Thursday, March 31, 2016

THIRUKANNAPURAM



திருக்கண்ணபுரம்

 

தஞ்சை மாவட்டம், நன்னிலம்- நாகப்பட்டி னம் சாலையில், நன்னிலத்திலிருந்து 10 கி.மீ. தூரத்திலும், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி.மீ. தூரத்திலும் உள்ள- நாவுக்கரசர் முக்தியடைந்த தலமாகிய திருப்புகலூர் சந்திப்பிலிருந்து தெற்கில் 1.5 கி.மீ.-தூரத்தில் திருக்கண்ணபுரம் உள்ளது.

 
இறைவன்:நீலமேகப்பெருமாள்,நின்றகோலம் -

இன்னொரு பெயர்: சௌரிராஜப்பெருமாள்

இறைவி:கண்ணபுரநாயகி.

தேவியர்சன்னதி-ஸ்ரீதேவி,பூதேவி,ஆண்டாள்,பத்மினி

 
சன்ந்தியில் இந்த நீலமேகப் பெருமாள், கருவறைக்குள் கருடாழ்வாருக்கும் தண்டக மகரிஷிக்கும் விபீஷணனுக்கும்  தனது அருகிலேயே இருக்க இடமளித்துள்ளார். தண்டக மகரிஷி அரசனாயிருந்து தவம் செய்து பெருமாளை தரிசனம் கண்டவர்

 
(1) மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்பிரான்:

 வயது முதிர்ந்த இரண்டு பாகவதர்கள் (பிராமணரல்லாத வைணவர்கள்) திருக்கண்ண புரம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ள எழிலார்ந்த "நித்ய புஷ்கரணி' என்ற திருக்குளத் தில் நீராடிவிட்டு, படித்துறையில் அமர்ந்து திருமண் காப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண் டிருந்தனர்.

""என்ன சுவாமி, கிராமத்திலிருந்து போன வாரம் வந்ததாகக் கேள்விப்பட்டேன். போன வேலைகள் முடிந்துவிட்டதா? உயில் சாசனம் எழுதிவிட்டீர்களா?'' என்று கேட்டார் ஒருவர்.

 மற்றவர் சொன்னார்: ""எல்லாம் எழுதி முடித்துவிட்டேன். மகன் பெயரிலும் மனைவி பெயரிலும் உயில் எழுதிவிட்டேன். எனக்கு கடைசி நாள் வரை சாப்பாட்டிற்காக திருக் கண்ணபுரத்திற்கு  மாதம்தோறும் பணம் அனுப்பச் சொல்லிவிட்டேன். இனிமேல் நம்மாழ்வார் சொன்னபடி திருநாடு போகும் வரை திருக்கண்ணபுர வாசம்தானே!''

 
இந்த உரையாடல் எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக பட்டது. எனவே அந்த ஊரைச் சேர்ந்த நண்பர் ஜகத்ரட்சகனிடம் இதைப் பற்றிக் கேட்டேன். அவர் கொஞ்சம் விளக்கமாகவே சொன்னார். திருக்கண்ணபுரம் என்ற இந்த திவ்விய தேசத்தைப் பற்றி, நம்மாழ்வார் திருவாய் மொழியில் பலச்சுருதியுடன் 11 பாடல்கள் பாடியுள்ளார். அதில் 5-ஆம் பாடலைச் சொன்னார்.

 
சரணமாகும் தனதாளடைந்தார் கெல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்பிரான்
அரணமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்
தரணியாளன் தனதன்பர்க்கு அன்பாகுமே.'

 
எம்பெருமானிடம் சரணாகதி அடைபவர்க்கு வைகுந்த பதவி அளிப்பான் என்று ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருந்தாலும், திருக்கண்ண புரத்திலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களி லும்

உள்ள வைணவ பாகவதர்கள், தங்களின் வயது முதிர்ந்த காலத்தில் திருக்கண்ணபுரத்திற்கு வந்து தங்கி, நித்ய புஷ்கரணியில் நீராடி, திருக்கண்ணபுரப் பெருமானாகிய ஸ்ரீ சௌரி ராஜனை  காலையும் மாலையும் தொழுது வந்தால், நிச்சயம் தமக்கு வைகுந்தம் அருளுவான் என்று நம்மாழ்வார் மேற்கண்ட பாசுரத்தில் கூறியுள்ளதை உறுதியாக நம்புகிறார்கள். இன்றளவும் பல பாகவதர்கள் திருக்கண்ண புரத்தில் தங்கி, திருநாடு செல்ல ஆயத்தமாய் வந்து வணங்கி வாழ்கிறார்கள். சமீபத்தில் திருக்கண்ணபுரம் சென்றபோது, பல பாகவத பெருமக்கள் வடக்கு மடவளாகத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கள் வாழ்நாளைக் கழித்து, திருநாடு செல்வதைப் பெரும்பேறாகக் கருதி வாழ்ந்து வருவதைக் கண்டேன்.

 

இந்த ஊரில் வந்து வாழ்ந்து உயிர் பிரிய வேண்டும் என்று பக்தர்கள் விரும்பும் அந்த திருக்கண்ண புரத்தைப் பற்றிப் பார்க்கலாமே

 

(2) சூர சௌரி ஜனேஸ்வர

 

புகழ் பெற்ற வைணவ ஆச்சாரியரான ஸ்ரீபராசரபட்டர், ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம அத்தியாயத்தில் குறிப்பிடும் "சௌரி' என்னும் திருநாமம், "சௌரி கொண்டை' சாற்றிக் கொண்டு காட்சியளிக்கும்  இப்பெருமாளையே குறிக்கும் என்கிறார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் உள்ளசூர சௌரி ஜனேஸ்வரஎன்னும்   நாமாக்கள் இப்பெருமாளை குறிக்கின்றன.

 

(3) பிரயோக நிலையில் இருக்கும் சக்கரம்

 

எல்லா திருத்தலங்களிலும் பெருமாளின் வலத் திருக்கரத்தில் உள்ள சக்கரம் ஆள் காட்டி விரலில் அமர்ந்து சுழன்று கொண்டு இருப்பதுபோல பெருமாள் காட்சியளிப்பார். ஆனால் திருக்கண்ணபுரத்தில் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாளின் திருக்கரத்தில் உள்ள சக்கரம் பிரயோக நிலையில் இருக்கும். இதன் பொருள் என்னவென்றால், தனது அடியார்களுக்கு துன்பம் தருவோரை  அழிக்கத் தயாராக சக்கரத்தைப் பிரயோக நிலையில் வைத்திருப்பதாகக் கூறுகிறார் கள். இது போன்ற பிரயோக நிலையில் உள்ள சக்கரம் தரித்த பெருமாள், வேறு எந்த திருத்தலத்திலும் கிடையாது என்கின்றனர்.

 

(4) மங்களாசாசனம்

 

நூற்றெட்டு திவ்ய தேசங்களில், திருமங்கை ஆழ்வாருக்கு எட்டெழுத்து திவ்ய மந்திரத்தை ஓதிய திருத்தலமிது. இத்தலத்தை ஐந்து ஆழ்வார்கள் 129 பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர்.

 

நம்மாழ்வார் (11), குலசேகர ஆழ்வார் (11), திருமங்கை ஆழ்வார் (105), பெரியாழ்வார் (1), ஆண்டாள் (1) ஆகியோர் பாடிப் பரவியுள்ள தலம் இது.

 

எந்த வைணவத் தலத்திற்கும் இல்லாத மற்றொரு சிறப்பு இந்தத் தலத்திற்கு உண்டு. அது குலசேகர ஆழ்வார், பெருமாளை குழந்தையாக பாவித்து நீலாம்பரி ராகத்தில், "ராகவனே தாலேலோ' என்று அனுபவித்துப் பாடியுள்ளதாகும். அதில் ஒரு பாடலைப் பார்ப்போம்.

 

"மன்னுபுகழ் கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே

தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்

கன்னி நன் மாமதிள் புடைசூழ் கணபுரத்தென் கருமணியே

என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ.'

 

சக்கரவர்த்தித் திருமகனான ராமனை, குழந்தையாக பாவித்து நீலாம்பரி ராகத்தில் அமைந்த ஆழ்வார் பாசுரத்தை, அநேகமாக தமிழ்நாட்டில் பாடாத வித்வான்களோ, வித்வாம் சினிகளோ இருக்க முடியாது. இந்தத் தாலாட்டுப் பாடல், திருக்கண்ணபுரப் பெருமாளுக்கு மட்டுமே உண்டு. (உதாரணம்: கண்ணன் ஒரு கைக்குழந்தை - கண்கள் சொல்லும் பூங்கவிதை)

 

(5) விபீஷணாழ்வாருக்கு நடையழகு

 

ஒவ்வொரு அமாவாசையன்றும் பகல் 12 மணிக்கு திருக்கண்ணபுர உற்சவப் பெருமாளை, அழகிய அலங்காரங்களுடன் சிறிய சப்பரத்தில் நான்கு பேர் தூக்கிக் கொண்டு இசை முழங்க விபீஷணாழ்வாருக்கு நடையழகு காட்டும் நிகழ்ச்சி நடைபெறும். இது பக்தர்களுக்குப் பரவசமூட்டும் நிகழ்ச்சியாகும். அயோத்திக்குச் செல்லும் வழியில் விபீ ஷணாழ்வார் திருவரங்கம் வந்து பெருமாளை சேவிக்கிறார். அவருக்கு ஒரு குறை. பெருமாள் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கிறாரே! இவர்  நடையழகைக் காண இயலாதா என ஏங்கி, அதனையே ஒரு கோரிக்கையாக அரங்கனிடம் வைக்கிறார். அரங்கனும் அதற்குச் செவி சாய்த்து, "எமது நடையழகை, கீழைவீடாகிய திருக்கண்ண புரத்திற்கு வந்தால் காணலாம்' என்று அருளு கிறார். இதன் காரணமாக விபீஷணாழ்வாருக்கு பிராகாரத்தில் வடக்கு நோக்கிய சந்நிதி உண்டு. விபீஷணாழ்வாரின் சந்நிதிக்கு முன்,  அமாவாசையன்று நடையழகைக் காட்டி சேவை சாதிப்பது இன்றும் தொடர்ந்து நடைபெறும் ரம்மியமான நிகழ்ச்சியாகும். அன்று மக்கள் திரளாக வந்து சேவிப்பர்.

 

(6) மும்மூர்திகளாக தரிசனம் கொடுப்பவர்:

 

இத்தலத்தில் பெருமாள் மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார். வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் நாளில்ஸ்திதி காத்தருளும்நிலையில் மஹாவிஷ்ணுவாகவும், இரவு தர்ப்ப நாளங்களால் கட்டப்பட்டு தாமரைக்கு மத்தியில் படைப்பு நிலையில் பிரம்மாவாகவும்,  மறுநாள் விடியற்காலையில் ஒரு முகூர்த்த நேரம் அழிக்கும் ருத்ரனாகவும் (சிவனாகவும்)  காட்சியளிக்கிறார். 108 திவ்யதேசங்களில் இது எங்கும் இல்லாத பெருஞ்சிறப்பு

 

(7)  கோவில் அமைப்பு

 

இப்போது கோவிலுக்குள் செல்வோம். 95 அடி உயரமுள்ள கம்பீரமான ராஜ கோபுரத் திற்கு முன்னால், ஒன்பது படித்துறைகள் கொண்ட "நித்ய புஷ்கரணி' பாற்கடல் போலிருக்கும். பரந்து விரிந்த இந்தக் குளம் 450 அடி நீளமும் 415 அடி அகலமும் கொண்டது என்பதோடு, காவிரியின் உபநதிக்கரையில் உள்ளதால், நம்மாழ்வார் அருளியபடி "வண்டு பாடும் பொழில் சூழ் கண்ணபுரம்' என்பதற்  கேற்ப நீர் வளத்தால் வந்த நெல் வளமும், நெல் வளத்தால் உயர்ந்த வளமான வாழ்வும் பெற்றது திருக்கண்ணபுரம்.

 

கொடிமரம் கடந்தால் கருடமண்டபம், கண்ணாடியறை என்று சேவித்துக்கொண்டே அர்த்த மண்டபத்திற்கு வருவோம். திருக்கண்ண புரப் பெருமாளின் தங்க கருடசேவை மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த தங்க கருடனை மட்டும் இந்த அர்த்த மண்டபத்தில் காணலாம். சந்நிதி நோக்கித் திரும்பினால் திருமங்கையாழ்வாருக்கு காட்சியளித்தபடி, "கருவறைபோல் நின்றானை  கண்ணபுரத்து அம்மானை' என்றபடி, கருவறை யில் வானத்திற்கும் பூமிக்குமாய் காட்சி தரும் நெடுமால், நீலமேகன் என்னும் திருநாமம் உடையவர். ஆஜானுபாகுவாக உள்ள உற்சவர்  ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் மிகவும் அழகு வாய்ந்தவர். அவரை வடிவழகன் என்றே ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் கொண்டாடி மகிழ்கின்றனர். வடமொழியில் இவரை "ஸர் வாங்க சுந்தரன்' என்கின்றனர். அவரது உருவத் திலுள்ள ஒவ்வொரு  அங்கமும் அழகு வாய்ந்த தாமரை மலர்களாகப் போற்றப்படுகிறது.

 

"அடித்தலமும் தாமரையே அங்கை கணும்

பங்கயமே என்கின்றாளால்'     என்கிறார் மங்கை மன்னன்.

 

மற்ற திவ்ய தேசப் பெருமாள்களின் வலத் திருக்கரம் அபய ஹஸ்தமாக அதாவது ஆபத்திற்கு உதவும் நிலையில் இருக்கும். ஆனால் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாளின் வலத் திருக்கரம் நம்மிடம்  கேட்கும் பாவனையில் இருக்கும். தன்னை தரிசிக்க வரும் அன்பர்களின் அறியாமையை அவன் கேட்டு வாங்கிக்கொண்டு, அவனது அருளைத் தருகிறான் என்று இதற்குப் பொருள் கூறுவர்.



மேலும் இந்தப் பெருமாளின் வலக்கண் புருவத்தின்மேல் ஒரு வடு உள்ளது. இந்த வடு பெருமாளின் அழகிற்கு அழகு கூட்டுவதாக இருந்தாலும் அதற்கொரு பின்னணி இருப்பதையும்  அறியலாம்.

 

கிழக்கு மேற்காக 316 அடியும், வடக்குத் தெற்காக 210 அடியும் கொண்ட இக்கோவிலுக்கு இப்போது ஒரு மதிள் மட்டுமே சுற்றியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன், ஏழு மதிள்கள் சூழ  இக்கோவில் இருந்ததெனவும்; பிற சமயத்தினர் மதிள்களை உடைத்தனர் என்றும்; இதனைக் கண்ட வைணவ பக்தர் ஒருவர் பெருமாளிடம் முறையிட, பெருமாள் மௌனம் சாதித்தாராம். பொறுக்க முடியாத அந்த பாகவதர் தனது கையிலிருந்த தாளத்தைப் பெருமாள்மீது வீசி எறிய, அது அவரது வலக்கண் புருவத்தில் பட்டு வடுவாகிவிட்டது. பின்னர் மௌனம் கலைத்த  எம்பெருமாள் எதிரிகளை அழித்துக் காப்பாற்றி னார் என்று ஒரு குறிப்பு கூறுகிறது.

 

இந்தத் திருத்தலத்தில் ஆண்டு முழுவதும் திருவிழாக்களும் உற்சவங்களும் நடைபெற் றாலும், மாசி மகத்தன்று இந்த ஸ்ரீசௌரிராஜப் பெருமாளுக்கு நடைபெறும் உற்சவம் எங்கும் காண  முடியாத ஒரு வைபவமாகும். மற்ற திவ்ய தேசப் பெருமாள்கள் ஊர்வலமாகத் தமது ஊருக்குள்ளோ அல்லது சில கி.மீ. தூரமுள்ள இடங்களுக்கோ சேவை சாதிக்கப் போவதுண்டு. ஆனால்  ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் ஒரு மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்தின் கடற்கரைக்கு கருட வாகனத்தில் செல்வது மிகவும் பிரசித்தமான விழாவாகும்.

 

