாதிதான் உருவாகி இருந்தது - அவனே அருணன். எஞ்சி உள்ள தன் தமயனின் முட்டையை பொறுமையுடன் பாதுகாக்க அறிவுரை கூறிவிட்டு அவன் சூரியனின் தேரோட்டி ஆனான். (அருணனின் மகனே ராமாயணத்தில் வரும் ஜடாயு )
அத்தருணத்தில் பொறாமையினால் கத்ரு ஒரு சூழ்ச்சி செய்தாள். அவள் விநதையை ஒரு போட்டிக்கு அழைத்தாள். அந்த போட்டியில் யார் தோற்றுப் போகின்றார்களோ அவர் வெற்றி பெற்றவரின் அடிமையாக இருக்க வேண்டும் என்பதே போட்டியின் நிபந்தனை.

 

அந்தப் போட்டி என்ன ? இந்திரனிடம் ‘உச்சைஸ்ரவஸ்’ னு ஒரு வெள்ளைக் குதிரை இருந்தது. பாற்கடலை கடையும் போது வந்தது அது - அதனுடன் வந்ததே கௌஸ்துபம் - பெருமாளின் மார்பை அலங்கரிக்கும் மணி அந்தக் குதிரை சில சமயம் வானத்திலே பாய்ந்து போகும். அதைப் பார்த்ததும் கத்துருவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அவள் வினதையிடம், ‘உச்சைஸ்ரவஸ் என்ன நிறம்?’னு கேட்டாள். வினதையும் அந்தக் குதிரையைப் பார்த்திருக்கிறாள். அதனால் ‘வெள்ளை’ னு பதில் சொன்னாள்.  இல்லை, அது கறுப்புன்னா கத்துரு. ஆனா வினதைக்கு நல்லா தெரியும். அது முற்றிலும் வெள்ளைதான்னு; அதனால தான் சொன்னதுதான் சரின்னு அடிச்சுச் சொன்னா. உடனே கத்துரு, ‘அது முழுசுமாக வெள்ளையில்லே, அதனோட வால் கறுப்பு’ன்னா. வினதையோ, ‘கிடையவே கிடையாது’ன்னு தீர்மானமாகச் சொன்னா, கத்துரு உடனே, ‘பந்தயம் வெச்சுக்கலாம். உச்சைஸ்ரவஸ் ஏதாவது ஒரு பகுதியிலே கறுப்பா இருந்தா நீ எனக்கு அடிமையாகணும்னு சொன்னா. அப்படி இல்லேன்னா, தான் அவளுக்கு அடிமை’ன்னா, வினதையும் ஒப்புக்கிட்டா.

 

‘‘உச்சைஸ்ரவஸ் முற்றிலும் வெண்மைதான்னு கத்துருவுக்கும் தெரியும். ஆனா, தான் போட்டியில ஜெயிக்க அதனோட வாலை மட்டுமாவது கறுப்பாகக் காட்டணுமே! உடனே பாம்பாக இருந்த தன்னோட பிள்ளைகள்ல கறும்பாம்புகள் சிலவற்றைக் கூப்பிட்டா, ‘நீங்க உடனே போய் அந்த உச்சைஸ்ரவஸ் வால்ல போய் சுத்திக்கோங்க. இங்கேயிருந்து பார்த்தா, அந்த வால் கறுப்பாகத் தெரியணும்’னு சொன்னா. உடனே அந்தப் பிள்ளைகளும் அம்மா பேச்சைத் தட்டாம அப்படியே சுத்திகிட்டாங்க. வழக்கம்போல உச்சைஸ்ரவஸ் வானத்திலே வந்தபோது, இந்த சமயம் அதனோட வால் கறுப்பாக இருந்தது. அதை வினதைக்கு கத்துரு காட்டினாள். ‘பார், அதனோட வால் கறுப்பா இருக்கு. அதனால நீ எனக்கு அடிமை’ அப்படின்னா. குதிரையைப் பார்த்த வினதை திடுக்கிட்டாள். அது எப்படி கறுப்பாச்சு? இத்தனை நாள், தான் பார்த்தபோது வெள்ளையாக இருந்ததேன்னு வினதைக்கு ஒரே குழப்பம். ஆனா அதைத் தீர விசாரிக்காம, உண்மையைத் தெரிஞ்சுக்கணும்னு ஆத்திரப்படாம, வாக்குக் கொடுத்ததுபோல கத்துருவுக்கு அடிமையானா.

 
குறிப்பிட்ட காலத்தில் வினதயின் மகன் கருடன் முட்டையில் இருந்து வெளி வருகிறான். அவன் உருவம் வளர்ந்து மிக பிரம்மாண்டமாக அனைவரும் அஞ்சும் அளவிற்கு பெரியதாக உள்ளது. தேவர்கள் வேண்டுகோளின் படி அவன் தன் உருவத்தை சிறியது படுத்துகிறான்.


((((இங்கே ஒரு கிளைக் கதை:

 கருடனுக்கு ஒரே பசி. பசியாற உணவைத் தேடும் அவனுக்கு அவன் தாய் கடலோரத்துக்கு சென்று அங்கு இருக்கும் ஜீவராசிகளை உண்டு வருமாறு கூறி ( அங்கு எந்த பிராமணனுக்கும் தீங்கு நேரிடாமல் நட என்றும் கூறுகிறார். கடற்கரைக்கு சென்ற கருடன் அங்கு ஒரு மீனவ கிராமம் ஒன்றை அப்படியே விழுங்கிவிட்டான். அப்போது அவன் வயிறு எரிகிறது - விழுங்கியவர்களுள் ஒருவர் அந்தணர் என்று அறிந்து அவரை வெளியில் உமிழ்கிறான். அவரும் தனது மனைவி - ஒரு மீனவப் பெண்மணி - அவளையும் காப்பாற்றுமாறு கூற - கருடனும் அவ்வாறே செய்கிறான் )
பின்னர் இன்னும் பசி தீராமல் இருக்கவே, தன் தந்தையை நாடிசெல்கிறான் கருடன். காஷ்யபர் அவனை அருகில் ஒரு ஏரியின் கரையில் பல காலமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு யானை மற்றும் ஒரு ஆமை - அவற்றை தின்று நீ பசியாறு என்கிறார்.

கருடனும் அங்கு விரைகிறான் - அங்கே ஒரு பிரம்மாண்ட ஆமை ( எண்பது மைல் பெரியது ) , யானையோ ( நூற்றி அறுபது மைல் ) - அப்பாடா - கருடன் ஒரு கையில் ஆமையையும் ஒரு கையில் யானையும் பிடித்து, அவற்றை உண்ண சரியான இடம் தேடுகிறான் . அங்கே ஒரு பேரு மரம் அவனை வரவேற்றது ( மரம் எட்டுநூறு அடி உயரம் ) - அதன் கிளையில் அமர்ந்த கருடன் , மூவரின் பாரத்தினால் கிளை உடைவதும், அதே கிளையின் அடியில் முனிவர்கள் பலர் தலை கீழாக தவம் புரிவதும் கண்டு திடுக்கிட்டான். உடனே கிளையை வாயில் கவ்வி - அருகில் இருந்த மலையின் உச்சிக்கு சென்று முனிவர்களை இறக்கி விட்டு, தன் இரைகளை தின்று முடித்தான்))).

இந்த நிகழ்வு திருக்குறுங்குடி கோவில் சிற்பமாக இருக்கிறது. . கருடனின் வலிமை, ஒரு கையில் யானை, மறு கையில் ஆமை - மூக்கில் மரம் - மரத்தில் தொங்கும் முனிவர்கள்)))

 

 

தான் அடிமைப்பட்டதைத் தன்னோட மகன் கருடன்கிட்ட சொன்னா வினதை. மகனுக்கோ கோபமான கோபம். தன்னோட தாயை ஏமாற்றி அடிமையாக்கிய சின்னம்மாவை அவன் உடனே பழி வாங்கத் துடிச்சான். ஆனா, அவனை வினதை சமாதானப்படுத்தினா. தன்னைப் போலவே தன்னுடைய மகனும் கத்துருவுக்கு அடிமையாகிடுவானோன்னு பயந்தாள். கருடனும் யோசிச்சான். போட்டின்னு வந்துட்டா எப்படியாவது ஜெயிக்கணும்னுதான் நினைப்பாங்க. அந்த வகையில கத்துரு ஜெயிச்சதிலேயும் அவளைப் பொறுத்தவரை நியாயம் இருக்கலாம். ஆத்திரப்பட்டு கத்துருவோட சண்டை போடறதைவிட, அவளை அனுசரிச்சுகிட்டுப் போகலாம்னு நினைச்சான். ஆகவே, கத்துருகிட்ட போய் அவளுக்குத் தேவையானதைப் பண்ணிக் கொடுத்து, தன் தாயை விடுவிக்கணும்னு நினைச்சான். கத்துருகிட்ட போய், ‘எங்க அம்மாவை விட்டுடுங்க. உங்களுக்கு என்ன வேணும்னு கேளுங்க. நான் பண்ணித் தரேன்’ன்னான். உடனே கத்துரு ஒரு ஐடியா பண்ணினாள். அம்மாவை அடிமையாக்கியாச்சு. இவனையும் ஏதாவது கஷ்டமான வேலையைச் சொல்லி மடக்கிப் போட்டுட வேண்டியதுதான்னு நினைச்சா. அதனாலே, அவன்கிட்ட தேவலோகத்திலே இருக்கற அமிர்தத்தைக் கொண்டு வரும்படி சொன்னா. கருடனுக்கோ அது ஒண்ணும் பெரிய வேலையாகத் தெரியலே. ஏன்னா, அப்படிக் கொண்டு வந்துட்டானா அம்மாவை விடுதலை செய்துடலாமே?


இந்திர லோகத்தை தன் பறக்கும் சக்தியினால் சுலபமாக அடைந்து விடுகின்றான் கருடன். கருடனும் வழியில் தன்னை எதிர்த்தவர்களை அழித்துக் கொண்டே தேவலோகம் சென்றார்.
 

அமிர்த குடத்தை நெருங்கும் கருடனுக்கும் தேவர்களுக்கும் இடையே பெரும் போர் நடை பெறுகின்றது. அப்போது கருடனுடன் போரிட இந்திரனே வருகிறான் தேவர்களை வெற்றி பெற்று அடுத்து உள்ளே செல்கிறான் கருடன். அங்கே ஒரு பெரிய தீ அவனை தடுக்கிறது. உடனே அவன், பூமியில் இருக்கும் பெரிய அருவிகள் மற்றும் ஆறுகளில் இருந்து நீரை குடித்து வந்து - அதை அந்த தீயின் மேல் துப்பி அணைக்கிறான். பிறகு ஒரு இயந்திரம் - வெட்டு கத்திகள் பொருந்தியது - சுழன்று கொண்டே இருக்கிறது - தன் உருவத்தை சிறியதாய் மாற்றி அதனுள்ளே நுழைகிறான். அங்கே இரு ராட்சசப் பாம்புகள் - அவற்றை எளிதில் கடித்து நசுக்கிக் கொன்று, அமிர்தம் உள்ள குடத்தை எடுக்கிறான்.

 
.ஆயினும் இந்திரனால் கருடனை வெல்ல முடியாமல் இறுதியாக வஜ்ராயுதத்தை இந்திரன் எய்கின்றான்.  கருடன் அப்போது வஜ்ராயுதத்தை வணங்கி இந்திரனிடம் சென்று நடந்ததைக் கூறி தான் அமிர்தம் பெற வந்ததற்கான உண்மையான நோக்கத்தை கூறுகின்றான். இருவரும் சேர்ந்து கருடனின் தாயின் அடிமைத்தனம் போக்கவும், நாகங்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் போகவும் ஒரு வழி வகுக்கின்றனர்.



இந்திரன் கருடனுக்கு ஒரு வரம் தருகிறான். கருடன் அன்று முதல் சிற்றன்னைக்கு துணை சென்ற நாகங்கள் எல்லாம் தனக்கு இயற்கையான இரைஆக வேண்டும் என்று கேட்கிறான். பிறகு கருடன், ஆணவத்தால் அறிவிழந்த பெரியம்மாவிடம் அமிர்தத்தை அளித்து தன் தாயின் அடிமைத்தனத்தை நீக்கி, தன்னைப் பெற்றவளின் வயிற்றை குளிரச் செய்கின்றான். அமிர்தத்தை தரையில் வைத்து, நாகங்களை அதை பருகும் முன் சென்று குளித்து வருமாறு கூறுகிறான் கருடன். அவர்கள் குளிக்க செல்லும் போது இந்திரன் வந்து அமிர்தத்தை எடுத்து சென்று விடுகிறான். இப்படியாக கருடனுக்கும் நாகங்களுக்கும் அமிர்தம் கிடைக்காமல் செய்து விடுகிறான் இந்திரன்.

தாயை மீட்டதும், தமது தாயாரை ஏமாற்றிய சகோதரர்களை துவம்சம் செய்யத் துவங்குகிறான் கருடன்.  காஷ்யப முனிவர் தலையிட்டு இருவருக்கும் சமாதானம் செய்தார். அங்கு வந்த இந்திரனும் அது முதல் கருடனுக்கு பாம்புகள் அடிமையாகட்டும்; என கருடனுக்கு அருள் புரிந்தார். பின்னர் திரும்பும் பொது மகா விஷ்ணு எதிரில் வர - இருவரும் ஒருவரை ஒரவர் புரிந்து - ஒரு சமரசத்திற்கு வருகின்றனர். விஷ்ணு கருடனுக்கு அமிர்தத்தை அருந்தாமலே அமர ஆயுளை தருகிறார், கருடனும் தன் பணி முடிந்தவுடன் அவரின் வாகனமாக இருக்க வாக்கு தருகிறான். கருடன் விஷ்ணுவிற்கு வாகனமாகிறான்.


 தமது தாயை அடிமைத்தனத்தில் இருந்து மீட்ட விஷ்ணுவின் வாகனமான கருடனை கொண்டாடும் விதத்திலேயே சக்தி வாய்ந்த மழலைச் செல்வமும், குடும்ப ஒற்றுமையும், முக்கியமாக தாயார் மகன் உறவு பலப்பட வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டு கருட பஞ்சமி கொண்டாடப் படுகின்றது.

கருடன் பறவை மங்களம் நிறைந்ததாகக் கருதப் படுகிறது. இப்பறவை வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் இந்துக்களால் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோவிலில் குடமுழுக்கு, வேள்வி மற்றும் பிற சிறப்பு வழிபாடுகள் நடைபெரும்போது போது, கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவது நல்ல சகுனம் என்று நம்பப்படுகிறது. சபரிமலை ஆண்டுதோறும் நடைபெறும் மகரஜோதி தரிசனத்துக்காக கேரளா மாநிலம் பந்தளம் எனும் ஊரில் உள்ள அரண்மனையிலிருந்து திருவாபரணப் பெட்டிகள் ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து வரும்போது கூடவே கருடன் பறவை நேர் மேலே வட்டமிட்டபடி தொடர்ந்து வருவதை இன்றும் காணலாம்

பெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார். இதுபோன்ற சிலை வேறு எங்கும் இல்லை என்று நம்பப்படுகிறது. கருடாழ்வார் சந்நிதிச் சுவர்களின் சிற்பங்கள் வேலைப்பாடுமிக்கவை. இக்கோவிலில் கருடன் சன்னதி அமைந்துள்ள மண்டபங்கள் கருட மண்டபம் என்று அழைக்கப் படுகின்றன. இந்த கருட மண்டபம் ஒரு பிரம்மாண்டமான படைப்பு ஆகும். இம்மண்டத்தில் 212 தூண்கள் உள்ளன[5]. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் நறையூர் நம்பி கோவிலில் அமைந்துள்ள கல் கருடன் புகழ் பெற்றது. சென்னை சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் பெண் வடிவில் கருடன் அருள்பாலிக்கிறார்[6].

திருவள்ளூர் மாவட்டம் கோயில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல் அமர்ந்த நிலையில் பெருமாள் எதிரே உள்ளார். இது தவிர நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார் கருவறையின் பின்பக்கம் உள்ளார். [7]

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை தாலுக்கா தேரழுந்தூர் தேவாதிராஜன் கோவிலில் மூலவர் தேவராஜன் கருட விமானத்தின் கீழிருந்தவாறு அருள்பாலிக்கிறார். இந்தக் கருடவிமானம் தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்கு கருடனால் வழங்கப்பட்டதாகும். இது போல கர்னாடகா மாநிலத்தில், மாண்டியா மாவட்டத்தில் மைசூர் அருகே அமைந்துள்ள மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு அணிவிக்கப்படும் வைரமுடி கருடனால் வழங்கப்பட்டதாகும்

கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார். முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும். தன உடலில் அட்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார் பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன் புறம் நீட்டியவாறு இருப்பார்.

. ஆவணி மாதத்துச் சுக்கிலபட்ச பஞ்சமி பெருமாளின் வாகனமான கருடாழ்வார் அவதரித்த நன்னாளக கருதப்படுகிறது. இந்நாள் கருடபஞ்சமி என்று பெயர் பெற்றுள்ளது. பெருமாள் கோவில்களில் இந்த தினம் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது

 மேலும் கருடனுக்கு பாம்புகள் அடிமை ஆனதினால் நாக தோஷம் உள்ளவர்களும் கருட பஞ்சமியைக் கொண்டாடுகிறார்கள். அதே நாளில் சில இடங்களிலும் நாக பஞ்சமியையும் கொண்டாடுகிறார்கள்.

அன்றைக்கு, ஒன்பது நாகங்களான  அனந்தன், வாசுகி, தக்ஷகன், குளிகன், ஷங்கபாலன், மகா பத்மன், பத்மன், கேஷா மற்றும் கார்கோடகன் போன்ற நாக தேவதைகளை வழிபட்டு நாக தேவதைகளின் அருளைப் பெற மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

 

No comments:

Post a Comment