Tuesday, November 29, 2011

பற்பொடிகாரர்

 
அந்த காலத்திலே ஒரு தோசை 15 பைசா” என்று நீங்கள் இன்று யாரிடமோ கூறுகிறீர்கள் என்றால் இப்பொது உங்களுக்கு சுமார் 3 கழுதை வயதாயிருக்கும் என்று சொல்லிவிடலாம்.  ஒரு கழுதையின் சராசரி வயது 20 என்று எங்கேயோ படித்த ஞாபகம்.   இந்த காலகட்டத்திற்குள் நீங்களும் இருப்பவர் என்றால்  நான் சொல்லும் இந்த ஆசாமியை நீங்களும் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் ஒரு சில நிபந்தனைகள். உங்கள் பள்ளிக்கூட நாட்களில் நீங்கள் சென்னை வாசியாக இருந்திருக்க வேண்டும்.  அடிக்கடி கடற்கரை பக்கம் சென்று வருபவராக இருக்க வேண்டும்.

மாலை நாலு மணி அளவில் வெயில் அவ்வளவாக குறைந்திருக்காது.  ஆனால் கடற்கரை பக்கம் சுகமாக இருக்கும். அதிலும்  திருவல்லிக்கேணி கடற்கரை பகுதி கொஞ்சம் உற்சாகமாக இருக்கும். பெசன்ட் நகர் பீச் எல்லாம் அப்போது இல்லை . எழிலகம் தொடங்கி விவேகான்ந்தர் இல்லம் வரை தான் நடமாட்டம் எல்லாம். அதை தாண்டினால் கண்ணுக்கெட்டிய தூரம் மணல் தான். அந்த பகுதிகளில்ஆட்களையே அதிகம் பார்க்க முடியாது.

தற்போது கண்ணகி சிலை இருந்த பீச் பகுதி தான்  நம் ஆசாமி ராஜரத்தினம் அவர்களின் ராஜ்ஜியம்.  இந்த வட்டத்தில் அவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது.  சாலையிலிருந்து ஒரு சுமார் ஐம்பது அடி தள்ளி மணற்பகுதியில் அவரைச் சுற்றி சுமார் நூறு-இருநூறு பேர் இருப்பார்கள்.  குள்ளமான சரீரம். கர கரப்பான குரல். காவி பற்கள். வயது சுமார் 40 இருக்கும். கொஞ்சம் பழுப்பேறிய அழுக்கு வேட்டி சட்டை.  அருகில் உதவிக்கு 2 பேர். கொஞ்சம் கோணிப்பைகள்.  அதில் நிறைய பொட்டலங்கள்.  என்ன பொட்டலங்கள் என்று கேட்கிறீர்களா?  எல்லாம் பல்பொடி தான்.  அப்போதைய கோபால். பயோரியா போன்ற பல்பொடிகளுக்கு நடுவே அதிக விளம்பரம் இல்லாமல் விற்றுக்கொண்டிருக்கும் ஒரு சிறிய பல்பொடி தயாரிப்பாளர் இவர். 

தினமும் மாலை நாலு மணிக்கு மனிதர் ஆஜராகிவிடுவார்.  5-6 பல்பொடி பைகள். உதவியாட்கள் 2-3 பேர், ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு, 2 சைக்கிள்கள். இவ்வளவுதான் கடை.  இவரைப்பற்றி தெரிந்தவர்களோ அல்லது இவர் கூட்டிக்கொண்டு வந்தவரோ 2-3 பேர் தான்  முதலில் அங்கு இருப்பார்கள்.  மனிதர் தன் சட்டைப் பையில் இருந்து ஒரு சிப்ளா கட்டையை எடுப்பார்.  தன் கர கர குரலில் பாட ஆரம்பிப்பார்.




ஆனை அடியைப் போல  அதிரசங்கள் ஆயிரம்
பூனை அடியைப் பொல பணியாரங்கள் ஆயிரம்
எருமை அடியைப் போல எள்ளடைகள் ஆயிரம்

வடக்கே குலை சாஞ்ச வாழைக்கன்னு ஆயிரம்
தெற்கே குலை சாஞ்ச தென்ன்ங்கன்னு ஆயிரம்
கொடியிலே பழுத்த பழம் கொட்டை திராட்சை ஆயிரம்
கொம்பிலே பழுத்த பழம் கொய்யாப்பழம் ஆயிரம்

இத்தனையும் நான் படைச்சேனுங்கோ
என் சாலை வினாயகருக்கு சப்பாணி பிள்ளையார்க்கு
எருக்கம்பூவை நான் மறந்தேனுங்கோ.”