நாம் ஏற்கெனவே பார்த்தபடி உபரிசரவஸு மன்னனுக்கு சேவை சாதித்தார் ஸ்ரீ சௌரிராஜ பெருமாள். அவருக்கு தனது மகளை அவர் விரும்பியபடி மணம் முடித்து வைத்தான் மன்னன். அவன்  திருமலைராயன் பட்டினம் என்ற நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவனானதால், மீனவ குப்பத்தைச் சேர்ந்த அவன் மகளை வலய நாச்சியார் என்றும்; பத்மினி நாச்சியார் என்றும் அழைக்கின்றனர். இந்த நாச்சியாரை மணம் கொண்டபடியால், ஆண்டுக்கொரு முறை மாசி மகத்தன்று திருக்கணபுரத்திலிருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு, சுமார் 15 கி.மீ. தூரத்திற்கு (பௌர்ணமி அன்று) கருடவாகனத்தில் அதிகாலை மூன்று மணி அளவில் புறப்பட்டு, புதுக்கடை குருவாடி, திருமருகல், சீயாத்த மங்கை, திட்டச்சேரி, கொந்தகை வழியாகத் திருமலைராயன் பட்டினம் பிரவேசம் செய்கிறார். மீனவ குப்பத்து மக்களால் "மாப்பிள்ளை சாமி' என்று கொண்டாடப்படுகிறார். பட்டுத் துணிகள் சார்த்தப்பட்டு ஆராதனையும் செய்யப் படுகிறது. அன்று மாலை சுற்றுப்புறத்திலுள்ள வைணவக் கோவில்களிலிருந்து ஆறு கருட வானகங்களில் வந்திடும் பெருமாள்களுக்கும் தீர்த்தவாரி நடந்து, மறுநாள் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் திருக்கண்ணபுரம் திரும்புகிறார். இந்தத் திருவிழாவிற்காக பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் பெருமாளின் பயணத்தில் பின் தொடர்ந்து, வழிநெடுகிலும் பட்டு சாற்றிப் பரவசப்படுகின்றனர்.

 

திருக்கண்ணபுரம் பூலோகத்து விண்ணகரம் என்பதால், இத்திருக்கோவிலில் பரமபத வாசல் கிடையாது. இவனது திருக்கோவிலே பரமபத மானதால் மற்ற வைணவக் கோவில்களில் உள்ளதுபோல் வைகுண்ட வாசல் இங்கு இல்லை.

 

தாயாருக்கும் (கண்ணபுர நாயகி) ஆண்டாளுக்கும் தனிச் சந்நிதிகள் உண்டு.

 

(8) முனியதரையன் பொங்கல்

 

அரங்கன் கோவில் அரவணை, திருமலை லட்டு போல, பெருமாள் கோவிலென்றால் பிரசாதங்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. திருக்கண்ணபுரக் கோவில் பிரசாதத்தைப் பற்றியும் சொல்ல வேண்டுமல்லவா?

 

சோழ மன்னனின்கீழ் ஆண்டு வந்த "முனியதரையன்' என்ற சிற்றரசனும் அவனது மனைவி விகாதிபோகம் அம்மையாரும் இந்தப் பெருமாளிடத்தில் அளவு கடந்த பக்தி கொண்டவர்கள். ஒவ்வொரு நாளும் இரவு அர்த்தஜாம பூஜையில் விகாதிபோகம் அம்மையார் பொங்கல் செய்து ஸ்ரீ சௌரிராஜப் பெருமாளுக்குப் படைப்பாராம். அந்தப் பொங்கலை பெருமாள் விரும்பி  உண்பாராம். அந்தப் பொங்கல் தயாரிக்கும் விகிதாச்சாரம் என்னவென்றால், 5 நாழிகை அரிசி, 3 நாழிகை (தோல் நீக்காமல் உடைக்கப்பட்ட) பச்சைப் பருப்பு, 2 நாழிகை நெய் சேர்த்துச் செய்யப்படுவது. இந்தப் பொங்கல் வித்தியாசமான ருசியோடு இருக்கும். பக்தியோடு படைக்கப்பட்ட இந்த அருமையான பொங்கலை பெருமாள் விரும்பி ஏற்றுக் கொண்டதில் வியப்பில்லையல்லவா. இதற்காக முனியதரையன் என்ற அந்த சிற்றரசன் சில ஏக்கர் நிலங்களைக் கோவிலுக்கு மான்யமாகக் கொடுத்து, தினமும் அர்த்த ஜாமத்தில் பெருமாளுக்குப் படைத்து,

பின்னர் அதை 16 பங்குகளாகச் செய்து, இரவில் வரும் சேவார்த்திகளுக்கு இலவசமாக அளித்துவரக் கட்டளையிட்டான்... இந்தப் பொங்கலுக்கு "முனியதரையன் பொங்கல்' என்றே பெயர். இந்த முனியதரையனுக்கு கோவிலுள் இடப்புறத்தில் ஒரு சிறு சந்நிதி உள்ளது. இப்போது இந்தப் பொங்கல் விற்பனை செய்யப்படுகிறது. உற்சவ, திருவிழாக் காலங்களில் இந்தப் பொங்கலுக்கு முன்கூட்டியே கோவில் நிர்வாகிகளிடம் சொல்லி விடுவார்கள் என்றால் இந்தப் பொங்கலின் சுவை எப்படி இருக்கும் பாருங்கள்!

 

(9) நவக்கிரக பிரதிஷ்டை

 

இந்திரன் இத்தலத்திற்கு வந்து நவக்கிரக பிரதிஷ்டை செய்து பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் இராஜகோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்குப்பார்த்தப்படி இருக்கின்றது. இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12  இராசிகளுடன் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும்.

 

 

 

(10) புராண வரலாறு

 

இத்தலத்திற்கு புராண, சரித்திர வரலாறுகள் பல உண்டு. பத்ம புராணத்தில் திருக்கண்ணபுரம் கிருஷ்ணாரண்யம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் புராண வரலாற்றைப் பார்க்கலாம். உபரிசரவஸு என்ற மன்னன் தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் வெற்றி பெற உதவினான். யுத்தம் முடிந்து திரும்பும் வழியில், மன்னனுக்கு தாகம் எடுத்ததால், கிருஷ்ணா ரண்யம் என்ற இன்றைய திருக்கண்ண புரத்திற்கு வந்தான். நீர் நிலையைத் தேடிப் போனபோது, வழியில் சாமைப்பயிர் (தினை) ஏராளமாக இருந்ததால், வழி ஏற்பாடு செய்ய வேண்டி, பயிர்களை வெட்டினான். ஆனால் பலரின் கூக்குரல் கேட்க, மன்னன் திடுக் கிட்டுப் போனான். கிருஷ்ணாரண்யத்தில் திருமாலை நோக்கிப் பல முனிவர்கள் தவம் செய்தனர். நெடுநாள் தவத்தால் அவர்களின் உடல் மெலிந்து, சாமைப்பயிர் போல் ஒடுங்கி வித்தியாசம் தெரியாமல் இருந்ததால், மன்னன் சாமைப் பயிரை வெட்டி எறிந்த போது பல முனிவர்களும் வெட்டுப்பட்டுக் கதறினார்கள். முனிவர்களின் கூக்குரலைக் கேட்ட எம்பெருமான், பதினாறு வயது வாலிபனாக வந்து உபரிசரவஸு மன்னனை எதிர்த்தார். மன்னன் தீவிரமாகப் போர் புரிந்தும் அவனது படை பெருமானால் அழிக்கப்பட்டது. தன்னுடன் யுத்தம் செய்வது மனிதனல்ல; எம்பெருமானே என்பதை அறிந்த உபரிசரவஸு பெருமாளின் திருவடி யில் வீழ்ந்து வணங்கினான். உபரிசரவஸு மன்னன் சரணாகதி அடைந்ததைக் கண்டு, மன்னித்து அவனுக்கு திருக்கண்ணபுரத்தில் ஸ்ரீசௌரிராஜப் பெருமாளாகக் காட்சி யளித்தார்.

 

ஆனால் சௌரி முடியுடன் காட்சியளித் தார் என்பதற்கான காரணங்கள் பத்ம புராணத்தில் குறிப்பிடவில்லை

 

(11) தன் அர்ச்சகர் பக்தனுக்காக சௌரி முடியுடன் காட்சி அளித்ததால் சௌரி ராஜன் என்று சிறப்பு பெயர்
 

இத்திருத்தலத்தைச் சுற்றி ஐந்து கி.மீ. சுற்றளவிற்குள் நாவுக்கரசர் முக்தி பெற்ற திருப்புகலூர், பிள்ளைக்கறி சமைத்தளித்த சிறுத்தொண்ட நாயனாரின் திருச்செங்காட் டங்குடி, செட்டிபிள்ளை,செட்டிப்பெண் திருமணத்தை நடத்திய ஞானசம்பந்தர் பாடிய திருமருகல் ஆகிய சிவத்தலங்கள் அமைந்திருப் பதும் ஒரு சிறப்பாகும்.

 கண்ணபுரம் பெருமாளைத் தொழுதால் எல்லா நன்மைகளையும் நமக்கருள்வார் என்பதில் ஐயமேதும் இல்லை!

 
 

No comments:

Post a Comment