என்று பாட ஆரம்பிக்க, கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேரும். கொஞ்சம் அரசியல் பேசுவார், அப்போது வெளிவந்த திரைப்படம் பார்த்துவிட்டு தன் கருத்து சொல்வார்.  திருவிளையாட்ல்ஒருநாள் போதுமா பாடலை சிலாகித்து ஒரு பத்து நிமிடம் பேசுவார்.  கூட்டம் இன்னும் அதிகமாகும்.  ரொம்ப உற்சாகமாகி விடுவார்

சபையோரே பெரியோரே
சபையில் நிற்கிற வாலிபரே
இலக்கணம் படிச்சவரே
என்னிலும் உகந்தவரே
தாடி நரைச்சவரே சதுரவட்டை ஆனவரே
எல்லோருக்கும் வந்தனம்
அடே தம்பி அள்ளி குடுறா சந்தனம்

என்று பாட கூடி நிற்பவர்கள் மிகவும் ரசித்து சிரிப்பார்கள்.

தன்னிச்சைப்படி இட்டு கட்டி பாடுவார்.

மேரா ஜாலி
நானும் புத்திசாலி
நீயும் புத்திசாலி
எனக்கெதிரே பாட வந்த
சூலக்கடை நடேசா நீ
ஒரே குத்தில காலி
அட துட்டு இருக்கிற அய்யாமாரே
பண்ணுங்கய்யா கேலி

காஞ்சு போன செங்கல்பட்டுலே
காலணாக்கு ஒரு பரோட்டா
பரோட்டா ன்னா ரொட்டி
எடுத்தேன்னா லட்டி தம்பி
முட்டிக்கு முட்டி தட்டி
அட காத்திருந்தான் செட்டி

பீச்சுன்னா கடலு
பகவான் கொடுத்தான் பாரு
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
எண் ஜாணு உடலு
அட எங்கடா வாங்கினே மெடலு

மெடலு ன்னா தங்கம்
என் குரு பேரு சிங்கம்
இத்தனை பேர் நடுவினிலே
நான் ஆக மாட்டேன் பங்கம்

இப்படி பாட்டு எப்படியோ போகும்
சுமார் ஒரு ஒரு மணி நேரம் இப்படி விளையாட்டாக் பாடியும் திரை விமர்சனம் செய்தும் சுற்றி இருக்கும் கூட்ட்த்தைக் கவ்ர்ந்து விடுவார்.  முடிவில் மக்களை பல்பொடி வாங்கச் சொல்வார்.

‘இலங்கை மலேசியா சிங்கப்பூர் முதலிய நாடுகளில் பற்களை முத்துப்போல் பிரகாசிக்க்ச் செய்வது கோபால் பல்பொடி’ , பழமையான நஞ்சன்கூடு பல்பொடி, 1291 ட்ரேட் மார்க் பயோரியா பல்பொடி போன்ற அடித்தட்டு ஜாம்பவான்களுக்கு நடுவே ராஜரத்தினத்தின் இருபத்தைந்து  நயாபைசா  பல்பொடியும் வருடக்கணக்காக நிலை நின்றது என்றால் அதற்கு  ராஜரத்தினம் தான் காரணம்.  

அந்த பல்பொடியின் நிறம் தரம் குணம் பற்றி  எல்லாம் நீங்கள் என்னிடம் கேட்க்கூடாது. அதை நீங்கள் நிஜாம் பாக்கு முதலாளியிடம் தான் கேட்கவேண்டும். (அவர் உங்களை அடிக்க வந்தால் தயவு செய்து என்னிட ம் வர வேண்டாம். நீங்களே பல பல வாலிப வயோதிக அன்பர் வேடங்கள் போட்டு மறைந்து கொள்ளலாம்.  நிஜாம் பாக்கு மன்னரும் இதைத்தான் பல வருடங்களாக்ச் செய்து வருகிறார்).  

ராஜரத்தினம் அன்று செய்த அதே பற்பொடி விளம்பரத்தை புதிய பாணியில் இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன.  சிறுவனை பல் துலக்க செய்ய  SRK ராவணன் வேடம் போடுகிறார். எங்கோ வழியில் செல்லும்  MBA  அதிகாரியை வழிமறித்து பற்பசை வாங்கச் சொல்லுகிறார்  பல் டாக்டர் . இப்போ காலையில் தான் பல் துலக்கினேன் என்றாலும் விடுவதாய் இல்லை.   யாரோ ஒருவரின் சொத்தை பல் காட்டி  உன்னுடையது என்று பயமுறுத்துகிறார். ஒரு வாரம் கழித்து நல்ல பல் காட்டி சமாதானப்படுத்துகிறார்.   ஜில் தண்ணீர் குடிக்கச் செய்து பற்கூச்சம் ஏற்படுத்தி பசை தடவி கூச்சம் மறக்க ச்செய்து  இந்த பற்பசை தான் கூச்சம் போக்கியதுஎன கூசாமல் கூறுகிறார்.   “எங்கே ஜோரா ஒரு தடவை கை தட்டுங்கோ” என்று கூறுவது போல்  குழந்தைகளை பற்பசை பெயர் சொல்ல பழக்குகிறார்.  
அன்று ஒரு ரூபாய் செலவில் செய்த உத்தி இன்று ஆயிரம் கோடி ரூபாயில் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment